Tuesday, January 9, 2018

முத்தம்

 திகட்டாத முத்தம் என்பது

தரப்படாத முத்தம்.


முத்தத்தின் ஆழம்பார்க்க சென்று
முழுவதுமாக விழுந்துவிடுவதெல்லாம்
இன்ப வலிகள். 


குழந்தைகளிடம் தீரா பசியாக
எப்பொழுதும் இருந்துக்கொண்டே
இருக்கும் ஓர் முத்தமெனும்.

உலகத்தையே இலகுவாக்கித்தரும்
குழந்தையின் ஒற்றை முத்தம்.

முத்தப்பெருவெளியில்
மொத்தமாக தொலைந்து 
போதல் ஓர் அலாதி. 

முத்த முடிச்சுகள் அவிழ்க்கையில்
உயிர் பிணைந்து போகும்.

கணவன் மனைவியின்
நெற்றியில்  கொடுக்கப்படும்
முத்தம் காமமற்றது.

அன்பை தெரியப்படுத்துதல் 
ஒரு வழி முத்தத்தின் ‘வாயி’லாக.

ஆதாமின் காதலும்
ஒரு முத்தத்திலிருந்தே
தொடங்கி இருக்கும்.

உதட்டில் பெறப்படும் முத்ததில்
சற்றும் சளைத்தல்ல
கன்னத்தில் பெறப்படும் 
முத்தம் தொடக்கப்புள்ளியில்.

சொல்லாத காதலை ஒரு
முத்தம் உணர்த்தும்.
அறியாத காமத்தை ஒரு
முத்தம் வெளிக்கொணறும்.

முதலும் முடிவும் முத்தமே.

முத்தத்தை ஆடையாக
தரிக்கையில் 
வெட்கம் போர்வைக்குள்
உறங்கும்.

என்னை எடுத்துக்கொண்டு
உன்னை தருகிறாய் 
ஒற்றை முத்தத்தில். 

விலகாத பார்வை உனது
எதிர்க்கொள்ள முடியாமல்
விழி முடி உன்னை 
விழுங்குகிறேன்
முத்தத்தில்.