Thursday, June 2, 2016

இளையராஜா

இளையராஜா


இளையராஜாவின் பாடல்களைப்பற்றி பேசும் போதே ஒருவித பரவசம் வருவதைதடுக்க இயலாது. பயணத்தை இனிமையாக்கி சாலைகளை சாரல்களாக கடக்க இளையராஜாவின் இளமைக்காலப் பாடல்கள் மெத்தென இருக்கும்.

பின்னிரவில் தூக்கமின்மையின் துயரம் துடைக்க வரும் இசைவிசிறியாக ராஜாவின் பாடல்கள்.கணத்த பொழுதில் நம்மை காற்றாய் மாற்ற வரும் சில பாடல்கள். பேராஷுட்டில் ஏறி விண்ணில் மிதப்பதுப்போல் இருக்கும் சில பாடல்கள்.

காதலில் உருகி காமத்தில் கரைய - வா வா அன்பே அன்பே 

இன்னும்மா காதலிக்க தொடங்கவில்லை என்பதுப்போல் - கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

உன்னில் வீழ்ந்தபின் மீண்டு என்னவாகபோகிறது என்பதற்கு - நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி

தொலைத்த உறவை .. மீண்டும் அடைந்த பெருமிதமும் .. நெகிழ்ச்சியும்.. - கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்.. 

தனிமையில் தனக்கானவனை கற்பனை செய்ய.. மாலையில் யாரோ மனதோடு பேச 

சோகத்திற்கும் , மகிழ்ச்சிக்கும் இடையே ஓர் உணர்வு உண்டு மிதவைப்போல அதற்கு ஏற்ற பாடல் நலம் வாழ என்நாளும்..

தன்னைப்பற்றி தானே இசையமைத்ததுப்போல்.. ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா. எந்த தாகம் எடுத்தாலும் அதற்கு ஓர் பாடல் இருக்கிறது இளையராஜாவிடம்.. நம்மையும் கிட்டார் வாசிக்க தூண்டிய பாடல் ..என் இனியப்பொன் நிலாவே.

இப்படி எத்தனையோ, அத்தனையும் லயித்துப்போகவே ஆக்கப்பட்டு இருக்கும். தொலைத்த உறவை நினைக்கவைக்க ஓர் பாடல். எங்கிருந்தோ கேட்டப்பாடல் வெளிக்கொணரும் நினைவு அடுக்கில் மறைந்திருந்ததை. சோர்ந்த நேரத்தில் தழைத்து தலைத்தூக்க சில பாடல்கள். அமர்ந்து மடி சாய்ந்து அழ சில. உணர்வுகளுக்கு பதில்களாக சில பாடல்கள். எத்தனை எத்தனை பாடல்கள் எத்தனை, எத்தனை ராகங்கள் அத்தணைக்கும் அலாபனை செய்ய வேண்டும் நாம் அவரை.ஒரு காலத்தையே இசையால் கட்டிப்போட்ட இசை வல்லுனர்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #HBDRajaSir

Tuesday, May 3, 2016

ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல எனது பார்வையில் (1960'ஸ் )



ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல என்ற குறுநாவலில் தன் நாற்பது வயதுவரை துணையின்றி வாழ்ந்த கௌரியைப்பற்றிய கதை. இதில் கவனிக்க வேண்டியது நாற்பது வயதுவரைதான். அதில் அந்த வயதுவரையும் ஓர் பெண்; ஆண்  துணையில்லாமல் ,தனித்த துணிவுடன் வாழ்ந்ததை அவ்வுளவு விமர்சியாக எழுதியிருப்பார் .


    அதை அழகாக " பதினைந்து வருஷங்களுக்கு முன்பு, டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட்டில், அவளும் அங்கே ஓர் ஆணை சந்தித்ததுண்டு. அந்த சந்திப்பில் அவள் அடைந்த இன்பமும் , மயக்கமும் இன்னமும் அவள் நெஞ்சில் பசுமையாய் குடி கொண்டியிருக்கிறது . அவளுக்கு அது போதும் . அதுவே போதுமென்று நிறைவு கொள்ளும் வகையில் அவள் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறாள் ; அல்லது தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

அவள் கல்யாணம் செய்துகொள்ள என்பதைவிட. அவளுக்கு கல்யாணம் செய்துவைக்க யாருமில்லை என்றே சொல்லலாம் . அவளுக்கும் அதே இனிதாய் இருந்தது. திரும்ப அதே ஆணை இத்தனை வருடங்கள் கழி த்து அவர் குடும்பத்தோடு சந்திக்கும் போது அதை எதிர்கொள்ளும் விதமும் அசாத்தியம். அவரை நிராகரித்து விட்டு அவள் போன்றே தனித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணை மணந்துக்கொள்ள விரும்புவதும்.அவர் தனித்து வாழ்வதிற்கு காரணம் வலிப்பு நோய்.

     அவர்களின் திருமணம் எப்படி சாத்தியம் என்று வியக்கும் சூசையப்பரின் மனைவி அருளம்மாளுக்கு ஏழு குழந்தைகள் , எட்டாவது வயிற்றில் அவளுக்கும் அதே வயது. அவளின் கணவர் சூசையப்பர் " நாற்பது வயதில் பிள்ளை பெறும்போது கல்யாணம் செய்துக்கொள்ள கூடாதா " என்று மனதில் நினைக்கிறார். அவளிடம் சொல்லமுடியாது.என்று அங்கு அசால்ட்டாக அடிப்பார் ஜேகே


    கௌரிக்கு அவர் மேல் வந்திருப்பது வலிப்பு நோயின் கருணையல்ல . அன்பும்,அவர் மேல் இருக்கும் நேசமும் ,நிச்சயம் இவரை கைபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அதன் சாராம்சமும் நேயர்த்தியாக  விளக்கியிருப்பார். அதே ஜெயகாந்தன்......

#வாழ்க்கை வயதிற்கு அப்பாற்பட்டது.






புலப்படாத பொழுதுகள்

நீண்ட நாள் உறவின் சாய்யலாக

தங்கிப்போன நினைவுகள்

என்னை ஆழம்பார்த்து சிரிக்கிறது

ஏதோ ஒன்றை இழந்திருப்பதை அறிந்து

பரிகாசிக்கிறது..

விலகியுள்ளது பெருமிதம் தருவதாக நினைத்தேன் 

சிறிதும், பெரிதுமான உடைந்துதான் போனேன்

எப்படியாவது தொடர்புக்கொண்டு 

என்னை தொட்டுவிட முயற்சித்தேன்

முடியாமல் முகிலாக கலைகிறேன்

புலப்படாத பொழுதுகளில்.

வெளிர் நிற இரவு


வெளிர் நிற இரவு 

அதில் பனியாக வந்தமர்கிறது உன்

நினைவுகள் என் மேல்

மிகவும் அடர்த்தியாக 

என்னை நனைத்து செல்லும்

சில வேலைகளில் 

மறைக்கப்பட்ட இடங்களில் 

வெளிர் நிற இரவு 

தந்து செல்லும் தனிமையின் 

தாக்கத்தையும் 

உனக்கான ஏக்கத்தையும்

நான் கரையும் நேரத்தில் வெளிர் நிறம் 

வெண்மையான பகலாக மாறியிருக்கும்.

Tuesday, February 2, 2016

எல்லாம் (வெ)வல்ல  ஓர் வெள்ளம்

கொஞ்சம் எதிர்ப்பார்த்ததுப்போல் வந்தது மழை ஆனால், கொஞ்சமும் எதிர்ப்பாராமல் வந்தது வெள்ளம். மழைக்கு என்ன இத்தனை ரௌத்திரம் இயற்கை என்ன நம்மைப்போல் சுடு, சொரணை அற்றதா எவ்வுளவு அடித்தாலும் வாங்கிக்கொள்ள ,இலவசங்களை காட்டியவுடன் பல்யிளிக்க.

   எல்லோரும் போல் மழைதான் என்று எதிர்கொள்ள காத்திருந்தேன். ஆனால், எல்லோரையும் போல் என்னையும் அழவைத்து சென்றது. 7 மாத குழந்தையை இரண்டு நாட்கள் கடும் காய்ச்சலில் வைத்திருந்ததை நினைத்தால் இப்பவும் மலைப்பாக இருக்கிறது எப்படி கடந்தேன் என்று . வெளிச்சத்தில் பழகிய நாம் இருள் என்றாலே பயம் கொள்ள வைக்கும் . அதிலும் காய்ச்சலில் குழந்தை, தெர்மோமீட்டர் , விளக்கின் சிறிதளவு வெளிச்சம் சுற்றிலும் தண்ணீர், சிக்னல் இல்லாத போன் எல்லாம் சேர்த்து பற்றவைத்தது பயத்தின் உச்சத்தை.
 

  குழந்தைக்கு பிக்ஸ் ஏதும் வந்தால் வெளியே எடுத்து செல்ல முடியாத சுழல் . கழுத்தளவு தண்ணீர் தெருவில்.  தெருவை கடந்து மட்டும் எங்கு செல்வது ?. எமெர்ஜென்சி கால் செய்யக்கூட சிக்னல் இல்லை.  இருப்புறமும் ரோட் பிளாக் செய்திருந்தார்கள் பெருங்குடி டோல் வரைதான் எல்லை இந்தப்பக்கம் காரப்பாக்கம், நான் இருப்பது தொரைப்பாக்கம்(OMR) . என் கடவுள் நம்பிக்கை என்பது கடவுளும் இருந்துவிட்டு போகட்டும் என்பதுவரைதான். இந்த அசாதாரண சுழல் கடவுளும் இருக்கிறார் என நம்பவைத்தது.
 
 
 என் அபார்ட்மெண்ட் படிகளிலிருந்து பார்க்கிறேன் தெருவில் கடப்போரை மழையின் எச்சமாக சிலர் தன் உடைமைகளை தலையில் சுமந்த படி கடந்தனர். சிலர் தன் அன்றாடங்களை சந்திக்க சமைக்க தேவையான பொருட்களோடு திரும்பிக்கொண்டிருந்தனர் இன்னும் சிலர் இதனை ரசித்தபடி கடந்தனர். வியந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது  இரு இளைஞர்கள் அருகில் இருக்கும் குப்பைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமால் செல்பி எடுத்து எனக்கு சிறிது உற்சாகத்தை ஊட்டினார்கள்.
 
 
  இரண்டு கார்கள் இரண்டு டூ வீலர்கள்களை தண்ணீரில் முழ்கி வெளியேறியிருந்தது. முட்டியளவு தண்ணீரில் பேருந்தை நோக்கி நடந்து இறுதியாக எங்கள் சொந்த ஊருக்கு திரும்பினோம். பூவிருந்தமல்லியை கடந்த பின்தான் சிக்னல் கிடைத்தது. திரும்பும் வழியில் சென்னையே சொந்தமாக கொண்டவர்களின் நிலைமையை யோசிக்கலானேன் வெறுமையே பதிலாய் கிடைத்தது .
 
 
   ஊர் சேர்ந்த பின்தான் தொலைக்காட்சியும் , இணையத்தையும் தொடர்புக்கொள்ள முடிந்தது. ட்வீட்டரில் உதவும் கரங்களை அடையாள படுத்திகொண்டிருந்தது ஆர்டி  கரங்கள் . மனிதம் தழைத்த தருணங்கள் . இவ்வுளவு மழை பெய்து கூவத்தையே சுத்தம் செய்ய முடிந்தது மனிதத்தைதான் அடித்துசெல்ல முடியவில்லை . எல்லோரும் சொல்வதுபோல் இது நேச்சர் கேளமிட்டி அல்ல என்பது தெளிவான ஒன்று, ஆனால் , இது ஹீயூமேன் கேளமிட்டியும் அல்ல  இன்ஹீயூமேன் கேளமிட்டி அரசியல்வாதிகள் மனிதர்கள்தானா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. எல்லாம் (வெ )வல்ல ஓர் வெள்ளம் மனிதம் தவிர்த்து.
 
 
பி.கு : நேரம் இன்மையால் மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளேன் ..மன்னிக்கவும்