Friday, October 5, 2018

பரியேறும்பெருமாள்

ஒரு சில படங்களின் தேவை எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும் அதுப்போன்ற படம்தான் பரியேறும்பெருமாள். சாதியை மையமாகக் கொண்டு இயங்கும் சமூகத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால், அதை எப்படி உள்வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதே நம்மை கவனிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

பரியேறும்பெருமாளின் பாத்திரப்படைப்பு அற்புதமாக வார்க்கப்பட்டுள்ளது. தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதனால் முதலில் விலகுவதும் , பிறகு எதிர்த்து நின்று சவால்களை எதிர்க்கொள்வதும் என வாழ்வியல் எதார்த்தங்கள். பெண் வேடமிடும் தன் அப்பாவை மறைப்பதும் பின்பு அவரையே கூட்டி வந்து நிற்பதுமென பாத்திரத்தின் உணர்வுகளை வலுச்சேர்க்கிறது. ஜோவாக வரும் ஆனந்தியின் அப்பா உயர்சாதி பிரிவினரின் அப்பாவை கண் முன் நிறுத்தியிக்கிறார்.

திரைப்படத்தின் தொடக்க காட்சியிலே கருப்பி என்னும் நாய் கொல்லப்படுவதை காட்சிப்படுத்தி. முழுகதையின் வடிவத்தை தந்திருக்கிறார் மாரி. அந்த கருப்பியின் தடம் படம் முழுவதும் தொடரும். ஒரே பின்னணி கொண்ட வேவ்வேறு செய்திகளை நாம் எப்படி கடக்கிறோம் என்று அசால்டாக காட்டியிருக்கிறார். இதிலிருந்து வேறுபடுபவர்களுக்கு என்ன இது படம் முழுவதும் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என தோன்றலாம். அவர்களின் வாழ்வியலே வாழ்க்கை முழுவதும் விரட்டி அடிக்கப்படுவதேயாகும்.

கொலைக்கு உள்ளாவது தலித் இன மக்கள் அல்ல சமூக நீதியே. அம்பேத்கரை உயிர்த்திபிடித்து. கதாநாயகன் வசனத்திலே 'நான் டாக்டர் அம்பேத்கர் ஆவேன்'  என்று வைத்திருப்பதெல்லாம் நல்ல முயற்சி.  ஒரு சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்  கதாநாயகனின்  அப்பாவை நிர்வாணப்படுத்தி ஓடவிடுதல், வகுப்புக்கு மது அருந்திவிட்டு வருதல் என. இவ்வுளவுக்கும் இடையில் ஒரு மெல்லிய காதலை சொல்லிருக்கும் விதம் அழகு.

கதாநாயகன் கதிர் ஜோவாக வரும் ஆனந்தியின் அப்பாவிடம் பேசும் அந்த இறுதி வசனமும்  சரி அதற்கு முன்பு பேசப்படும் வசனமும் சரி பொருள் புதைந்திருக்கும் தன்மை நேர்த்தி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால்  இப்படத்தில் சாதியே கதாநாயகன் மற்றும் பேசும் பொருள். சற்றும் பசப்பாமல் நேராக தலித் இன மக்களின் இன்னல்களை வடித்துள்ளார் மாரி.

கருப்பி பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது திரை விலகிய பின்னும். சந்தோஷ் நாராயணின் இசை மக்களுக்கான இசை. இப்படத்தை தயாரித்து மீண்டும் தன் நிலைப்பாட்டை  உறுதிப்படுத்துள்ளார் பா.ரஞ்சித். பரியேறும்பெருமாளுக்கு நீங்கள் கரம் கொடுக்க வேண்டாம் வழிவிடுங்கள் போதும் அவன் தானே மேலே வருவான்.

#பரியேறும்பெருமாள்

ஆர்டிகள் 497

திருமணத்துக்கு வெளியேயான உடலுறவு குற்றமில்லை என்ற தீர்ப்பை   எதிர்ப்பவர்களுக்கெல்லாம் திருமண  உறவைப்பற்றிய சரியான புரிதல் இல்லை என்றே கருத தோன்றுகிறது. மேலும் நீதிபதிகள்
நீக்கிய 497 சட்டப்பிரிவின் படி கல்யாணம் ஆன  பெண்ணுடன் அவளின் கணவருக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் ஆணுக்கு மட்டும் தண்டணை ஐந்து வருடம் சிறை அல்லது அபராதம்.அப்பெண் கணவனுக்கு தெரிந்து வைத்துக்கொண்டால் தவறில்லை என்பது அந்த பெண்ணை அசையும் சொத்தாக கணவர் பாவிப்பதையே குறிக்கிறது . மற்றும்  அதே கணவன் உறவுக்கொண்டிருந்தால் மனைவி 
 முறையீடு செய்ய முடியாது .என்றுதான் அதை நீக்கி உள்ளனர். கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு எஜமானர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது  என்றே சூளுரைத்திருக்கிறார்கள் இந்த தீர்பில். 150 ஆண்டுக்கால பழைமையான ஆண் ஆதிக்க சட்டத்தை நீக்கியது நல்ல முடிவு. 

இருவரின் பரஸ்பர ஒப்புதலோடு நடக்கும் உறவு எப்படி குற்றமாகும். தீர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளுதல் மகிழ்ச்சியற்ற திருமண  உறவையே குறிக்கிறது என்று. இதற்கு தண்டிக்க வேண்டிய அவசியமில்லை.  வேண்டுமானால் இதை காரணம் காட்டி விவாகரத்து செய்து கொள்ளலாம். வெளியான தீர்பை பெரும்பாலும் தவறாக புரிந்துக்கொள்கின்றனர். ஓரினச்சேர்க்கை தீர்ப்பை அடுத்து மற்றுமொரு  வரவேற்க வேண்டிய தீர்ப்பு. 

#AdulteryVerdict