Tuesday, February 19, 2019

மடவளி

மடவளி  என்று ஒரு புத்தகம் 2017 விகடன் விருது வாங்கிய புத்தகம். நாவிதர்களையும், வண்ணார்களையும் பொதுவாக மடவளி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்நாவலின் பெயர். உள்ளாட்சித் தேர்தலின் ஊடாட்டல் பற்றி அப்படமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் கவிப்பித்தன். தேர்தல் சமயத்தில்  இப்புத்தகம் படித்தது ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது. சரியான தருணம். உள்ளாட்சித் தேர்தல்  என்பது எத்தகைய விஷயங்கள் உள்ளடக்கிய என்பது தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. பணம் பட்டுவாடா  என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால், அதைத் தவிர்த்தே எத்தணை அரசியல் செய்ய வேண்டியுள்ளது.  ஊரில் இருக்கும் அனைவருடனும் உறவாடியே தீர வேண்டும்  என்ற நிர்ப்பந்தம் நோயாளி கட்டாயம் மருந்து எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதைபோல. 

எவ்வளவு சாதுரியமாகக் காய்களை நகர்த்த வேண்டும். எவ்வளவு பணம் தண்ணீர்க்கு மட்டுமே தண்ணீராகச் செலவழிக்க வேண்டும் என்பதெல்லாம் காட்டில்  தண்ணீர் காட்டியதுபோல் இருந்தது. துணிமணிகள், கறி என்று விருந்து படைக்கிறார்கள். தேர்தலில் நிற்பவர்களுக்கு இது போர்களமாகவும் அந்த ஊர் மக்களுக்கு இது மாபெரும் கொண்டாட்டமாகவும் இருக்கிறது. இதனுடே சாதிய ஒடுக்குமுறைகளும், அதன் குறுக்கீடுகளும் இழையே ஓடவிட்டு மனதில் தறி நெய்கிறார் கவிபித்தன். அதில் வரும் காதலுக்கு சாதி வன்முறை வெடிப்பது வெறிக்கொண்டு அவர்களை வெட்டத் தேடும் சாதிய வன்மத்தையும் கண்முன்னே நிறுத்திருக்கிறார். அந்நாவலில் வரும் மனோகரன் என்ற கதாப்பாத்திரம் ஒரு  அப்பாவி மனிதனின் தர்க்கப்பூர்வமாகக் கேள்விகளும், குழப்பங்களிலும் தள்ளாடும் விதம் அருமை. இதுதானே நியாயம்  என்று மனோகரன் கேட்டும் அத்தனை இடங்களிலும் நியாயத்திற்கு விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதை அவன் மனம் எதிர்க்கொள்ளும் விதம் ஆற்றின்  வெள்ளத்தில் சிக்கி தலைக்கு மேல் தண்ணீர்  செல்வதுப்போல் இருக்கும்.

அரசியல் என்பது ஒரு கலை அது அனைவருக்கும் வருவதில்லை. சுட்சமம், வன்மம்,  துரோகம், பகடை என்று அனைத்தையும்  உள்வாங்கிக்கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும்  என்ற இன்றைய நிலையை நிறுத்தியுள்ளார். உண்மையாகவும், எந்தச் சமரசமும்  இல்லாமல் நேர்மையாகவும் நடக்க முயற்சிக்கும் மனோகரனுக்கு மூன்று முறை தோல்வியே ஆரத்தழுவுகிறது. கொஞ்சமும் நாவலின் சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துச் செல்கிறார். இறுதி கட்டத்தில் மனோகரன் வெற்றி பெற வேண்டும்  என்ற படபடப்பு வாசகர்களுக்கு வந்துவிடுகிறது. ஓட்டு எண்ணிக்கையில் மனம் ஜன்னல் காற்றில் பறக்கும் துப்பட்டாவை போல் துடிக்கின்றது. சட்டென  ஒரு வெறுமை சூழ்ந்து முடிகிறது நாவல். சாதிய வன்மங்களும், அதன் நீட்சியும் விடாது தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது நிழலைபோல்.

No comments:

Post a Comment