Wednesday, March 6, 2019

மானசரோவர்

மானசரோவர் நாவல் வாசித்ததில் கிடைத்தது சில பதில்கள் . கிடைக்காமல் போனது முடிச்சுகளின் தொடக்கம் அதாவது,  வாழ்வின் முடிச்சுகள். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் தர்க்கம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது . கூடாது என்பதை விட முடியாது என்பதே சரி. இந்த வாழ்க்கை நம்மை இட்டுச் செல்லும் இடம்தான் எது . எதுவுமே இல்லை.  யாருமற்ற ஒரு வானாந்திரம். பட்சிகள் தன் கூடு இருக்கும் வரை அங்கே திரும்பிக் கொண்டிருக்கும்.

மகிழ்ச்சி, ஆசுவாசம், அன்பு, அற்பம், கொண்டாட்டம், பழிவாங்கல், துரோகம்,  வன்மம், பரிதவிப்பு, என்று எண்ணற்ற உணர்வுகள் மற்றும் படி நிலைகள். இறுதியில் வந்து நிற்குமிடம் நமக்கே நமக்கான வெற்றிடம்.

இதில் யாரைக் கொண்டு பூர்த்தி செய்வது?. எதைக் கொண்டு பூர்த்தி செய்வது?. அப்படியே செய்தாலும் அவை எவ்வளவு தூரம் நம்முடன் பயணப்படும்? கமல் ஒரு திரைப்படத்தில் சொல்வது கேள்விக் கேட்பது சுலபம். அதற்கான பதில்கள் என்றுமே நிர்மூலமாகத்தான் இருக்கும். எதையும் கேள்விக்குட்படுத்தாது ஏற்கும் மனநிலை  அமைந்தால் நல்லது அது முட்டாளாக இல்லை பக்குவத்தின் பெயரால். இந்த நாவலில் வரும் கோபால் போல். ஆனால், நாமோ சத்தியன் போல்தான் தடுமாறுகிறோம். இரு நண்பர்களின் உறவும் அவர்களின் வாழ்க்கையே இந்நாவல்.

தர்க்கம் என்ற வரையுரையே சமயங்களில் மிக முட்டாள்தனமானது. அதற்காக, எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம் என்று பொருளில்லை. எப்படி ஆட்க்கொள்ளப் படுகிறோம் இவ்வாழ்க்கையின் புழுதியில் என்பதே நிதர்சனம்.  கோப்பால் போல் எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்க்கை அத்தனை இலகுவானதே. ஆனால், அது முடியாது என்பதே முரண். நம் மனநிலையை ஒத்ததுபோல் சத்தியன் நாவல் முழுவதும் திண்டாடுகிறார். பகுத்தறிந்து வாழ வேண்டும் என்பதே அவா. உணர்வுகள் இடிந்த கட்டிடம் போல் நம்மேல் குவியும் பொழுது சுவாசிக்கவே திணறுகிறோம். இதில் எங்கு வாழ்வது? வாழ்க்கை ஒரு ஞான சூனியம். அனுபவமே ஞானம்.

#மானசரோவர்