Wednesday, February 14, 2018

அத்தருணம்

ஆனந்தமான இசை
எரிச்சலூட்டும் சத்தமாக
ஒலிக்கும் அத்தருணம்

மழலை பேச்சும்
சலித்துப்போகும் அத்தருணம்

விருப்பப்பட்ட உடை
வெறுப்பாக மாறும் அத்தருணம்

அழகிய கவிதை
வெளியில் எறியாத குப்பையாக
தோன்றும் அத்தருணம்

ஏதோ ஓர் ஊழ்
தண்ணீரில்லா
ஆழ் கிணற்றில் என்னை
தள்ளிவிட்டு மேலிருந்து
பார்த்து சிரிக்கும் அத்தருணம்
ஆயிரம் மரண வலியில்
உயிர் வாழ்ந்துக்
கொண்டுயிருப்பேன். 

Tuesday, February 6, 2018

MAA

ஆகச்சிறந்த தாய்மைக்கான குறும்படம் #Maa .. அவசியம் வளர் இளம் குழந்தைகளின் பெற்றோர்கள் காண வேண்டிய படம். இதில் கோபப்படவோ, அருவெறுக்கவோ, உணர்ச்சிவசப்படவோ ஒன்றுமில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கு நம் பக்குவம்.பிள்ளைகளுக்கு புரிதலை கொண்டு வருவது பெற்றோரின் கடமை. நாமும் இப்பருவத்தை கடந்தே வந்திருப்போம். 


முதலில் ஒரு சாதாரண அன்னையின் மனநிலை பிரதிபலித்து பின்பு அதிலிருந்து வெளிவருவது ஒரு அழுத்தமான அழகியல். வசனங்களும் அருமை. ‘பயத்தோடும், வெறுப்போடும் ஓர் உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரக்கூடாது’ போன்ற வசனங்கள் இன்னும் மெருகூட்டுகிறது. 


கிளைமாக்ஸில் அந்த அம்மா ‘இரண்டு பேரும் சேர்த்துத்தான் தப்புபண்ணீங்க ஆனா, அவன் எந்த பாதிப்பும் இல்லாம இயல்பா இருக்கான் . நீ மட்டும் ஏன்? பாதிப்பு அனுபவித்தது நீ. ஆனா, மீண்டு வந்துட்ட போ’ என்பது சிறப்பான வசனம். #Maa


கீழிருக்கும் இணைப்பில் அப்படத்தை காணலாம். 

https://youtu.be/-lKk_5qYdkk