Wednesday, February 27, 2019

சுஜாதா நினைவுநாளை ஒட்டி ஒரு பதிவு

#சுஜாவின்நினைவுநாள் ❣❣

முன்குறிப்பு: கொஞ்சம் பெரிசுதான் படிச்சுடுங்க.

சுஜாதாவே என் வாசிப்பின் தொடக்கக்கால எழுத்தாளர். அப்படி ஓர் ஈர்ப்பு உண்டு அவர் எழுத்தின் பால். எழுத்துகளை விரயம் செய்வது அறவே பிடிக்காது அவருக்கு. ஒரு பேராவில் சொல்ல வேண்டியதை ஒரு வரியில் முடித்துவிடுவார். எழுத்தின் நயமும்,  அதில் நகைப்பும் மென்னையாக மலரின் மணம் போல் இழைந்தோடும்.

ஒரு வித்தியாசமான பாணியில் கதையைத் தொடங்குவதும் முடிப்பதும் அவருக்கே உரியப் பாணி. நான்பிக்ஷனையும் எளிதாக பிக்ஷனில் கொண்டு வந்துவிடுவார் என்பது அவர் கட்டுரைகளில் புலப்படும். மிக நவீனமாக  இருக்கும் அவர் எழுத்து நடை. அதிகமான ஆங்கில சொற்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர். சுவாரஸ்யமே அவரின் ஊற்றுக் கண். நாம் ஆயாசமாகிவிடும் இடம் வருவது தெரிந்து அங்கிருந்து ஓர் இழை எடுப்பார் தொடர்ந்து நம்மை இட்டுச் செல்ல. அவரின் குறுநாவல்கள், நாவல்கள், சிறுகதைகள் என்று அனைத்திலும் வியாபித்திருக்கும் அறிவியல். எத்தொன்றையும் சட்டென அறிவியல் பாணியில் விளக்கிவிடுவதில் அவர் ஒரு காட் ஃபாதர். 

காதல் கதைகள், க்ரைம் த்ரில்லர்,  சைன்ஸ் ஃபிக்ஷன் இன்னும் பல இத்தியாதிகளில் புகுந்து விளையாடியவர். என்னளவில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதைகளை முதலில் தமிழில் அதிகம்  அறிமுகப்படுத்தியவர். இனிப்பைக் கண்டால் உற்சாகத்துடன் ஓடி வரும் குழந்தைகள் போல் துள்ளல் உண்டாக்கியது இவரின் எழுத்துக்களே. இவரின் க்ரைம் த்ரில்லர் கதைகளில் வரும் கணேஷ்,  வசந்த் கதாபாத்திரங்கள் பெருவாரியான மக்களைக் கவர்ந்தது. எனக்கும் மிக அணுக்கமான ஒன்றுதான் அப்பாத்திர படைப்புகள். வசந்த் செய்யும் குறும்புத் தனங்கள் . பேசிக்கொண்டே நமக்கு ஊசிப் போட்டுவிடும் டாக்டரை போல் மிக மெல்லிய அடல்ட் ஒன்லி ஜோக்ஸ் இடையில் புகுத்திவிடுவார். கணஷின் இன்டலிஜென்ஸ் என்று ஒரு மாதிரி கலந்துகட்டி க்ளாஸ் ஆகயிருக்கம்.

மூன்று கடிதங்கள் என்ற ஒரு கதை..கடிதம் ஒன்று இரண்டு மூன்று என்று கொடுத்திருப்பார். இதில் எது சரியென புரிந்துக்கொள்ளக் கதை முடிந்த பின்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வெற்றியென்பது வாசகர்களைச் சிந்திக்க விடுதல் அதற்கான ஸ்பேசை சுஜாதா வாரி வழங்குவார். ஒரு லுப் கதையும் உண்டு. உடம்புதான் முடியவில்லையே என்று மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தால் அங்கிருந்து மீண்டு வந்து. அதனையும் பல வண்ண  மாத்திரைகளா அள்ளி நம் மும் வைக்கிறார். அவரின் நிலையை நின்ற மேனிக்கு நகைச்சுவையோடு பரிமாறுவது ஒரு சிறப்பான விருந்து வாசகர்களுக்கு.

அவரின் நேரடி அனுபவமும், அவரின் மைண்ட் வாய்ஸையும் படிக்க சுஜாதாவின் கற்றதும், பெற்றதும் என்ற இதழில்  படிக்கலாம் பாகங்களாக. இந்த இடத்தில் விகடனிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் எனில் அவரை எழுத சொல்லி வற்புறுத்தியதற்காக. இல்லையேல் நமக்குக் கிட்டாமலே போயிருக்கும் ஒரு ஆத்ம சுவை. அவரின் அறிவியல் அறிவை அள்ளிக்குடிக்க சுஜாதாவின்

ஏன்?
எதற்கு?
எப்படி?

படியுங்கள். சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் அன்றி பன்முக வித்தகர் என்ற சொலவடைக்கு இணையாக இருப்பவர். பெல் நிறுவனத்தில் பணி புரிந்து,  இந்திய விமான துறையிலும் பணிப் புரிந்து மற்றும் EVM Electronic voting machine வடிவமைத்துக் கொடுத்தவர். திரையுலகிலும் கால் பதித்தவர். திரைக்கதை , வசனங்கள்  எழுதினார். ஷங்கர் மற்றும் மணிரத்தினம் படங்களில் உடன் பணியாற்றியவர். அவருக்குப் பின் ஷங்கர் படங்களில் ஜெயமோகன் வசனம் எழுதுவதை ஏற்றிருக்கிறார் மனமோ சுஜாதவைத் தேடி மருகுகிறது.

எதுவாகயிருப்பினும் காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துப்போதல் என்று சொல்லக்கூடிய survival of the fittest என்பதற்குச் சரியாக வரக்கூடியவர் சுஜாதா. என் நினைவில் வரும் மற்றொருவர் வாலி இருவருக்குமே சொந்த ஊர் ஸ்ரீரங்கம்தான் மற்றும் இருவரின்  உண்மையான பெயரும் ரங்கராஜன் தான். என்ன ஒரு coincidence பாருங்கள்.  மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காலத்திற்கு முன்பே செல்லக் கூடியவர் அதை அவர் கதைகளில் காணலாம். ஒரு விமான கடத்தல் கதை எழுதிய பின்தான் காத்மாண்டு விமான கடத்தல் நடந்தது கிட்டதட்ட அவரின் கதை போலவே. அதற்கு அவரே பதில் அளித்திருந்தார் நான் என்ன தீர்க்கதரிசியா அப்படியெல்லாம் இல்லை என்றும் உலகில் பல விஷயங்கள் இப்படி பொருந்திபோவதைப் பட்டியல் இட்டு இது எல்லாமே ஒரு தற்செயலாக நடப்பதே இதில் எந்தவித கற்பிதங்களையும் கொள்ள வேண்டாம் என்றார். 

எளிய வழியில் மக்களுக்குச் சேர நிறைய எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், புறநானூறு,  திருக்குறள். மற்றும் சிறுகதை எழுதுவது எப்படி?, திரைக்கதை எழுதுவது எப்படி ? என்று எளிய முறையில் பயிற்றுவிக்கும் நூல்களும் தந்துதவினார். அவரின் வாசகர்கள் அவருடன் தேடி உறவாடுவதும், கோபித்துக் கொள்வதும், அன்பு பாராட்டுவதும் என நடந்தேறியுள்ளது. ஒருவர் அவர் இல்லம் தேடிச் சென்று உங்களின் அனைத்து கதைகளும் பிரசுரம் ஆகிறது என்னோடது என் ஆகவில்லை படித்துக் கூறுங்கள் என்றாராம் அது ஒரு காதல் கதை அதில் போதிய வர்ணனைகள் இல்லாததால் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா? என்றார் சுஜாதா அவர் இல்லை என்றதும். காதலித்துவிட்டு வந்து எழுதுங்கள் என்றார்.
அதன் பின் இவர் சொல்கிறார் He had the last word என்று "நீங்கள் கூடத் தான் கொலைகளைப்பற்றி கதை எழுதுகிறீர்கள்".

ஒருவருடன் உரையாடியதைக்கூட அவ்வளவு அழகாக வடிப்பார். ஒரு புதுமண தம்பதிகளை நலம் விசாரித்ததில் அந்த மாப்பிள்ளை மிகவும்  அலுத்துக்கொண்டார் அவருக்கு எப்பொழுதும் கைகளை நடுவில் இடுக்கி கொண்டு சுருண்டு படுப்பதுதான் பழக்கமாம் இப்பொழுது முடியவில்லை என்று. அதற்கு அவர்  'உங்கள மாதிரி ஆளுங்கதான் சார் இப்படியெல்லாம் எழுதிடுறீங்க ஈர் உடல் ஓர் உயிர்ன்னு'  என்றார். பெரும்பாலான ஆண்கள் அப்படிப் படுப்பதற்கான உளவியல் காரணத்தைக் கூறிவிட்டு. 'அது நான் இல்லப்பா சினிமா பாடல் ஆசிரியர்கள்ன்னு சொன்னேன்'. 'ஒரு வேலை அவர்களுக்கு  இந்த பழக்கம் இல்லையோ என சொல்லிப்பார்த்தேன்' என்றார். அவரின் முதல் கதை வெளியான அனுபவத்தை ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைகளில் வரும் . அவர் வீட்டின் அருகே இருக்கும் கடையில் அவ்வளவு துரிதமாகப்  புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது  எனில் அனைத்தையும் நானே வாங்கிவிட்டேன் என்பார்.

இம்மாதிரி கலந்து கட்டிய காக்டெயில் சுஜாதா. என்னதான் ஜெயகாந்தன்,  ஜெயமோகன், கல்கி, ஜானகிராமன் என்று படித்தாலும் அடுத்த வீட்டுக் குழந்தைகளை எவ்வளவு கொஞ்சினாலும்  மீண்டும் நம் வீட்டுக் குழந்தையை கொஞ்சும் பொழுது ஒரு சகம் வரும் பாருங்க அதுமாதிரி மனம் சுஜாதாவிடம் வந்து நின்றுவிடுகிறது. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு sapiosexual என்று. Yes. I love him because, of his intelligence.

-சுபாஷினி

Thursday, February 21, 2019

தமிழ் திளைத்தல்

தமிழ்பாற்கடலில் சிறு மீனென
நீந்தித் தமிழ் அறிய
முற்படும் திறக்காத சிப்பியாக.
சொற்களில் உலாவிப்
பொருட்களில் புதைந்து
இலக்கியத்தில்  அயர்ந்து
எழுத்துருவங்களில் இயைந்து
சொல்லாடலில் இசைந்து
அதன் தன்மையில் நெகிழ்ந்து
புலன்களைப் புணர்ந்து
எங்குதான் இட்டுச் செல்கிறது
இம்மொழி?
பைந்தமிழ்
பாவலர்தமிழ், செந்தமிழ்
என்று எத்துணை
பெயர்களில் அழைத்தாலும்
எதிலும் அடைத்துவிட முடியாது
ஒளியின் துகளென
நின்தமிழ் நிற்கும்
தூணாக நூற்றாண்டு
அழிவுகளைத் தாண்டி
இடரேதும் இல்லாமல்
தாவரங்களினூடே
ஊடுருவிச் செல்லும்
காற்றென நுழைந்து
எங்கும் நிறைந்திருக்கும்
பிறை நிலவென.
கல் தோன்றி , மண் தோன்றா
காலத்தில் தோன்றிய
தமிழென்பது என்ன
விண் சென்று நிலவில்
குடிபுகுந்தாலும்
நின்றாளும் எம்தமிழ்
பருகப் பருக
முடியாத மிடறாகச்
சுரந்துக் கொண்டே
இருக்கும் செழித்த
தாயின் முலைப்பால்போல்
செருக் உண்டு எனக்கு
தமிழ் குடித்து
இளைப்பாறியதால்
மிடுக்கும் உண்டு
தமிழ் உண்டு வளர்ந்ததால்
சுருங்கச் சொன்னால்
தமிழ் வாசித்தல்
ஒரு சுய இன்பம்.

#தாய்மொழிதின #நல்வாழ்த்துகள்
#சுபாஷினி

Wednesday, February 20, 2019

யுவன் இசையும் பதின்ம வயதும்

இது காதலா முதல் காதலா பாடல் நேற்று கேட்டுக்கொண்டு இருக்கையில் காலம் எப்படி புல்லட் டிரைனில் விரைந்துள்ளது என்று புரிந்தது.  அப்பாடல்  வந்த பொது சரியான பள்ளிப்பருவம் பதின்ம வயது. அப்படியே தேனில் ஊறிய பேரிச்சம் போல் இழைந்துவிடும் மனம் அதில். அது ஒரு காம்போ செல்வராகவன், யுவன், பதின்மவயது..அப்படியே நினைவுகளில் அப்பட்டமாக நிரம்பியுள்ளது.

மெல்ல மெல்ல யுவன் இசை நம் வாழ்க்கையில் நுழைந்த தருணம் அது பாலுக்கு நடைப்போடும் பசித்த பூனைப் போல். உணர்வுகளை மலர் குவியலென  அதன் மென்மையோடு காட்டிய ராட்சத  இயக்குனர் செல்வராகவன் ஒரு புறம்  எனத் தித்தித்த தினங்கள். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7g..மூன்றும் ஒவ்வொரு கிரகத்தின் வாசல். இசையே அங்குக் காற்று. அம்னீஷியா வந்தாலும் sub consious மைண்டல நிற்கும் இப்பாடல்கள். ஒர் இசையை நம்முள் நுழைந்து அவை நிகழ்த்தும் உணர்வு பரிணாமங்கள் இருக்கிறதே அது சொற்களால் சாத்தியமில்லை முழுவதும் கூறிவிட.

இந்த மூன்று படங்களில் முதல் படம் அவ்வளவு கொண்டாடும் விதமில்லை என்று தோன்றுகிறது எனக்கு. அப்படத்தில் ஒரு தற்கொலை காட்சி வரும். படத்தின் முடிவில் தனுஷ் மிலிட்டரி கெட்டப்பில் வருவார் அதை பார்க்கும்பொழுது நமக்கே தற்கொலை பண்ணிக்கலாம் என்று  தோன்றும். ஆனால், அச்சமயத்தில் இப்படியான திரைப்படம் மிகவும் அவசியமான ஒன்று யாரும் தொடாத தீவைப்போல்.

பாடல்கள்தான் நெகிழவைத்தது வயதே வா வா சொல்கிறது, கண்முன்னே எத்தனை நிலவு, என்று ஒவ்வொன்றும்  அருமை. காதல் கொண்டேன்,7g  எல்லாம் என்றும் கொண்டாடும் ரகம் திரைப்படமும் சரி பாடல்களும் சரி. காதல் கொண்டேனில் வரும் அந்தச் சின்ன சின்ன பாடல்கள்  எல்லாம் ஐஸ்கிரீம் குழைவு.

நட்பினிலே நட்பினிலே பாடல்
தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்..பாடல் என்று ஒவ்வொன்றும் கிளாஸ்சிக். காதல் கொண்டேன், 7g தீம் மியூசிக் எல்லாம் குழந்தையின் மழலைபோல் ரசித்துக்கொண்டே இருக்கலாம். யாரும் அற்ற தனிமையில் எனக்கே எனக்கான இசை  உண்டு.

இசை ஓர் உணர்வுக் கடத்தல்,
ஆட்கொல்லி, சமயங்களில் சிறந்த மருந்து, பருக முடியாத போதை.


Tuesday, February 19, 2019

மடவளி

மடவளி  என்று ஒரு புத்தகம் 2017 விகடன் விருது வாங்கிய புத்தகம். நாவிதர்களையும், வண்ணார்களையும் பொதுவாக மடவளி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்நாவலின் பெயர். உள்ளாட்சித் தேர்தலின் ஊடாட்டல் பற்றி அப்படமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் கவிப்பித்தன். தேர்தல் சமயத்தில்  இப்புத்தகம் படித்தது ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது. சரியான தருணம். உள்ளாட்சித் தேர்தல்  என்பது எத்தகைய விஷயங்கள் உள்ளடக்கிய என்பது தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. பணம் பட்டுவாடா  என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால், அதைத் தவிர்த்தே எத்தணை அரசியல் செய்ய வேண்டியுள்ளது.  ஊரில் இருக்கும் அனைவருடனும் உறவாடியே தீர வேண்டும்  என்ற நிர்ப்பந்தம் நோயாளி கட்டாயம் மருந்து எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதைபோல. 

எவ்வளவு சாதுரியமாகக் காய்களை நகர்த்த வேண்டும். எவ்வளவு பணம் தண்ணீர்க்கு மட்டுமே தண்ணீராகச் செலவழிக்க வேண்டும் என்பதெல்லாம் காட்டில்  தண்ணீர் காட்டியதுபோல் இருந்தது. துணிமணிகள், கறி என்று விருந்து படைக்கிறார்கள். தேர்தலில் நிற்பவர்களுக்கு இது போர்களமாகவும் அந்த ஊர் மக்களுக்கு இது மாபெரும் கொண்டாட்டமாகவும் இருக்கிறது. இதனுடே சாதிய ஒடுக்குமுறைகளும், அதன் குறுக்கீடுகளும் இழையே ஓடவிட்டு மனதில் தறி நெய்கிறார் கவிபித்தன். அதில் வரும் காதலுக்கு சாதி வன்முறை வெடிப்பது வெறிக்கொண்டு அவர்களை வெட்டத் தேடும் சாதிய வன்மத்தையும் கண்முன்னே நிறுத்திருக்கிறார். அந்நாவலில் வரும் மனோகரன் என்ற கதாப்பாத்திரம் ஒரு  அப்பாவி மனிதனின் தர்க்கப்பூர்வமாகக் கேள்விகளும், குழப்பங்களிலும் தள்ளாடும் விதம் அருமை. இதுதானே நியாயம்  என்று மனோகரன் கேட்டும் அத்தனை இடங்களிலும் நியாயத்திற்கு விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதை அவன் மனம் எதிர்க்கொள்ளும் விதம் ஆற்றின்  வெள்ளத்தில் சிக்கி தலைக்கு மேல் தண்ணீர்  செல்வதுப்போல் இருக்கும்.

அரசியல் என்பது ஒரு கலை அது அனைவருக்கும் வருவதில்லை. சுட்சமம், வன்மம்,  துரோகம், பகடை என்று அனைத்தையும்  உள்வாங்கிக்கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும்  என்ற இன்றைய நிலையை நிறுத்தியுள்ளார். உண்மையாகவும், எந்தச் சமரசமும்  இல்லாமல் நேர்மையாகவும் நடக்க முயற்சிக்கும் மனோகரனுக்கு மூன்று முறை தோல்வியே ஆரத்தழுவுகிறது. கொஞ்சமும் நாவலின் சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துச் செல்கிறார். இறுதி கட்டத்தில் மனோகரன் வெற்றி பெற வேண்டும்  என்ற படபடப்பு வாசகர்களுக்கு வந்துவிடுகிறது. ஓட்டு எண்ணிக்கையில் மனம் ஜன்னல் காற்றில் பறக்கும் துப்பட்டாவை போல் துடிக்கின்றது. சட்டென  ஒரு வெறுமை சூழ்ந்து முடிகிறது நாவல். சாதிய வன்மங்களும், அதன் நீட்சியும் விடாது தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது நிழலைபோல்.

Wednesday, February 13, 2019

தேநீர் சுவை

உடுத்தாத சேலையின் 
மடிப்பைக் கலைக்கும்
குழந்தையின் குதூகலம்
வந்துவிடுகிறது 
நீ தவிர்க்கையில்
தரப்படும் முத்தம்.


யாதொரு பாவமும்
அறியாது
பாகனின் சொல் கேட்டு
கால்கள் சங்கிலியால்
பிணைப்பட்டு நடந்து
வந்த யானையின்
வாழ்க்கையில்
மதமென வந்தாய்.


கடைசி இரவின்
முந்தைய பகலில்
வந்த மாலையில்
அருந்திய தேநீரின்
நிறம் எப்பொழுதும் 
போல்தான் இருந்தது
ஆனால், சுவை இன்னும் பயணித்துக்
கொண்டு இருக்கிறது.

குளிராமல் இருக்கும் பொழுது
போர்த்திக்கொள்வதுப்போல் உள்ளது
நீ வேண்டாம்
எனும் பொழுது
வரும் உன் ஞாபகங்கள்.

அத்து வானக் காட்டில்
யாருமில்லாமல் பறவையோடு
சிலாகித்திருப்பது
ஒரு நயமான சுகம்
இதனால் வாழ்க்கை 
பயனடையுமா ?
என்றால், இல்லை தான்
ஆனால், அதற்காக
சுகத்தை வேண்டாம்
என்பதா?

வெள் ளெருக்கஞ் செடியின்
விதைப் பூவாக பறக்கும்
தாத்தக்களைப் பிடித்த
சிறுமியின் பூரிப்பு
உணர்வைத் தருகிறது 
நீண்ட நாட்களுக்குப் பின்னான உன் சந்திப்பு.

உயிர் பிழைத்து வா
மாலை வெயில் வாஞ்சையோடு
நினைவுகளை அருந்தி
தேனீர் பகிர்வோம்.

பாதி உறக்கத்தில்
வரும் கனவுப்போல்
எல்லாம் நிகழ்ந்தது.
இருப்பினும் அந்த
மந்தகாச நினைவுகள் 
மங்காமல் கலங்கடிக்கிறது.