Wednesday, February 20, 2019

யுவன் இசையும் பதின்ம வயதும்

இது காதலா முதல் காதலா பாடல் நேற்று கேட்டுக்கொண்டு இருக்கையில் காலம் எப்படி புல்லட் டிரைனில் விரைந்துள்ளது என்று புரிந்தது.  அப்பாடல்  வந்த பொது சரியான பள்ளிப்பருவம் பதின்ம வயது. அப்படியே தேனில் ஊறிய பேரிச்சம் போல் இழைந்துவிடும் மனம் அதில். அது ஒரு காம்போ செல்வராகவன், யுவன், பதின்மவயது..அப்படியே நினைவுகளில் அப்பட்டமாக நிரம்பியுள்ளது.

மெல்ல மெல்ல யுவன் இசை நம் வாழ்க்கையில் நுழைந்த தருணம் அது பாலுக்கு நடைப்போடும் பசித்த பூனைப் போல். உணர்வுகளை மலர் குவியலென  அதன் மென்மையோடு காட்டிய ராட்சத  இயக்குனர் செல்வராகவன் ஒரு புறம்  எனத் தித்தித்த தினங்கள். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7g..மூன்றும் ஒவ்வொரு கிரகத்தின் வாசல். இசையே அங்குக் காற்று. அம்னீஷியா வந்தாலும் sub consious மைண்டல நிற்கும் இப்பாடல்கள். ஒர் இசையை நம்முள் நுழைந்து அவை நிகழ்த்தும் உணர்வு பரிணாமங்கள் இருக்கிறதே அது சொற்களால் சாத்தியமில்லை முழுவதும் கூறிவிட.

இந்த மூன்று படங்களில் முதல் படம் அவ்வளவு கொண்டாடும் விதமில்லை என்று தோன்றுகிறது எனக்கு. அப்படத்தில் ஒரு தற்கொலை காட்சி வரும். படத்தின் முடிவில் தனுஷ் மிலிட்டரி கெட்டப்பில் வருவார் அதை பார்க்கும்பொழுது நமக்கே தற்கொலை பண்ணிக்கலாம் என்று  தோன்றும். ஆனால், அச்சமயத்தில் இப்படியான திரைப்படம் மிகவும் அவசியமான ஒன்று யாரும் தொடாத தீவைப்போல்.

பாடல்கள்தான் நெகிழவைத்தது வயதே வா வா சொல்கிறது, கண்முன்னே எத்தனை நிலவு, என்று ஒவ்வொன்றும்  அருமை. காதல் கொண்டேன்,7g  எல்லாம் என்றும் கொண்டாடும் ரகம் திரைப்படமும் சரி பாடல்களும் சரி. காதல் கொண்டேனில் வரும் அந்தச் சின்ன சின்ன பாடல்கள்  எல்லாம் ஐஸ்கிரீம் குழைவு.

நட்பினிலே நட்பினிலே பாடல்
தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்..பாடல் என்று ஒவ்வொன்றும் கிளாஸ்சிக். காதல் கொண்டேன், 7g தீம் மியூசிக் எல்லாம் குழந்தையின் மழலைபோல் ரசித்துக்கொண்டே இருக்கலாம். யாரும் அற்ற தனிமையில் எனக்கே எனக்கான இசை  உண்டு.

இசை ஓர் உணர்வுக் கடத்தல்,
ஆட்கொல்லி, சமயங்களில் சிறந்த மருந்து, பருக முடியாத போதை.


No comments:

Post a Comment