ஆனந்தவிகடனில் வரும் ஆர்வமாகப் படிக்கும்படியான ஒரே தொடர் வீரயுக நாயகன் வேள்பாரி பாரி மட்டுமே. சு. வெங்கடேசன் அதை எழுதிவருவதால் சொல் நடைக்கும், சுவாரஸ்யம் திற்கும் குறைவில்லை. வரலாற்றுப் பதிவில் அவர் கல்கியை நெருங்குகிறார் . இயற்கை பற்றி அறிய அறிய வியந்தது ஒருபக்கம் எனில். இத்தொடரின் நாயகன் வேள்பாரியின் மீது காதல் வருகிறது மறுபுறம். ஆதனியை இடம்பெயர்த்துவிடலாமா என்ற ஆவல் வந்துவிடுகிறது. அவனின் திறமையும், வீரத்தின் சான்றும் திக்குமுக்காடச்செய்கிறது .
இயற்கை ஒரு கடல் எவ்வுளவு தூரம் வேண்டுமானாலும் நீந்தலாம் நாம்தான் அயர்ந்து போவோம் நம்மை எப்பொழுதும் வியப்பில் வைத்திருப்பதே அதன் இயல்பு. இலைகளும், கொடிகளும், ஒவ்வொரு மரங்களும் அதன் தன்மைகளும் படிக்கும் பொழுது கண்கள் விரிவதைத் தடுக்க இயலவில்லை. அதற்கு ஈடு கொடுத்தார்போல் விலங்குகளும் அவற்றின் தனித்துவங்களும் அறிய வேண்டிய ஒன்று.
இத்தொடர் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது . முடிவதற்கு முன்பே இதைப்பற்றி எழுதத் தூண்டியது பாரியின் மேல் கொண்ட காதலால். பாரியை வீழ்த்திவிட்டனர் என்பதைப் படித்த பின் எழுத மனமுறாது அதை ஏற்கவும் முடியாதென்பதால் இப்பொழுதே எழுதலானேன். பார் போற்றும் கவிஞர் கபிலர் பேச்சற்றுப்போவார் பாரியின் முன்னால் இதில் புரிந்துகொள்ள லாம் பாரியின் ஆற்றலை. எண்ணிலடங்கா குலங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் காத்துவந்துள்ளான். தலைமைப்பண்பு, மரியாதை, வீரம், காதல், அன்பு, நட்பு, குலச்செருக்கு என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் பாரியை காதலிக்காமல் இருக்க முடியாது ஆண்களாய் இருப்பினும்.
இத்தொடரில் வரும் பெண்களும் மிகவும் வலிமையானவர்கள். .ஆதினி, அங்கவை, மயிலா, குலநாகினிகள் என்று ஒவ்வொரு பெண்ணின் ஆளுமைகளும் ஒருங்கே அமைந்திருக்கும். கொற்றவை குத்தும், ஆடுகளுங்களையும் கண் முன் நிறுத்தியிருக்கிறார் வெங்கடேசன். நீலன், உதிரன்,தேக்கன், வாரிக்கையன் என்று ஒவ்வொரு வரும் தனி சிறப்பு. கபிலருக்கும் பாரிக்கும் நடக்கும் உரையாடலில் சொல்லாற்றல் இன்பத்தில் லயிக்கலாம். வானவியல், கோள் அறிவு என்று அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.
சேரன், சோழன் என்று மாமன்னர்கள் படையெடுத்து வந்தாலும் வீழ்த்த முடியாத பாரியை. குருமன்னர்கள், மாமன்னர்கள், வெளி தேச வணிகர்கள் யாராக இருப்பினும் அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் 'பாரியா அவனை நெருங்க முடியாது' என்பதே. பாரியின் மற்றொரு கவசம் இயற்கையே அரணாகப் பச்சை மலைத்தொடர்.
அப்படிப்பட்ட வீரனை சூழ்ச்சிகளின் மூலம் சாதகமான சூழ்நிலையையும் உருவாக்கி ஒரே நேரத்தில் சேரன், சோழன், பாண்டியன் என்று மூன்று மாமன்னர்களும் பாரியை சூழ்கின்றனர். பாரியைக் காதலிக்கும் என்னால் இதற்கு மேல் நடப்பவை விவரிக்க முடியாது என்பதாலே முடிவைப் படிக்கும் முன்பே எழுதிவிட்டேன். எப்படி இருப்பினும் பாரி ஒரு பார் போற்றும் வீரன் என்பதில் ஐயமில்லை. காலத்தின் சூழ்ச்சியில் பாரியும் தப்பவில்லை என்பது கசப்பான உண்மை. என்றும் என் நினைவிலிருந்து அகலாத காதலனாய் பாரி.