Friday, June 12, 2020

HBDRaja

இளையராஜாவின் பாடல்களைக் கேட்காமல் தமிழ் நாட்டில் வாழ்வது அரிது. அவரின் இசை நம் நாளங்களை மலர்களைப் போன்று கோர்க்கவல்லது. பெரிதாக இசை ஞானம் ஏதுமில்லை என்றாலும் பெருமளவில் ரசிக்கத் தெரியும். பொதுவாகவே ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு நினைவுகளுண்டு. அந்த இசை காதில் விழுகையில் கொடியை உருவுவதைப் போன்று நினைவுகளை உருவி எடுக்கலாம்.

சமயங்களில் ஒரு சில இசைக்கு நல்ல மணமுண்டு. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடலில் துவக்கத்தில்  வரும் அந்த ஆலாபனை நம் உடம்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் பூ பூ பூக்க வைக்கும். அப்படியே கேட்டபடியே மரணிக்க இசைய முடியும். மயில் போல பொண்ணு ஒன்னு பாடலில் அப்பாடலின் இசையும் பவதாரணியின் குரலும் குழைந்து நம்மைக் குலையவைக்கும்.

பெண்களின் உணர்வை வருடும் பாடல்களாக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது, ராசாவே உன்னை நம்பி, தாலாட்டும் பூங்காற்று நானல்லவா, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரும் என்னடி, மாலையில் யாரோ மனதோடு பேச, சற்று முன்பு பார்த்த என்று இப்பாடல்கள் யாவும் பெண்களின் மனநிலை பிரதி. அவர்களின் காதல் லயிப்பை, ததும்பும் உணர்வை அழகாக இசைத்திருப்பார் ராஜா. இப்படி இன்னும் நிறைய நிறையப் பாடல்களை நமக்களித்த இளையராஜா நம் நிகழ்கால அதிசயம்.

#HBDRaja

No comments:

Post a Comment