Wednesday, February 13, 2019

தேநீர் சுவை

உடுத்தாத சேலையின் 
மடிப்பைக் கலைக்கும்
குழந்தையின் குதூகலம்
வந்துவிடுகிறது 
நீ தவிர்க்கையில்
தரப்படும் முத்தம்.


யாதொரு பாவமும்
அறியாது
பாகனின் சொல் கேட்டு
கால்கள் சங்கிலியால்
பிணைப்பட்டு நடந்து
வந்த யானையின்
வாழ்க்கையில்
மதமென வந்தாய்.


கடைசி இரவின்
முந்தைய பகலில்
வந்த மாலையில்
அருந்திய தேநீரின்
நிறம் எப்பொழுதும் 
போல்தான் இருந்தது
ஆனால், சுவை இன்னும் பயணித்துக்
கொண்டு இருக்கிறது.

குளிராமல் இருக்கும் பொழுது
போர்த்திக்கொள்வதுப்போல் உள்ளது
நீ வேண்டாம்
எனும் பொழுது
வரும் உன் ஞாபகங்கள்.

அத்து வானக் காட்டில்
யாருமில்லாமல் பறவையோடு
சிலாகித்திருப்பது
ஒரு நயமான சுகம்
இதனால் வாழ்க்கை 
பயனடையுமா ?
என்றால், இல்லை தான்
ஆனால், அதற்காக
சுகத்தை வேண்டாம்
என்பதா?

வெள் ளெருக்கஞ் செடியின்
விதைப் பூவாக பறக்கும்
தாத்தக்களைப் பிடித்த
சிறுமியின் பூரிப்பு
உணர்வைத் தருகிறது 
நீண்ட நாட்களுக்குப் பின்னான உன் சந்திப்பு.

உயிர் பிழைத்து வா
மாலை வெயில் வாஞ்சையோடு
நினைவுகளை அருந்தி
தேனீர் பகிர்வோம்.

பாதி உறக்கத்தில்
வரும் கனவுப்போல்
எல்லாம் நிகழ்ந்தது.
இருப்பினும் அந்த
மந்தகாச நினைவுகள் 
மங்காமல் கலங்கடிக்கிறது.

No comments:

Post a Comment