Saturday, March 21, 2020

அய்யப்பனும் கோஷியும்

நிறையப் பகிர்வுகளின் உந்துதலின் பெயரில் நேற்று அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது ஒரே இழை மற்றும் ஒரு நிகழ்வின் எதிர்வினைகள் என்ற கதையில் அயர்ச்சி இல்லாமல் கொண்டு சென்றுள்ளனர். கடைசி இருபது அல்லது இருபத்தி ஐந்து நிமிடங்கள் குறைத்திருக்கலாம் இன்னும் செம்மையாக இருந்திருக்கும்.

மனித மனங்களின் படிநிலைகளைப் படம்பிடித்திருக்கிறது. நான் முன்பே நிறைய இடங்களில் எழுதியது போல். வன்மம் எப்பொழுதும் ஒரு தருணம் வேண்டிக் காத்திருக்கும் சின்ன இடைவெளியில் மடைத் திறந்தது போன்று பாய்வதை எதிர்கொள்ள முடியாதளவு. உதாரணமாக நாம் எப்பொழுது கடந்து போகும் செய்தித்தாள் செய்திகளில் ஒன்று மக்கள் எல்லாரும் சேர்த்து அடித்தனர் என்பது. இதில் இடம்பெற்றிருப்பது Herd mentality. அதாவது தன் நிலையிலிருந்து வெளிப்படுத்த முடியாமலிருந்ததை ஒரு சந்தர்ப்பத்தில் தன் முகத்தைக் காட்டத் துணிவது. பொதுவாகவே நாம் நம்மை ஏதோ ஒன்றின் பெயரில் suppress செய்து வைத்துள்ளோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை. பிஜீ மேனன் இயல்பாக மிரட்டியிருக்கிறார் பிரித்வியை விட. பிஜீவின் மனைவியாக வருபவர் காட்டு மரத்தின் அடித்தளம் போன்று அத்தனை உறுதியான உடல்மொழி.

தமிழில் இப்படியான படங்கள் வருவதில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இல்லை அதிகாரத்தில் இருப்பவர்களைத் துணைக்கு வைத்திருப்பவர்களின் கரங்களும் ஓங்கி இருப்பதை எவ்வளவு முயன்றாலும் இறக்க முடிவதில்லை என்பது கசப்பான உண்மை. சமீபத்திய உதாரணம் பொள்ளாச்சி சம்பவத்தில் கைதானவர்கள் மீது இருந்த குண்டர் சட்டம் ரத்தானது. எத்தனை இளம் பெண்களின் கதறல்களை எவ்வளவு இயல்பாக கடக்கிறார்கள். அதிகாரம் என்பது ஆளுவது மற்றும் ஆணவம் மட்டும் அல்ல தர்க்கத்தைக் காலணிகள் ஆக்கவல்லது. இங்குத் தர்க்கம் என்பது எப்பொழுதும் எளிய மனிதர்களுக்கு மட்டுமானது. அதை மட்டுமே உண்டு புசித்துக்கொள்ள வேண்டுமவர்கள்.