Friday, January 25, 2019

பேரன்பு



கொலுசு மட்டுமே ஆடையாய்

இருக்கும் பொழுது
வெட்கம் போர்த்தி
உன் முத்தத்தை மறுதலித்தேன்.


பேரன்பைப்  பெறுவதற்கு 
பெரும் ஆயத்தம் வேண்டும்.



மழைக்கும் மண்ணுக்கும் 

எப்படி உறவுண்டோ
அதே உறவு மழைக்கும்
கொஞ்சலுக்கும் உண்டு.


காத்திருப்பு தான் அன்பைக் கூட்டும் இயந்திரம்.


மழை நேரத்தில் 

என் பிரத்தியேகமான
ஆடை நீ.




சில்லேன என் மேல் விழும் தூறல்
சூரிலேன உன்னை
நினைவுபடுத்துகிறது.



கரையாத பொழுதொன்றில்
முழுவதும் கரைந்து 
நுரைகளில் நிறைந்திருந்தேன்


வெடித்து அழுகும் ஒரு அழுகையில் 
தேக்கி வைத்த முழு அன்பும் வெளிப்படும்.


வழியெங்கும் வேதனைகள்
கடக்கக் கடக்க
வந்து கொண்டே இருக்கிறது
நீண்ட வானம் போல்.



உன் கண்கள் பேராயுதம்

உன் காதலை விட.


எழுதாமல்விட்ட கவிதைகள் 
எல்லாம் நீ சிகையை
சரிசெய்கையில் பறக்கிறது


பாசிப்படிந்த குலத்தின்
குளிர்ந்த நீரில் 
முதலில் பதியும் பாதம்
போல் சில்லிடுகிறது
சில நினைவுகள்.

நினைவுக் கோப்பையில்
மதுபோல் மிதக்கிறேன்.


எரியும் தேகத்தை
அணைக்க வேண்டும் 
வியர்வைப் பெருங்கடல்.

ஒளித்து வைக்க முடியாது 
உணர்வுகள் மெல்லப் புகையாக படர்கிறது.


காதலின் பால் காமம் வளர்ப்பது ஒரு வழி..
காமத்தின் பால் காதல் வளர்ப்பது ஒரு வழி..
எதுவாக இருப்பினும் காமத்தின் பால் ஒரு காதல் உண்டு.

வெப்பம் போக்க
மீண்டும் ஈரம் கேட்பேன்.

மீள முடியாத
நினைவுகளில்தான்
மீட்கிறேன்


போர்வைகள் எப்பொழுதும் 
போர்த்த மட்டுமே 
பயன்படுவதில்லை.

இல்லாத ஆடைமேலேல்லாம்
பரவியது உன் வாசம்.


விலகுதலும் சேருதலும்
தானே காதல் அல்லது காமம்.

மழையின் வேகthதிற்கு
ஈடு கொடுக்க முடியாமல்
பனியாய் உருகினேன்.


பனியின் விடுதலை
சூரியனை அடைவதிலே உண்டு.


மழைக்கும் மண்ணுக்கும் 
எப்படி உறவுண்டோ
அதே உறவு மழைக்கும்
கொஞ்சலுக்கும் உண்டு.



பின்னிரவில் வரும்
நண்பகல் கனவு
பிரயாசையின் சுவடுகள்



மிதந்து போகும்
பரிசலேன மனம்
நீரோடை வாழ்வில்,
ஊடாடும் நீர் 
சுழிகளென 
வேகத் தடைகள்.



உன்னை நேர்கோட்டில்
சந்திப்பதைத் தவிர்த்து
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வில்.



ஞாபக கண்ணாடியின்
பாதரசம் போனாலும்
அப்பின்பம் நிலைத்திருக்கவே செய்கிறது.



விடாப்பிடியாக விட்டுப் பிடிப்பதில் 
என்ன விளையாட்டு.


நல்ல குளிர்
கடும் தவத்தையும்
அசைத்துப் பார்க்கிறது
காற்று கல்லை அசைப்பதைப்போல்.



காற்றைப் போல்
ஆரத்தழுவுகிறது
உணர்வுகள் உடலெங்கும்.



முத்தச்சாவி
உயிர் வழியைத் திறக்க
உதவுகிறது.




கீச்சுகள்

துக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி என்பது ஆறுதல் சொல்வதை விட , அவர்களுடன் மெளனித்து இருத்தலேயாகும்.


புறக்கணிக்க முடியாத பேரன்பு என்பது குடையுடன் அடை மழையில் சிக்கிக்கொள்வதேயாகும்.

எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்தவங்களை பார்த்து இது சாத்தியமில்லைன்னு சொல்லக் கூடாது..அந்தச் சூழலில் இருந்துப்பார்த்தால்தான் அது தெரியும்.

ஆடைகளை எப்படிக் களைகிறோம்
என்பதல்ல காமம். எப்படி ஆடையாக இருக்கிறோம் என்பதில் இருக்கிறது.


விரும்புகிறவர்களின் விருப்பத்தை மதிப்பது என்பது ஒரு மாண்பு அது அனைவருக்கும் வருவதில்லை.

சிலர் சொவ்வது பொய் என்று தெரிந்தும் அது தெரியாததைப்போலவே சமாளிப்பது என்பது வலிக்காத மாதிரியே நடிப்பது.

குழைவதெல்லாம் கொஞ்சுவதில் சேராது.

தேவைகளின் முடிவென்பது நம்மைத்  தீர்க்கும் வரை நீண்டு கொண்டேயிருக்கும்.

இயல்பாக நடிக்கிறேன் என்று
அப்பட்டமாக மாட்டிக்கொள்கிறார்கள்.

விரும்பியவர் நெருக்கமாக இருக்கும்
பொழுது உலகமே தொலைவில் இருக்கிறது .

சமயங்களில் தர்கங்கள் அவசியமற்றது.

நம்ப வைத்து செருப்படி கொடுக்கும் வாழ்க்கை.

தெரிந்தவர் தானே என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே பேச ஆரம்பித்துவிட்டேன்..தவறேதுமில்லை நினைவு கூர்ந்து நலன் விசாரித்து புன்னகை புரிவதில்.


கொஞ்சமும் நாம் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளாமல் ...நம்மை குறை சொல்வதிலே குறியாக இருப்பவர்களிடம் பேசுவது நேர விரயம் மட்டுமல்ல மடத்தனம்.

Original கும்பகோணம் டிகிரி காஃபி அப்படின்னு போர்ட் வச்சியிருந்தாலே அது சர்வநிச்சயமா Duplicate தான். # Verified

நினைவுகளுக்கு எதற்கு குறிப்பு. நினைவே குறிப்புதானே.

அன்பைப்போல் நம்மை நாராக கிழிக்கும் ஆயுதம் வேறில்லை.

எதோ ஒரு துயரத்தை, சொல்ல முடியாத பிரியங்களின் உணர்வை, விழுங்கிய வலிகள் என்று எல்லாம் ஒரு சேர தந்துவிடுகிறது ஒரு சில பாடல்கள்.

எல்லா சந்தர்பங்களிலும் நழுவி விட முடிவதில்லை.

சில பேர் சில விஷயங்களை புரிஞ்சுக்கவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு அல்லது தேவை.

வலிகளை அனுபவ பட வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை கொண்டாட முடியும்.

எனக்கு கடவுள் குறித்து எந்த ஆச்சிரியமும், கேள்விகளும் இல்லை.. எல்லாமே மனிதர்களை குறித்துத்தான்.

தூக்கம் ஒரு தற்காலிக ஆசுவாசம்.அனைத்து பிரச்சனைகளிலிருந்தும்.

அப்பாக்களின் இயல்பு, இயல்பற்று இருப்பதே.

தேடுபவை யாவும் கிடைக்காமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை வாழ்க்கையில்..அதேப்போல் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்கள் நடந்தேறுவதே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வண்டில போற கவுண்டமணி காமேடிப்போல் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை இரண்டு மோட்டார்சைக்கிள் இருப்பக்கமும் வருது நாம் நடுவில் போகலாம்ன்னு பார்த்தா..பெரிய லாரியா வந்து ஏறுது.

காத்திருப்பு சமயங்களில் அலாதி 

காலத்திற்கும் என்றால் 

அது சாபம்.

புனைந்து போன வாழ்க்கையில்

வடிகால் தேடுவதுதான்

எத்தனை முட்டாள்தனம்.

மீள முடியாத எண்ணங்களிலிருந்து 

வெளியேறுவதே விடுதலைதான்.


அற்ப அன்பு அனைத்தையும் ஆட்டுவிக்கிறது.

மறதியே சமயங்களில் சரியான மாற்று.

நமக்கு வெட்டப்படாத குழிகளில் கூட விழுந்து எழுவதுதான் இந்த வாழ்க்கையின் டிசைன்.

பேரன்பை பெறுவதற்கு பெரும் ஆயத்தம் வேண்டும்.

தீபாவளி பண்டிகை என்பது சிறப்பு திரைப்படமும், தின்பண்டமும், பட்டாசும் என உங்களுக்கு கடந்திருந்தால் நீங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவரே

சுவாரஸ்யம் தர தவறுவதில்லை வாழ்க்கை.

தீராத மோகம் கொண்டு காட்டில் அலைந்ததை போன்ற உணர்வு..ஜெயமோகன் காடு நாவல் வாசிப்பு.

ஜெயமோகன் நாவல்கள் காடும், இரவும் ஒரு அனுபவம். இரவு ஸ்காட்ச் என்றால் காடு ஒரு டாஸ்மாக் பீர். #ஜெயமோகன்

அதிகம் மொபைபில் யூஸ் பண்ணி. இப்பயெல்லாம் நார்மல் photo print பார்த்தாலும் zoom பண்ண போகுது விரல். இதே technology addiction.


நல்ல தமிழென்பது வெய்யிலிருந்து தாகத்தில் வருபவருக்கு குளிர்ந்த நீர் பருகியதுப்போல் உள்ளது.

மரியாதை என்கிற போதை இருக்கே..எல்லாத்தையும் விழுங்கிடும்.

ஆகச்சிறந்த ஆத்திகவாதிகளுக்கு இருக்கும் வசதி என்னவென்றால் விடை தெரியாத விஷயங்களுக்கெல்லாம் கடவுளை திணித்துவிடுவார்கள்.

காலம் அனைத்தையும் நீர்த்து போக செய்து வெறும் காட்சிகளென நம்மை கடத்துகிறது.

அழகு ஒர் ஆழ்துளை கிணறு ..இறங்கினால் நம்மை எங்கோ இட்டுச்செல்லும்.


சின்ன சின்ன தற்கொலைகள் செய்யவில்லை என்றால் வாழ்க்கையை வாழவே முடியாது.

எழுவதென்பது உறங்குவதுப்போல் அத்தனை சுலபமல்ல.

ஒவ்வொரு மனிதனும் தனி உலகம் என்பதை ரயில் பயணங்களில் உணரலாம்.

தேனீருக்கு இணையாக என் மனம் உனக்கு அடிமையாகியிருக்கிறது.

மனப்பின்பம் என்பதும் மனசாட்சி என்பதும் வெவ்வேறு என்பதை அறிக.


'உன்னை நான் சுதந்திரமாகதானே வைத்துள்ளேன்' என்பதைப்போல் அப்பட்டமான அடிமைத்தனம் வேறில்லை.

பொங்கல் பொருட்களோடு ரூபாய் ஆயிரம் தந்தது உண்மையில் எடப்பாடி செய்ய நன்மையா இல்லை இதுவும் ஓட்டு வாங்க நடத்தும் நாடகத்தில் ஒன்றா. எதுவாகயிருப்பினும் பல இல்லங்களில் இந்த ஆயிரம் நிச்சயம் சர்க்கரை பொங்கலை தரவல்லது.

அன்பு அத்தனைக்கும் ஆசைப்பட்டு

இறுதியில் அன்பையே

இழந்துவிடுகிறது.

கலவிக்கு எந்த கற்பிதமும் வேண்டியதில்லை 

பசியைப்போல்.


அழியாத கோலத்தில்

உன் நினைவுகள் வண்ணங்களாய் ஒளிர்கிறது.


என் மனம்

உன் வியர்வை மணம் வேண்டி மடிகிறது..

மண்வாசனைக்கு ஏங்கும் விவசாயிப்போல்.

மெளனத்திற்குத்தான்

எத்தனை மொழிப்பெயர்ப்பு.


தடுமாற்றமும், பயமும் இராத வாழ்க்கை என்ன வாழ்க்கை.

ஆகப்பெரிய வஞ்சனை ஒருவரிடம் பேசாமல் தவிர்ப்பது.

செல்லாத காசை செலவழிக்க பாடுப்பட்ட கதைத்தான் சில உறவுகளை நிலைப்பெற வைக்க முயல்வது.

ஒரு சில நபர்கள் நம்மை எவ்வுளவு காயப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் தாங்கிக்கொண்டே செல்வோம். ஒரு புள்ளிக்கு வந்ததும் அவர்களை விட்டு விலக தொடங்குவோம். அதன்பின் அதே நபர் எவ்வுளவு இசைந்து வந்தாலும் நாம் மீண்டும் இணைய முயல்வதேயில்லை. அந்த ஒற்றை புள்ளியே சுயமரியாதை எனப்படுவது.