Tuesday, May 30, 2017

என் கீச்சுகளின் தொகுப்பு

நிதர்சனத்தின் விரல்பட்டு உடையும் கனவுகள் என்னும் நீர்க்குமிழிகள்.

நிறைவான குறைகள் பல உண்டு.

போராசைகள் என்பது மாபெரும் கனவுகள்.

உங்களை நிருபிக்க ஒன்றும் இல்லையா.. பொய்யே சொல்லுங்க தப்பில்லை.

"உன் வாழ்க்கையில் என்ன சாதிச்ச" என்று கேட்பவரிடம் வாழ்வதே சாதனைதான் என்று சொல்ல தோன்றுகிறது.

நிலைக்கண்ணாடியின் நிலைமை ரொம்ப மோசம் அடுத்தவரை பிரதிப்பலிப்பதே தன் நிலைமை.

மன அழுத்தம் தரும் இரண்டு விஷயங்கள்.. ஒன்று நாம் அடுத்தவரிடம் எதிர்ப்பார்ப்பது, மற்றொன்று அடுத்தவர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது.

நம் பலம் என்பது அடுத்தவருக்கு நம் பலவீனம் தெரியாமல் இருப்பதே.

புயலுக்கு பின் பேரமைதி #புணர்தல்

திரும்புவதுப்போல் திரும்பிவிட்டு மீண்டும் திருப்பி அடிக்கிறது இந்த வாழ்க்கை.

பொய் எல்லாயிடத்திலும் உண்டு உண்மையைப்போல்.

மழை நேரத்து தேனீரில் சுவை அதிகம்.

தனிமை மகத்துவம் என்னும் மகாபாவம்.

ஏமாறுவதற்கெல்லாம் நாளும், பொழுதும் கிடையாது.

சில விஷயங்கள் புரிந்தும், புரியாதது போல் இருப்பது நல்லது
.
பாரம் என்பது மனது பழக்கப்பட்ட ஓன்று.. மகிழ்ச்சிதான் அதற்கு அதிர்ச்சியே..

என்ன பேசினோம்ன்னே தெரியாம மணிக்கணக்கில் பேசியவரிடம்.வருடங்கள் கழித்து நல்லாயிருக்கியா என்பதை தவிர பேச ஒன்றுமில்லை என்பதே காலத்தின் சூழ்ச்சி.

மீண்டும் சிறு தூறல்களுடன் மழை ஆரம்பமாகிறது .. வெளியிலும், மனதிலும்.

வெற்றுப்புன்னகைகள் உதிர்க்கும் மென்மையாக சில சோகங்களை.

தேர்வுகள் என்றும் தோல்வியடைவதில்லை என்றும். தேர்வு எழுதுபவர்களே தோல்வியடைகின்றனர்.

அன்பை உணர்த்திக்கொண்டே இருங்கள் இல்லையேல் உலர்ந்து போய்விடும்.

நாம் நினைப்பதுப்போல் இல்லை வாழ்க்கை அதுக்கும் மேலானது.

நண்பன் காதலனாக மாறுவது மிகச் சுலபம். காதலன் மீண்டும் நண்பனாக மாறுவது ஆகச்சிறந்த சவால்.

ஒருவரின் வலிமையை உடைப்பதே திறமை.

தூரத்தில் தெரியும் உண்மை பொய்யாக மாறிப்போகும்.. அருகில் வந்தவுடன்,கானல்நீர்ப்போல்.

மழை நேரத்து தேனீர் ஓர் குளிர்கால போர்வை.

என் கவிதை தொகுப்பு

இரவுகளில் வரும் நினைவுகள் தரும் 
விடிவதற்கான ஏக்கத்தை.

மழையில் நனையும் ஒரு மல்லிகைப்பூ....
மணம் பரப்பிக்கொண்டே.....
காத்திருந்தது மெத்தையில் மலர.

தள்ளிவிட்டு தள்ளிநின்று பார்ப்பதெல்லாம்.. எல்லலில் சேராது.. 
உன் அழகியலில்.

நீ என்னை பார்க்காதவிட்ட நேரம் யாவும்
நான் உன்னைப்பார்த்த நேரம்.

மழையிலும் வெயிலாகத்  தெரிகிறது உனதன்பு.

என் தாகம் தணிக்க நீ வேண்டும் என்பது,
 என் தேவைகளின் ஒன்றுயென 
 நீ இயல்பாக புரிந்துகொள்வது. 
சொல்லமுடியாத ஓர் அழகியல்.

உன் நினைவுகளைச்  செரிமானம் செய்ய 
ஓர் இரவு போதுமானதாக இல்லை.


உன்னைச் சந்தேகிக்கும் மணித் துளிகள் கூட உனக்கான என் சிலாகிப்புகளே..

கொஞ்சல்கள் யாவும் கெஞ்சும் உன் அன்பின் 
பெருவிழிகளைப்பார்த்து.

வெட்கமெல்லாம் அப்படி 
ஓரமாக இருக்கட்டும்.. 
அணைத்து அனைத்தும் 
முடிந்தபின் எடுத்து 
உடுத்திக்கொள்ளலாம் வெட்கத்தையும்.

கொஞ்சம் கொஞ்சினாலும்,
 வெட்க புன்முறுவல் பூத்து 
அதீத அன்பு சொறிவதே காதல் எனப்படுவதோ.

இணைந்து இசைந்து 
கலந்து கரைந்து 
காணாமல் போனால்தான் என்ன.

பெருகிவந்த அன்பில் நான் முழ்கிய பின் .. 
நேரம் கழித்து கரையைத் தேடுகையில் .. 
களைத்திருந்தாய் நீ.

உன்னை அணைப்பது என் ஆசைகளில் ஒன்று.. 
உனக்கு முத்தம் தருவது என் பேராசைகளில் ஒன்று.

புறம் என்னும் அகம் கலவி.

உன்னில் தொலைவதும், மீண்டும் என்னை தேடுவதும் 
என் அலாதிகளில் ஒன்று.

உன் நினைவுகளில் தேய்ந்துவிட்டேன்.. 
வளர்பிறையாக விரும்புகிறேன். ;-)

காணாமல் போன கனவுகள் எல்லாம் கண்முன் வந்ததுபோல் உள்ளது உன்னைக் கண்டதும்.

என் தவறுகள் உனக்கான நியாயங்கள்.

உன்னைப்பற்றியெல்லாம் சொல்லாமல் விட்டால் அது என் தவறு.. 
உன்னைப்பற்றியெல்லாம் சொன்னால் அது என் மாபெரும் தவறாகிவிடும்.

மழையில் நினைந்த இலைகள் போல் என்மேல் எங்கும் உன் அன்பு.. நீ தொட்டதும் மொத்தமாக உன்மேல் உதிர்ந்தன.

சில்லென்ற ஓர் மழை உள்ளுக்குள் இருக்கும் உன் நினைவுகளை இழுத்து என்மேல் போர்த்துகிறது.

வெற்றுக் காகிதத்தில் எதைக் கொண்டும் 
நிரப்பலாம்..
நான் எழுத்துக்களாக உன்னை நிரப்பினேன்.

குளிர்ந்த காற்றுக்கும்
உன் முத்தத்திற்கும் எப்பொழும்
ஓர் தொடர்பு உண்டு..


உன்னை அணைப்பதே உன்னை வீழ்த்தத்தான்.







.












Friday, May 26, 2017

வடிவேலுவும் மகளும்

நாம் மிகவும் சிரித்த மகிழ்ந்த ஓர் வடிவேலுவின் நகைச்சுவை. அவரின் நகைச்சுவை ஒவ்வொன்றும் அற்புதம்தான் அதிலும் இது இப்பொழுது எனக்கு காட்சிக்கு பொருந்துகிறது. 

அந்த நகைச்சுவை காட்சி காலையில் ஆட்டோ ஒட்ட கிளம்பும் முன் அவர் தன் தாய், தந்தையை ஆரத்தி எடுத்து வழிப்பட்டு, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று செல்வார். மீண்டும் மாலை மதுவை அருந்திவிட்டு அதே பெற்றோரை விரட்டி விரட்டி அடிப்பார். அதே நிலைமைதான் இப்பொழுது எனக்கு.

நன்கு அழகாக கழுத்தோடு கட்டுயணைத்து முத்தமிடுவாள் தொடர்சியாக அன்பிலிருந்து பிழைப்பது அவ்வுளவு கடினம். துரோகத்திலிருந்துக் கூட தப்பித்து விடலாம். அவ்வாறு  முழ்கி திளைப்பேன் அவளின் அன்பில். ஊட்டி விடுவாள், தண்ணீர் பருகச் செய்வாள். ஆனால், நானோ அன்பும் சேர்த்து பருகுவேன். தட்டி உறங்கவைப்பாள் உறங்கிப்போவேன் அவளின் அன்பில். 

அதே மகள் கோபம் வந்தவுடன் கையில் கிடைப்பதில் எல்லாம் அடிப்பாள். அதில், வடிவேலு சொல்வதைப்போல் 'ஜோடியா மிஸ் ஆகுறீங்களா' என்று கேட்பதைப்போல் விரட்டி விரட்டி அடிப்பாள். 

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது பௌண்டரிகளில் இருக்கும் ஃபீல்டர் போல் எப்பொழுதும் நம்மை நோக்கி எந்த நேரமும் பால் வருமென்று அலர்டா இருப்பேன். பெளண்டரிகளை விளாசுவது அவளின் வழக்கம். கைகளில் கிடைக்கும் விளையாட்டு பொருள் அத்தனையும் ஏறிவாள். அப்பொழுது என்னை அடிப்பது அவளின் நோக்கம் அல்ல. அது ஒரு பொழுதுபோக்கு. 

எது எப்படியோ மீண்டும் சொல்கிறேன் வடிவேலு காமெடி வாழ்க்கையில் அத்தனை காட்சிக்கும் பொருந்துகிறது. #VadiveluForLife

Thursday, May 25, 2017

மோகம்

உன் மேல் கொண்ட மோகம் 

தன் பித்தேறி

உன்னில் சரணடைய 

ஆட்டுவிக்கிறது, ஏதேனும் 

ஓர் விழி அசைவில்

நீ அதை சாய்க்கலாம்

உன் அணைப்பில் 

நீ அதை கோர்க்கலாம்

எதுவாயினும் 

அது நீயாக இருத்தல் வேண்டும்

உன்னிலிருந்து வேண்டும்


மகளெனும் கவிதை..

மகளெனும் கவிதை

எவ்வளவு படித்தாலும் முடிவதேயில்லை


மகளெனும் பெருங்காவியம்

எவ்வளவு சாகசங்கள் நிகழ்த்தினாலும் சலிப்பதேயில்லை


மகளெனும் வானவில்

எவ்வளவு வண்ணங்கள் கூட்டினாலும் அழகு குறைவதேயில்லை


மகளெனும் மலர்

எத்தனை முறை மலர்ந்தாலும் உதிர்வதேயில்லை


மகளெனும் பேரன்பு

எவ்வளவு எடுத்தாலும் குறைவதேயில்லை.