Friday, June 12, 2020

சில நேரங்களில் சில மனிதர்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் நாயகி கங்கா தன் அறியா வயதில் ஏற்பட்ட சின்ன சலனத்தின் காரணமாக தன் முழு வாழ்க்கையும் தொலைக்க நேர்வது விபத்தன்று.  புனிதம், கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்வை அப்படியே மென்று முழுங்கிவிட்டு இன்னும் தணியாத தாகத்தோடு அலையும் தகிப்புதான் இந்நாவலின் சாரம்.

காரில் லிப்ட் கொடுத்தவருடன் தன்னை இழந்து வீடு திரும்பும் கங்காவை அவர் அம்மாவும், அண்ணண்ணும் அடித்தும், திட்டியும், அசிங்கப்படுத்தி அவள் அண்ணன் வீட்டை விட்டு விரட்டிவிடப் பெண்ணுக்காக அம்மாவும் உடன் வந்துவிடுவார். அவள் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணன் வெங்கடாசலம் என்ற வக்கீல் வெங்கு மாமா அவளைப் படிக்க வைப்பார் ஒரு வகையில் அது அவளுக்கான வடிகாலாக அமைத்துக் கொடுத்ததில் வெங்கு மாமா செய்தது மிகப் பெரிய உதவி. இருப்பினும் அவரிடம் இருக்கும் அந்த ப்பர்வர்ட் தனக்கான நேரம் வேண்டி காலைச் சுற்றும் பூனையைப் போன்று கங்காவை விட்டு விலகமாட்டார். இது ஒரு வித மனிதனின் மனநிலை மேன்மை உள்ளடங்கிய அதே நேரத்தில் இப்படியான சில ப்ளித்திக்களும் ஒருங்கே அமையப் பெற்றது.

மனிதர்களின் மனோநிலையும் அதற்கு எதிரான தர்க்கமும் நாவலின் அனைத்து இடங்களிலும் அலையடித்துக் கொண்டேயிருக்கும். இந்நாவலே இங்கு எது தர்க்கமென்று தர்க்கத்தை கூண்டிலேற்றி வினா எழுப்புவதேயாகும்.  அவளின் மாமாவிடம் உரையாடும் பொழுது அவர் சொன்னது.. 'You can be a concubine to someone. But, not a wife to someone  அப்படி நீ ஒதுங்கின்டா நீ கெட்டாலும் நம் தர்மங்களையும் சாஸ்திரங்களையும் கெடுக்காத புண்ணியம் உனக்கு உண்டு '. எவ்வளவு ஒரு குரூரமான மன நிலை இது. அவள் எதோடும் சேராமல் காலத்தின் கண்களை ஊற்று நோக்கி தனக்கென்று ஒரு வரையறைக்குள் கடந்து கொண்டிருக்கையில். ஆர்.கே. வி என்ற எழுத்தாளர் அப்படியே அவளின் கதையை அக்னி பிரவேசம் என்ற பெயரில் கதையின் மிக முக்கியமான விடையம் மற்றும் திருப்பு முனையாக அக்கதையின் முடிவை மட்டும் மாற்றி அமைத்திருப்பார். அதாவது கங்காவின் அம்மா அவ்வுண்மை தெரிந்தவுடன் அதே அடி, திட்டும் உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மகளை அணைத்து ஆறுதல் சொல்லி அவளின் தலையில் தண்ணீரைக் கொட்டி பாவம் கழிந்துவிட்டது இச்சம்பவத்தை ஒரு விபத்தெனக் கருதிக் கடந்துவிடு என்று சொல்வதுதான் எத்தனை உன்மத்தம். இக்கதையைப் படித்துவிட்டு இதைச் செய்யத் தவறிய தன் அம்மாவின் மேல் கோபம் கொண்டு அப்புத்தகத்தை அவள் அம்மாவின் மேல் எறிந்து சென்று தன்னிலை குளத்தில் இறங்கி நீந்துவாள். வெங்கு மாமா வந்ததும் தன் குற்ற உணர்ச்சிகளையும் குமுறல்களையும் காக்கைக்கு இரைக்கும் பருக்கைகள் போல் இரைப்பார் கங்காவின் அம்மா. அதற்கும் அதே புராணங்களை அடுக்கி வீட்டு நாயை சங்கிலியில் கட்டுவதை போன்று அவரின் நியாயத்தைக் கட்டுவார். இறுதியில் 'அவளுக்கு அவ்வளவு சமத்து இருந்தால் அந்த அவனையே தேடி கண்டுப்பிடிச்சு கட்டிக்கொள்ளச் சொல்' என்று கூறும் போது கங்கா வாசலில் நுழைவாள்.

அதன்படியே காரில் வந்த பிரபுவைத் தேடிப் பிடித்தும் விடுவாள். ஆனால், அவருக்குக் கல்யாணம் ஆகி கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதை அறிந்த கங்கா. பிரபு வழக்கமான பணக்கார மகனின் அத்தனை கேடுகளையும் உடைய உடைந்தும் போன குழந்தையின் பொம்மை. தன்னால் கங்காவின் வாழ்க்கை இப்படி ஆனதை கண்டு மிக வருத்தப்பட்டு எப்படியாயினும் அதைச் சரியாக்கி விட வேண்டும் என்று துடிப்பது நீரில்லா மீனின் உணர்வு. அவர்களின் பெரும்பாலுமான உரையாடல் நல்ல ஆங்கிலம் கொண்டது. ஜெயகாந்தன் அதில் நம்மை உருக்கி உலோகம் செய்கிறார். கங்கா குறைந்த பட்சம் அவரின் ஆசை நாயகி என்ற பெயரளவிலாவது வாழ்ந்துவிடுவது என எண்ணுகிறாள். அதற்கும் இவர்களின் சாஸ்திரங்கள் ஃபிலைட் பிடித்து வந்து சண்டையிடும்.

பிரபுவும் தனக்கான அன்பை வேண்டி சடுதியில் இருப்பார் அவரின் வாழ்வில். உண்மையில் பிரபு ஓர் அரவணைப்புக்கு ஏங்கும் குழந்தை. அவரின் சிறந்த குணங்களை குடிப்பழக்கம் மறைக்க முனைப்படும். சருகு பச்சையத்திற்கு ஏங்குவதாய் அவரின் ஆசைகள். வாழ்க்கையில் பெரிய பிடிமானமில்லாமல் மஞ்சுவே அருமருந்தாக வாழ்வார். ஆகையால், கங்காவின் நேசம் அவருக்கும் ஆதர்ச தோள்தான். இதில் பிரபுவின் மகளாக வரும் மஞ்சுவிற்கு இருக்கும் பக்குவமும், புரிதலும் வியக்கும் நல்லுணர்வு. ஏதோ ஒரு நிலையில் இவர்களின் உறவை மஞ்சுவிற்கு விளக்க நேர்வதும் அதை அவள் கையாளும் விதமும் அத்துணை லாவகம். இப்படத்தை வெங்கு மாமாவிடம் வெளியிடத் துடித்த கங்காவின் அம்மா கொட்டித் தீர்ப்பார். அவரின் போக்கில் இதையும் சரியல்ல என்று முடிப்பார். அவர் முன்பே கூறியதுபோல் அது ஏன் நானாக இருக்கக் கூடாது என்ற அவரின் ஆவலாதியையும் தண்ணீர் ஊற்றி அணைப்பாள். இருப்பினும் அவருக்கு ஒரு சில விஷயங்களில் இருக்கும் புரிதலும், மேன்மையும் கங்கா வணங்கச் செய்யும் ஒன்று. அவரே 'I would like to meet that gentleman' என்கிறார். அச்சொல் அந்த அவரை ஜென்டில்மேன் என்று கூறுவது அவரின் நல்விடையங்கள்.

ஆர். கே. வின் வழியாக வரும் ஒரு விடோவரின் திருமண வரனை ஏற்கச் சொல்லி கங்காவிடம் கேட்பது அவளுக்கு ஒரு நல்வாழ்க்கை வேண்டும் என்பதைத் தாண்டி இப்படியான அவள் விருப்பப்பட்ட இவ்வாழ்க்கையை விட்டோழிந்து இவர்களின் புனிதத்திற்கு மஞ்சள் நீராட்டு செய்ய வேண்டுமென்பதே. அப்படி அவரை நாடிச் செல்கையில்தான் கங்காவின் அண்ணனிற்கு தெரிய வரும் பிரபுவின் மனத்தூய்மை. இந்த நாவலை புதியதாகத்தான் நான் கிளாசிக் என்று சொல்ல வேண்டியதில்லை. 1970திலிருந்து பலர் சொல்லி உளமகிழ்ந்திருப்பர். இந்நாவலின் வாதி பிரதிவாதி இரண்டுமே தர்க்கம்தான். சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்நாவலின் ஸ்பரிசத்தை ஒருமுறையாவது உணருங்கள்.

#ஜெயகாந்தன்

பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம்

பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் நாவல் பிரபாகரன் என்னும் மருத்துவ மாணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிறது. ஒருவர் தற்கொலை செய்வதற்கான சாத்திய கூறுகள் என்று எந்தவரையறையும் யாரும் வகுக்க முடியாது என்பது தற்கொலையை எப்படித் தவிர்க்க முடியவில்லையோ அதே அளவிற்குத் தவிர்க்க முடியாத உண்மை. பிரபாகரனின் நண்பர் என்று அறியப்பட்ட கதைசொல்லிதான் இந்நாவல் முழுவதும் நம்முடன் உரையாடுகிறார். சமயத்தில் நாமே அவராக உணரப்படுவோம்.

இக்கதைசொல்லி பிரபாகரனின் அதே கல்லூரியில் படிக்க நேர்வதால். தற்கொலைக்கான காரணங்களை அறியத் தூண்டப்பட்டு அதை முனைகிறார். அவர் கேட்டறியும் முதல் நபர்  பிரபாகரனின் நெருங்கிய நண்பர் என்று அறியப்பட்ட சதாசிவம். மருத்துவ மேல்படிப்பில் தான் அடைய நினைத்த கல்லூரி கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவர் அதை நிறுவ முற்படுவார். பிரபாகரன் அதிபுத்திசாலி, கொஞ்சம் எல்லோரும் பொறாமைப் படும் அளவிற்கு உயர்ந்தவர் என்பதாலே அவர் இறப்புக்கான கிளைக்கதைகள் ஏராளமாக விரவிக்கிடக்கும். இப்படியான கதை சொல்லித் தேடலில் பல்வேறு தரப்பட்ட நபர்கள் அவர்களின் புனைவு திறனையும் கொஞ்சம் உண்மையும் எடுத்துரைப்பர். வெகு சிலர் தனக்குத் தெரிந்த உண்மையை மட்டுமே கூறுவர் அதில் அவர்களின் ஒரு குற்றவுணர்வு ஜுவாலை தெரியும். இருப்பினும் அதை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு நொந்துக் கொள்ளும் ஜீவன்கள்.

நாவலின் தடம் மனித மனங்களின் வெளி. கதைசொல்லியின் மனமாகட்டும், துப்பு கொடுக்கும் நலன் விரும்பிகள்! ஆகட்டும் அப்படியே மனித மனங்களை போஸ்ட் மார்ட்டம் செய்து நம் முன் வைக்கிறார் மயிலன். கதை சொல்லியின் மனப்போராட்டம், உணர்வுகள், மனித உணர்வுகளின் விவரணை என்று அனைத்துமே ஒரு deep anthropology study. ஃப்ராய்ட் புத்தகத்தில் படித்த இச்சொல் மிகக் கச்சிதமாக இருக்கும் என நம்புகிறேன். 'நனவிலி மனதின் உளபகுப்பாய்வு'. அப்பட்டமாக மனித மனங்களின் உளபகுப்பாய்வே இந்நாவல்.

நம்முடன் இருக்கும் நபர் பொதுவில் நண்பர், உறவினர் ஆவர். அவர்களில் சிலர் எனப் பெரும்பான்மையானவர்களின் எந்த விதத்திலும் உடனிருப்பவர் உயர்ந்து விடக் கூடாது என்று அவர்களுக்குள் ஒரு அலாரம் அடித்துக்கொண்டே இருக்கும். அதை மீறி முன் வந்தால் எதாவது பழிச்சொல்லை அவசரமாகத் தேடுவர். நாவலின் மிகச்சிறந்த வரி //தனக்குள் சரிந்து விழும் தன்னுடைய பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்க, அடுத்தவனின் ஆளுமையை அடியோடு நசுக்க வேண்டியிருக்கிறது// இதுதான் நாவலின் சாரமும் கூட.

மருத்துவத்  துறையில் நிகழும் அத்துணை அரசியல், வஞ்சகம், அதிகாரம், இன்னும் பிற இத்தியாதிகளை ஒவ்வொரு குப்பியாக அடுக்கியிருக்கிறார் எழுத்தாளர். மயிலனாக வரும் டிப்பார்ட்மென்ட் ஹெட் தன் அதிகார ஆளுமையின் வேரில் அனைவரையும் முறித்து தன் அகங்காரத்தை நிலை நாட்டிக் கொள்வதெல்லாம் சாடிச லயிப்பு. மருத்துவத் துறையின் நிஜ உலகத்தை வடித்ததின் பெயரில் இந்நாவல் அதற்கானத் தனி முத்திரையைப் பதிக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், வெறும் மருத்துவ உலகின் நூல் என்று சுருக்கினால் அதை உடனடியாக வன்மையாக எதிர்ப்பு தெரிவிப்பேன். ஒரு நல்ல புத்தகம் இன்னொரு நல்ல புத்தகத்தை நினைவுபடுத்தும் என்பர். அவ்வாறாக மனித வாழ்வை, வாழ்வின் முரண்களை, அதில் அவர்களின் நிலைப்பாட்டை என்று படிக்க நேர்கையில் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் அவர் அடுக்கும் கேள்விகளின் பக்கங்கள் நினைவுத் திரியிலிருந்து எரியத் துவங்குகிறது.

செவிலியர்கள் நாஸியா மற்றும் லீமா இருவரும் வலிந்து கூறும் புனைவில் அவர்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலைத் தேடி தன் பழிவுணர்வை கழிக்க முற்படுவது ஒரு பொதுப் புத்தியின் வெளிப்பாடு. இறந்தவர் எப்படியும் சாட்சி சொல்லப்போவதில்லை என்ற கூடுதல் நம்பிக்கை. இவர்களின் சப்பாஷனையை எழுத்தாளர் இப்படி நச் சென்று விளக்குகிறார். // ஒருவர் சொல்லும் உண்மையை நாம் ஏற்காமல் விடுவதைவிடவும், அவர் வலிந்து சோடித்துச் சொல்லும் ஒரு பொய்யை நாம் நிராகரிக்கும்போதுதான்,அவர் அதிகம் சீண்டப்படுகிறார். //

அன்வர் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனின் இக்கட்டான சூழ்நிலையில் உடன் பயணித்தவர். ஓரளவு பிரபாகரனைப் புரிந்து அவனை அரவணைத்துச் சென்ற ஒருவர். பிரபாகரனின் தற்கொலைக்குக் காரணம் குடும்ப பிரச்சனையா, தவறவிட்ட உயர் படிப்பிற்கான கல்லூரியா, காதலா, அதிகார மையத்தின் நையப்புடைப்பா என்று நீளும் பட்டியலில். அன்வர் தானாகவே கன்ஃபஸ் செய்கிறார் நான் அவனைத் தவறவிட்டேன் என்ற குற்றவுணர்வின் வெளிப்பாடாக மதத்தை இறுக்கப் பற்றி இறுகிப் போகிறார். மதம் வலிந்து இவ்வாறான மனிதர்களை ஏற்று தன்னாலானவரை ஆற்றுப்படுத்த முயல்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒருவனின் நம்பிக்கையை உடைப்பதில் அதிக பங்கு மதத்திற்குண்டு. தன்னளவில் தோய்ந்து தோற்றுப்போனதாக அன்வர் நினைக்கிறார். கதைசொல்லிச் சொல்வதைப் போல் பிறர் மாதிரி அடுத்தவரை கைகாட்டாமல் தன்னை கடிந்துகொள்ளும் மாண்பு அன்வருக்கு இருந்தது ஒரு வித நல்லுணர்வு.

தற்கொலை பற்றிய குறிப்புகளைக் கேட்டறிகையில் அவர்களின் உடல் மொழி, குரல், ஆதாரம்,சாதுரியம் என்று ஒவ்வொன்றாக விளக்கி அறிய முற்படுவது ஒரு விசாரணையின் மிடுக்கை அங்கே கொண்டு வந்துவிடுகிறது. டூ மச் ரிஃப்ரன்ஸ்சாக தெரியலாம் நான் இப்பொழுது சொல்வதும் இருப்பினும் இணைக்கிறேன். மைண்ட் ஹெண்ட்டர் என்ற நெட்ஃபிலிக்ஸ் தொடரில். இவ்வாறான குறிப்புகளை வைத்து அவர்களின்(குற்றவாளிகளின்) மன ஓட்டங்களை அறிவர் அக்காட்சிகளும் கண்களில் விரிந்தது.  இவ்வாழ்க்கை எப்பொழுதும் அதுவும் நொடிந்த தருணங்களில் தேடுவது ஆதுர தோள்களையும் தனக்கான காதுகளையும். இவையிரண்டும் புறக்கணிக்கப்படும் போதுதான் இம்மாதிரியானவர்கள் உலகையும், மனிதர்களையும், வாழ்வையும் புறக்கணிக்க நினைக்கின்றனர். நாவலில் பிரபாகரன் இறப்புக்கு முன் அவருடன் இருந்த நண்பனின் தற்கொலை பிரபாகரனுக்கு முன்பே தெரிந்தது என்பதும் அதே போன்று பிரபாகரனின் தற்கொலை அன்வருக்கும் முதலே ஒரு உணர்வு இருந்தது என்பதுதான் நாம் இங்கு ஆழ்ந்து, ஆய்வுக்குள்ளாக வேண்டிய விடையம்.

குறைந்தபட்சம் ஒருவர் உடைந்த நிலையிலிருக்கும் போதாவது நமது வன்மங்களையும், ஆற்றாமை களையும் ஒதுக்கிவிட்டு அவர்களுக்குச் செவி கொடுத்து பொய்யாகவெனும் ஒரு அன்பைப் பிரசவியுங்கள் அவர்களின் கரங்களை இறுக்கமாக அணையுங்கள் அவ்வுயிர் பிழைத்துலவட்டும்.

Such a sagacious writing. ❤️
வாழ்த்துகள்
#மயிலன்ஜிசின்னப்பன்
#பிரபாகரனின்போஸ்ட்மார்ட்டம்

இன்னும் ஓர் இரவு

கற்றது தமிழ்ப் படம் எப்பொழுதும் நினைவிலிருந்து அகல்வதில்லை. காட்சிகள், பாடல்கள், வசனம் என்று. முன்பே எழுதியது போல் ராமின் மிகச் சிறப்பான படமாக இருக்கும் எப்போதும் அவர் எடுக்கப் போகும் படங்கள் உட்பட.

இப்படத்தில் யுவன் இசையையும் காட்சிகளைப் பிரிக்க இயலாது அப்படி ஒரு இசைவு உண்டு. அனைத்து பாடல்களும் அருமை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மிதவை நிலை. இக்கதையை மூலத்தை எதனால் ஒரு மனிதன் இப்படி வன்மமாக மாறுகிறான். எதற்கு சமூகத்தின் மேல் இத்தனை கோபம் வருகிறது? என்னும் இப்படத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கு இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் இந்த ஒரே பாடலில் விடை கிடைக்கும் வரிகள் மற்றும் இசை அம்மனிதனின் மனரேகையின் ஓட்டத்தை நகலெடுக்கும்.

அப்பாடல் இன்னும் ஓர் இரவு இன்னும் ஓர் நினைவு என்ற பாடல். நா. முத்துக்குமார் வரிகளில் வாழ்க்கை விவரணை. புதுப்பேட்டையில் ஒரு நாளில் வாழ்க்கை பாடல் போன்று இவ்விரு பாடல்களுமே வாழ்க்கை வண்ணமெனக் குழைத்து வைத்த குழந்தை தன் முன் பரப்பி வைத்திருக்கும் வண்ண காகிதங்களாய் அவ்வளவு அழகா எழுதியிருப்பார் நா. முத்துக்குமார். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவ்வாழ்க்கையின் சோகம் வந்து அப்பிக் கொள்ளும்.

முழு வரிகளையுமே தர வேண்டி வரும் போல.

//போய் பார்க்க யாருமில்லை
வந்து பார்க்கவும் யாருமில்லை
வழிப் போக்கன் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது//

யாருக்குமே இல்லை என்பதின் வலி

//காலடி சப்தம் எழும்பும்வரை
குப்பை மேட்டில் படுத்திருப்பேன்
கடைசியாய் சிரித்தது எப்போது
ஞாபகம் இல்லை இப்போது//

சிரிப்பை மறந்த வாழ்க்கையின் ரணம்

//நதியில் விழுந்த இலைகளுக்கு
மரங்கள் அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும் வரை
வேதனை அதற்குப் புரியாது//

எத்தனை அப்பட்டமான வரிகள்

//உயிருடன் இருப்பது இப்போதெல்லாம்
வலித்தால் மட்டுமே தெரியும்
உன்னுடன் நானுமில்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்//

இறந்தகால வாழ்வின் நினைவே நிகழ்கால நகர்தல் எட்டாத கனவின் வேதனை. இதைத் தொடர்ந்து வரும் வரிகளில் தன்னை நிராகரிக்கும் சமூகத்தின் மேலான கோபம், வறுமை, எதார்த்தத்தை மீறும் இடத்தை அத்தனை எதார்த்தமாக எழுதி இசைத்திருப்பர். கொண்டாடும் காதலிக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக் கொடுக்க முடியாத கையறுநிலையின் தணல் என்று முழு பாடலும் வலி நீவல். சந்தேகமே இல்லாமல் நா. முத்துக்குமார் தமிழ் சினிமாவின் மாபெரும் இழப்பு. கதைத்துக்கொண்டே இருக்கலாம் அவரின் வரிகளை.

#நாமுத்துக்குமார்

Paatal lok

Those who are all having prime video or Telegram do watch Paatal lok series. குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பஞ்சு மிட்டாய் நெஞ்சம் கொண்டவர்கள் தவிர்த்துவிடவும்.

இங்கு இரும்பு பெண்மணியைப் பற்றி நல்லவிதமாக நெட் சீரியல் எடுத்ததற்கே கொஞ்சம் எதிர்ப்பு கிளம்பியது. Paatal lok என்ற இந்த பிரைம் சீரியல் அதுவும் வடக்கே வெளியாகியிருக்கிறது ஒரு நல்ல விடையம். இந்துத்துவா, பீப், தலித், முஸ்லிம் அடக்குமுறை, பல குற்றங்களுக்கு ISIS மற்றும் பாக்கிஸ்தான்தான் காரணம் என்று முடிப்பது என தீவிர அரசியல் பேசியிருக்கிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு தொடர். தவறாதீர்கள். முகத்தில் தெறிக்கும் இரத்தத்தை வழித்துவிட்டுதான் காத்திருக்க வேண்டியுள்ளது அடுத்த சிசன்க்கு.

ஜெய்ஹிந்த் 💪💪

HBDRaja

இளையராஜாவின் பாடல்களைக் கேட்காமல் தமிழ் நாட்டில் வாழ்வது அரிது. அவரின் இசை நம் நாளங்களை மலர்களைப் போன்று கோர்க்கவல்லது. பெரிதாக இசை ஞானம் ஏதுமில்லை என்றாலும் பெருமளவில் ரசிக்கத் தெரியும். பொதுவாகவே ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு நினைவுகளுண்டு. அந்த இசை காதில் விழுகையில் கொடியை உருவுவதைப் போன்று நினைவுகளை உருவி எடுக்கலாம்.

சமயங்களில் ஒரு சில இசைக்கு நல்ல மணமுண்டு. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடலில் துவக்கத்தில்  வரும் அந்த ஆலாபனை நம் உடம்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் பூ பூ பூக்க வைக்கும். அப்படியே கேட்டபடியே மரணிக்க இசைய முடியும். மயில் போல பொண்ணு ஒன்னு பாடலில் அப்பாடலின் இசையும் பவதாரணியின் குரலும் குழைந்து நம்மைக் குலையவைக்கும்.

பெண்களின் உணர்வை வருடும் பாடல்களாக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது, ராசாவே உன்னை நம்பி, தாலாட்டும் பூங்காற்று நானல்லவா, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரும் என்னடி, மாலையில் யாரோ மனதோடு பேச, சற்று முன்பு பார்த்த என்று இப்பாடல்கள் யாவும் பெண்களின் மனநிலை பிரதி. அவர்களின் காதல் லயிப்பை, ததும்பும் உணர்வை அழகாக இசைத்திருப்பார் ராஜா. இப்படி இன்னும் நிறைய நிறையப் பாடல்களை நமக்களித்த இளையராஜா நம் நிகழ்கால அதிசயம்.

#HBDRaja