எவ்வுளவு போர்த்திகொண்டாலும்
குளிர்கிறது உன் ஞாபகத்தினால்..
திசைகளற்ற கடலில்
இருக்கிறேன் உனதன்பில்
கண்கள் அயர்ந்தாலும்
கனவுகள் அயர்வதில்லை
பருகப் பருக
வந்துகொண்டே இருக்கிறது
உனதன்புச்சுரபி
குளிர்கால வியர்வையாக
வரும் உன் ஞாபகம்.
மேகத்தை மறந்த வானமென
திளைக்கிறேன்
அறிவீனங்களின் ஆரம்பம்
அன்பு பெருகுமிடம்.
எண்ணாமல்விட்ட
எண்ணங்களெல்லாம்
பின்னால் துரத்துகின்றன.
அகண்ட இருளில்
ஒளிர்கிறது உன் ஞாபகத்தீ.
தனிமைக்கும் உன்
நினைவுகளுக்கும்
என்றும் ஒரு தோழமையுண்டு
என்னை உள்வாங்கிக்கொள்ள.
வெட்கத்தை வெட்டி
போர்வையில் முடிந்தேன்
மோகத்தை போர்திக்கொண்டு
போர்வையை விலக்கலானேன்.
உன் முத்தபெருக்கில்
என் உயிர் மூச்சுவாங்கியது
இடைகால ஆசுவாசம்
உன் அணைப்பு.
விழி மூடி
உயிர் திறந்து
ஒரே சமயத்தில்
மேகத்திலும், காடுகளிலும்
பயணப்பட்டேன்.
கலையாத கனவுகளின்
திறவுகோல்
உன் புன்னகை.
சிரிக்க நினைத்து
சிதைந்த தருணங்கள்
ஞாபகத்தின் பெட்டகத்தில்
கனவுகளை எதிர்கொண்டு.
ஞாபகங்களைத் திறக்காதே
பழைய நீ தெரிந்துவிடுவாய்.
வடுகாய் உன் தடங்கள்
என் மேனியெங்கும்
உனதன்பு.
ஏங்காத மேனியெல்லாம்
கற்களால் ஆனது
சரியான சரிவுகள்
மீளாத இரவில்.
முத்த முடிச்சுகள்
அவிழ்க்கையில்
மெத்தை மேகமாகிறது.
பார்வைகளால் ஆடைகளை
உருவி
மேன்புன்னகையால் மெல்ல
கலைத்தாய்
கரங்களால் ஆகா கிளர்ச்சியை
சொற்கள் தரவல்லது
சற்றும் தலைக்கனமில்லாமல்.
எழுதாத தாளெனக்காத்துகிடந்தேன்
சிறிதும் இடமில்லாமல்
நிரப்பிவிட்டாய்.
நிரப்பிவிட்டாய்.
கிடைக்காத நேரம்
கிடைத்ததால்
கிட்டாத அனுபவம்
கிட்டியது.
எட்டாத துரத்திலிருந்து.
இரவுதான் எத்துணை
கொடுமையானது
உணர்வுகளை மேலிழுந்து
உடலை வருத்துகிறது.
உன் வாசனையை
உட்கொள்ளும் தருணம்
உனக்கானது.
விடியாத விடியல்கள்
கண்டதில்
முடியாது இடைவெளி
சேராத இரவெல்லாம்
இரவென்று யார்
சொன்னது?
No comments:
Post a Comment