Friday, June 12, 2020

இன்னும் ஓர் இரவு

கற்றது தமிழ்ப் படம் எப்பொழுதும் நினைவிலிருந்து அகல்வதில்லை. காட்சிகள், பாடல்கள், வசனம் என்று. முன்பே எழுதியது போல் ராமின் மிகச் சிறப்பான படமாக இருக்கும் எப்போதும் அவர் எடுக்கப் போகும் படங்கள் உட்பட.

இப்படத்தில் யுவன் இசையையும் காட்சிகளைப் பிரிக்க இயலாது அப்படி ஒரு இசைவு உண்டு. அனைத்து பாடல்களும் அருமை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மிதவை நிலை. இக்கதையை மூலத்தை எதனால் ஒரு மனிதன் இப்படி வன்மமாக மாறுகிறான். எதற்கு சமூகத்தின் மேல் இத்தனை கோபம் வருகிறது? என்னும் இப்படத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கு இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் இந்த ஒரே பாடலில் விடை கிடைக்கும் வரிகள் மற்றும் இசை அம்மனிதனின் மனரேகையின் ஓட்டத்தை நகலெடுக்கும்.

அப்பாடல் இன்னும் ஓர் இரவு இன்னும் ஓர் நினைவு என்ற பாடல். நா. முத்துக்குமார் வரிகளில் வாழ்க்கை விவரணை. புதுப்பேட்டையில் ஒரு நாளில் வாழ்க்கை பாடல் போன்று இவ்விரு பாடல்களுமே வாழ்க்கை வண்ணமெனக் குழைத்து வைத்த குழந்தை தன் முன் பரப்பி வைத்திருக்கும் வண்ண காகிதங்களாய் அவ்வளவு அழகா எழுதியிருப்பார் நா. முத்துக்குமார். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவ்வாழ்க்கையின் சோகம் வந்து அப்பிக் கொள்ளும்.

முழு வரிகளையுமே தர வேண்டி வரும் போல.

//போய் பார்க்க யாருமில்லை
வந்து பார்க்கவும் யாருமில்லை
வழிப் போக்கன் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது//

யாருக்குமே இல்லை என்பதின் வலி

//காலடி சப்தம் எழும்பும்வரை
குப்பை மேட்டில் படுத்திருப்பேன்
கடைசியாய் சிரித்தது எப்போது
ஞாபகம் இல்லை இப்போது//

சிரிப்பை மறந்த வாழ்க்கையின் ரணம்

//நதியில் விழுந்த இலைகளுக்கு
மரங்கள் அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும் வரை
வேதனை அதற்குப் புரியாது//

எத்தனை அப்பட்டமான வரிகள்

//உயிருடன் இருப்பது இப்போதெல்லாம்
வலித்தால் மட்டுமே தெரியும்
உன்னுடன் நானுமில்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்//

இறந்தகால வாழ்வின் நினைவே நிகழ்கால நகர்தல் எட்டாத கனவின் வேதனை. இதைத் தொடர்ந்து வரும் வரிகளில் தன்னை நிராகரிக்கும் சமூகத்தின் மேலான கோபம், வறுமை, எதார்த்தத்தை மீறும் இடத்தை அத்தனை எதார்த்தமாக எழுதி இசைத்திருப்பர். கொண்டாடும் காதலிக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக் கொடுக்க முடியாத கையறுநிலையின் தணல் என்று முழு பாடலும் வலி நீவல். சந்தேகமே இல்லாமல் நா. முத்துக்குமார் தமிழ் சினிமாவின் மாபெரும் இழப்பு. கதைத்துக்கொண்டே இருக்கலாம் அவரின் வரிகளை.

#நாமுத்துக்குமார்

No comments:

Post a Comment