Sunday, January 5, 2020

கன்னி

#கன்னி ஒரு வாசிப்பனுபவம்.

கன்னி நாவல் படித்து முடித்த பொழுது எழுந்த மன உணர்வு ஓர் உறைநிலை. முடித்த பின் மட்டும் இல்லை இடையிடையே அச்சொற்கள் நம்மைக் கூட்டிச் சென்று கடலின் ஆழத்தில் நிறுத்தி நிதானிக்கச் செய்தது. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். ஆனால், இந்நாவலைப் படிக்கையில் வியப்பின் உச்சியைத் தலை கோதினேன்.

நாவல் முழுக்க முழுக்க கவிதைகளால் ஆனது. சந்தன பாண்டிக்கும் அமலாவிற்கும் இருக்கும் பெரும் காதலைச் சொற்களின் மூலம் போர் தொடுத்து மீட்கப் போராடியிருப்பார். கவிதையின் நாசி நாவல் முழுவதும். அமலா பாண்டிக்கு ஒரு வகையில் அக்கா முறையென்பதால் ஒரு நிலைக்கு மேல் நெருங்க முடியாமல் தவிப்பது. அவளின் அழகு, வருகை, செய்கை என்று ஒவ்வொன்றையும் கவிதை படுத்தி அவளாகவே வாழும் பாண்டி துண்டிலில் சிக்குண்ட மீனாகத் துள்ளுகிறான்.

கடல் இந்நாவலின் தேகம் மற்றும் மஞ்சள் நிறம் இந்நாவலின் வண்ணம். மனம் பிறழ்ந்த பாண்டியின் உருவகங்கள் மற்றும் காட்சிகள் பெரும்பாலும் கடலும், மஞ்சள் வண்ணம் மற்றும் ஒரு நாய். மனம் பிறழ்ந்தவர்களின் மன நிலையை இதுதான் என நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு அதனைத் தருவித்திருக்கிறார். பாண்டி தானே மணலில் சிக்கிக்கொண்டு மூச்சு திணறுவது, காதலியின் மேல் அமரும் வண்ணத்துப் பூச்சியை விரட்டுவது, அவள் மேல் விழும் முதல் மழைத் துளியை வடிப்பதும், அவளைப் பார்த்தால் ஏற்படும் உணர்வுகளின் கொதி நிலை என்று அனைத்து இடங்களிலும் சொற்களை வீணையில் மீட்டுகிறார் கிருபா.

அக்கவிதைகளைக் குறிப்பிட வேண்டுமெனில் நான் முழு புத்தகத்தைத்தான் பரிந்துரைக்க வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனிப்பு வகை. திகட்டத் திகட்டத் தருகிறார் முடிவில் இன்சுலின் எடுக்காமலிருந்தால் சரி. உதாரணமாக இதைத் தருகிறேன்.

'பனிபடர்ந்த வார்த்தைகள் உருகி, நீராகி. அவசியமற்று கசங்கிய ஆச்சரியங்களின் புருவ மடிப்புகள் நிமிர்ந்து நேராகி கிளி போல் பேசி ஒலி கழிக்கும் சுவர்க் கடிகாரம் அயர்ந்து ஆணியில் உறங்கும்வரை காத்திருக்க முடியாமல் காட்சியொன்றின் பல்லாயிரம் பிரதிகளால் கட்டப்பட்ட மட்டமாகக் காவியமாய் என்னை விழுங்கி உமிழும் உன் மரித்தவனின் விழிச்சாயலோடு திறந்திருக்கும் இம்மரக்கதவுகளை அரவமின்றிச் சாத்திவிட்டு விலகிப்போய்விடுகிறேன். பூரண நிலவின் பின்னிரவுப் பார்வையில் பொன்னலங்காரமமேற்று நீளும் இவ்வீதியில் நீ காவல் வைத்திருக்கும் அச்சம் மோகினியின் கொலுசு மணியை கிணுங்கி முன் செல்ல மெல்ல நடை உதைத்து அர்த்தங்களின் வாழ்வு பூர்த்தியுறும் அர்த்தமற்ற பயணக்கோடுகளின் வசீகர அழைப்போடு புவி ஈர்ப்பின் நிகர கதிகளை மீறி நிழல்போல் நடந்து மறந்துவிடுகிறேன் எல்லைகளற்ற மர்ம வெளியில். சிலைகளில் திறக்கப்படாத விழிகளாக நீ ஒளித்து வைத்திருக்கும் மகத்தான சிறப்புக் கூடத்தின் கதவுகள் தானாகத் திறந்து இடிகள் முழங்கி மாபெரும் திகைப்பில் கட்டி நிறுத்தட்டும் நானற்ற வெறுமையை.'

இப்படி எண்ணற்ற சொற்கடல் மீள முடியாமல் மீண்டும் மீண்டும் அதன் அலைகளில் சிக்கித் திளைக்கலாம். பாண்டிக்கும் அமலாவிற்கும் இடையே இருக்கும் காதல் நெருங்கவிடாமல் செய்யும் அதீத கண்ணியம் பாண்டி சந்திக்கும் அடுத்த பெண்ணான சாராவிடம் பிணையும் வேர் போன்று. அமலாவிடம் ஒடி ஒடி காலைச்சுற்றி ஒரு தலைகோதலை வேண்டும் செல்ல நாய்க் குட்டியைப் போலிருந்த பாண்டி. சாராவிடம் தன் செழித்த ஆண்மையின் நிழலைக் கண்டதாய் நெகிழ்வான். ஆனாலும், இக்காதலில் நாம் அமலாவைப் பிரித்துப் பார்க்கவியலாது பாண்டி அமலாவை சாராவிடம் கண்டு கட்டுண்டுப் போவான். தீயாய் நெருங்க முடியாத அமலாவ.. தீயில் நெருங்கி விரல் வைக்குமிடமாய் சாராவிடம் புகலடைவான். சந்தேகமின்றி

தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புனிதம்

மஞ்சள் நிற உடையில் அமலாவையும், சாராவையும் பார்த்து லயித்து அவன் மனம் அந்நிறத்தில் கரைந்து மீண்டும் கரையேறுவான். அமலாவிடம் கடலோரத்தில் நடைபெறும் உரையாடல் அத்துணை மலர்களின் செறிவு. உணர்வுகள்தான் நம் வாழ்க்கை.. ஞாபகங்கள் தான் நாம் இவையிரண்டும் அன்றி வாழவியலாது. இருவரையுமே பிரிந்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம் பாண்டியின் தலையில் மிகப் பெரிய ஆலமரமே ஆணியாக இறங்கிப் பிறழ்ந்து போவதைத் தவிர வேறு உசிதமல்ல. சாராவின் மேல் கொண்ட காதலில் வரும் வரிகளில் ஒன்று "அவளைக் கண்டதும் மூளைக்கு வாலும் இதயத்துக்குக் காலும் முளைக்குமா? "

அதே அவளின் இன்மையில் அவனானது. எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம் கன்னியைப் பற்றி. தஸ்தவேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள், யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் வரிசையில் பிரான்சிஸ் கிருபாவின் கன்னியும். இன்னமும் உண்மை சொல்ல வேண்டுமென்றால் தஸ்தவேஸ்க்கியின் வெண்ணிற இரவுகளை விட மேலானது. அதைக் கொண்டாடிய இலக்கியத் துறை எதற்காக? ஏன்? பிரான்சிஸ் கிருபாவின் கன்னியைக் கொண்டாடவில்லை என்று தெரியவில்லை. பல்வேறு மொழியில் 'கன்னி' நாவலை மொழி பெயர்த்துக் கொண்டு செல்லக் கூடிய அத்தனை தகுதிகளும் உடையது. அவ்வாறு கொண்டு செல்வது கிருபாவிற்கு மட்டுமல்ல தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நம் அனைவருக்குமே செருக்குதான்.

'கன்னி'யை வாசித்தால் இதயம் கனிந்து சொட்டும் காதலின் பால். அடிக் கடலென ஆழ்மனதில் பயணப்பட்ட உணர்வு. நட்சத்திரங்களை எண்ணிக் களைத்த இரவின் உறவு. பெரும் மழையில் கடலில் துடுப்பு போட்டதை போன்ற உவகை. வாசித்து மடியலாம் வாருங்கள்.. ❤️❤️