Thursday, July 6, 2017

மழை வெளி..

மழை கொஞ்சம் கூட
சலனமே இல்லாமல் பொழிகிறது
என்னுள், வெளியே வெறும் 
சப்தம் மட்டும்.  


தொடாமல் விட்ட இடம்
படாதப் பட்ட இடம்
வெயில் படாத இடம்
மறைக்க முடியாத இடம்
வெள்ளந்தியாக
ஏதோ ஓரிடத்தில்
தடமில்லாமல் போனால்
அவள்.   

சற்றேனும் குளிர்க்காற்று
பட்டால் உடனே பொழிந்துவிட
எத்தனிப்போடு இருக்கும்
கரும் மேகம்போல்
கோபத்தில் கண்களில்
இருக்கும் நீர்த்துளிகள் .

காரணம் கரையைக் 
கடந்து
சென்றுவிட்டது என்பதற்காக 
அணைப்பை
உடனேவா விலக்கிக் 
கொள்ள முடியும்.

முழுதாக நனைந்த பின்
முக்காடு எதற்கு என்பது
குடைக்கு பொருந்தாது.

அனைவரையும் நிறுத்தி
வைக்கும் சிவப்பு விளக்குக்கு
காரணம் விளங்குவதில்லை
இவர்கள் எதைப் பிடிக்க 
ஓடுகிறார்கள் என்று.

பெரிய பாதிப்போ
சிறிய பாதிப்போ
பாதிப்பிற்கான சுவை
மட்டும் கசப்பு என்பது
மென்மையான உண்மை. 

ஏகாந்த ஓசை ‬
‪என்பது ‬
‪என்னைப் பொறுத்தவரை‬
‪நீ வரும் ஓசை.

காற்றில் அலையும் 
மன்னிப்புகள் செவிகளைச் 
சேராமல் .. பாதத்தில் 
மிதிப்படுகின்றன.

குழந்தைகள் பொம்மையை 
உயிர் உள்ளதைப்போலவும்.. 
உயிர்  உள்ளவர்களை 
பொம்மையைப்போலவும்          

பாவிக்கின்றார்கள்.      
   
  

அனைவரும் மறந்துவிடுகின்றனர்  
அல்லது மறந்துவிட்டதுபோல் 
நடிக்கின்றனர்.. தன் முறையும் 
வரும் என்பதை.

கனவுகள் வராத
நாளில் உன் நினைவில்
இருக்கும் இரவு
தரும் அத்தனை
பகல்களை.

புதுப் புத்தகத்தின் வாசம் போல்  
உன் வாசமும் ஓர் பூரிப்பு உண்டாக்கும்.

வராத கனவுகளும்
வந்துவிட்ட கனவுகளும்
உன்னுடையது.

மனிதன் செய்த 
அத்தனை வன்முறைக்கும்
ஒரே தண்டனை
மழையற்றுப்போனது.

மறுதலிக்க வார்த்தையின்றி
மெளனமானேன்..
அதுவே போதுமென..
முத்த இனிப்பு வழங்கினாய்.

விரும்பி சொன்ன
பொய்களில் நீயும் உண்டு.

மல்லிகை வாசம்
இழந்துப் போகும்
உன் மேல் படர்ந்தால்.

விடியாமல் விட்ட
இரவெல்லாம்
உன் மடியோடு
கிடந்த கணங்கள்.

பொய்துப்போன மழைப்போல்
என்னை அணைக்காமல் விட்டாய்.

ஏதோ ஓர் சாரல்
நினைவுப் படுத்தும்
உன் மழயை.

மல்லிகை வாசம்
இழந்துப் போகும்
உன் மேல் படர்ந்தால்.

விடியாமல் விட்ட
இரவெல்லாம்
உன் மடியோடு
கிடந்த கணங்கள்.

இரவுகளின் தவிப்புகள்
பகலில் நீர்த்துப்போய்விடுகிறது.

பிடிக்காத விஷயங்களை
பிடித்த இரவில்
தொடுக்காதீர்கள்
தொலையட்டும் காற்றில்.

உன் மேல் விழுவதற்காக  
எத்தனை முறை
வேண்டுமானாலும் எழுவேன்.

வெட்கம் தின்று
உன்னை வளர்த்தேன்
என்னுள்,
கொஞ்சம் கூட
மீதம் கிடைக்கவில்லை
நான்.

கரையாத பனித்துளி
காத்திருந்தது
இதழின் மேல்
விழுந்துக் கரைய.

புதிதாய் பூப்படைந்து
நாணம் உற்று
ஓலைக் குடிசைக்குள்
ஒளிந்திருப்பதைப் போன்று
மறைந்திருந்தது
அம்மலர் இலைகளின்னுடே.

எவ்வுளவு நேரம்தான்
வெட்கத்தை உடுத்துவது..என்று உன்னை
உடுத்தத் தொடங்கினேன்.

தொலைந்துப் போன
புத்தகம்
தேடி கிடைக்கும்போது வரும்
மகிழ்ச்சியைப்போல்
சில ஞாபக இடுக்கில்
இருந்து வெளிவரும்
உன் நினைவுகள்
எங்கோ ஓர்
தேவாலயத்தில்
ஒலிக்கும் மணியின்
ஓசை மெலியதாக
செவிகளில் விழுவதுப்போல்
என்னுள் ஏதோ ஓர்
இடத்தில் உன்
அதிர்வு கேட்டுக்கொண்டே
இருக்கும்.

மழை முடிந்து
நேரங்கள் ஆனப்பின்னும்
இலைகளில் தங்கும்
நீர்ப்போல்
உன் நினைவுகள் தங்கியிருக்கிறது
நீ வந்தவுடன்
ஏதோ ஒரு சிறுவன்
கிளைகளை உலுக்குவதுப்போல்
முழுவதுமாக விழுந்துவிடும்
உன்மேல்.

பள்ளி நாட்கள் முடிந்து
முழு ஆண்டு
விடுமுறை நோக்கி
வீட்டிற்கு பயணிக்கும்
குதூகலம் இருந்தது
உன்னை காண
ஆனால், நீயோ
கடைசி பேரூந்தை தவறவிட்ட
பயணியாக இன்னும்
வந்து சேரவில்லை.

தனித்த அறையில்
திடீரென யாரோ வந்து
கதவுடைவதுப் போல் தட்டும்
பதட்டத்தை தந்து என்னை
எழுப்புகிறது உன் நினைவுகள்.

கல்லை குடைந்து
கடவுளையே வடிப்பவனுக்கும்
வறுமையையே பரிசளித்தார்
கடவுள்.

என் மகள் என்னை
நெற்றியில் முத்தமிடும்
கணம் தாயாகிறாள்.

பூட்டி வைத்த
கனவுகளின் திறவுகோலைத்
தொலைத்துவிட்டேன்.

நாத்திகனுக்கு சிரமம்
இல்லை கடவுள்யில்லை என்று
வாழ்ந்துவிடுவான்
ஆத்திகன்தான் பாவம்
இருந்தும் இல்லாமல் இருப்பான்.

ஊளறாமல் விட்ட
உண்மைகள் ரகசியங்களாயின.

பிரிவினைகளின் வாதம்
ஒன்றுதான் அது ரணம்.

பறவைகளின் குதூகலத்தில் தொடங்கி
கொசுக்களின் இறுதிசடங்கில் முடிகிறது நாட்கள்.