Wednesday, April 29, 2020

குருதி ஆட்டம்

வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை அடுத்து குருதி ஆட்டம் படித்தேன் இக்கதைகளில் வரும் மனிதர்களின் பாசாங்கற்ற வாழ்வு, குருதியை நீரென அள்ளித் தெறிக்கும் அலட்சியமான வீரம் என்று அவர்களின் எதார்த்தம் வெகுவாக நம்மை ஈர்த்து அவர்களின் அரிவாள் மேல் இரத்தம் என உறையச்செய்கிறது. கட்டுக்கடங்காத வீரத்தின் ஆற்றலைக் கொடுத்த  வாக்கிற்காக நேர்த்திக் கடன் காசாக முடிந்து கொள்ளும் குற்றப்பரம்பரையில் வரும் வேய்யன்னா மனதில் வேல் கொம்பு பாய்த்து அப்படியே உள்ளிறங்குகிறார்.

குற்றப்பரம்பரை என்ற சட்டம் வெள்ளையர் காலத்தில் குறிப்பிட்ட இனத்தவருக்கென்று இயற்றப்பட்ட  சட்டமாகும். காடுகளில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்த இனம் ஊருக்குள் வந்த பின் செய்வதறியாது களவு தொழிலில் ஈடுபட்டனர். அவர்களைப் பல் வேறு வழிகளில் ஒடுக்க நினைத்து அதில் ஒன்றாக இச்சட்டம். உண்மை என்னவென்றால் திருட்டை விட அவர்களின் வீரமும், ஆற்றலும் ப்ரிடிஷ் அரசாங்கத்தை அச்சுறுத்துவதாக இருந்தது. குற்றப்பரம்பரை நாவலில் ஒரு வசனம் வரும். "எத்தனை கோழைகள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒரு வீரனையும் விடக் கூடாது". என்பதே அவர்களின் கோட்பாடாகவிருந்தது. எனவே, இச்சட்டத்தின் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம் மற்றும் பிணையிலும் வெளியே வர முடியாது. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கச்சேரிக்கு வந்து கையொப்பம் இடவேண்டும் அக்குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்.

வேள் பாரியில் வரும் பறம்பு மலை வீரர்களுக்கு இணையான வீரத்தைக் காண முடிந்தது இவர்களிடத்தில். வேல ராமமூர்த்தியின் மேல் ஒரு விமர்சனம் உண்டு அவரின் கதைகள் சுயசாதி பெருமையைப் பேசுகிறது என்று  அது ஒரு வலதுசாரி மனோபாவம். அதனால், அதைப் புறம் தள்ளி அவரின் எழுத்துக்குள் இறங்குவோம். பட்டவர்த்தனமாகவே அவரின் கதைகளில் அச்சமூகத்தின் அனைத்து நிலையும் விளக்கப்பட்டுள்ளது.

பவா செல்லதுரை அவர்கள் ஒரு கதையாடலின் பொழுது சொன்னார். உண்மையில் இப்படியான கதைகளின் மூலம் நம் சமூகத்தை இழிவு படுத்துகிறான் என்று அவரை கொல்ல அவரின் சமூகத்தினரே முயன்றனர் அதனால் கொஞ்சக் காலம் ஊர் பக்கமே போகாமலிருந்தார் என்றார். களவுக்கு ஆண்கள் போன பின் இரவிலே பெண்கள் மசாலா அரைக்கத் தொடங்கிவிடுவார்கள் காரமும், மணமும் எழுத்தின் வழியே நம் நாசியை அடைந்து நாவில் உமிழ் நீர் சுரக்கும். மதயானை கூட்டம் திரைப்படத்தில் அப்படியே பொருந்திருப்பார் வேல.ரா அந்த செருக்கும் மிடுக்கும் என மிரட்டியிருப்பார். இப்படியான மண்ணின் கதைகள் அவ்வப்போது தேவைப்படுகிறது நம்மை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள.

நோக்கியா 1100

செல்போன் வந்த ஆரம்ப காலத்தில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது நோக்கியா 1100 தான் எங்க குல தெய்வம். பட் எல்லாரிடத்திலும் போன் கிடையாது.  வீட்ல பொதுவாக இருக்க போன்தான் யூஸ் பண்ணணும்.

யாருகிட்டயிருந்தும் மெசேஜ் வருவதில்லை  என்பதால் என் கசின் போன் எடுத்து எனக்கு நானே மெசேஜ்  அனுப்பி திரும்ப என்கிட்ட இருக்கும் போனை எடுத்து நானே ஓப்பன் செய்வதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு . அவன்(கசின்) அசிங்கமா திட்டிட்டு இருப்பான் 'இதெல்லாம் ஒரு பொழப்பான்னு' அதெல்லாம் எங்க கேட்டு கிட்டு.

இப்ப  என்னடான்னா ஓயாம நோட்டிப்பிகேஷன்ஸ் வருது. வாட்ஸ் அப், மெசன்சர், ஃபேஸ் புக் எல்லாத்திலும். கர்மம்  இதையெல்லாம் யாரு பார்ப்பதுன்னு வாட்ஸ் ஆப் எல்லாம் அப்படியே கிளேயர் சேட் கொடுக்கிறது. இதிலிருந்து தெரிய வருவது  என்னவென்றால் அறிமுகமும்,  அதிகமின்மையும் தான் ஈர்கும். அப்புறம் எல்லாமே பொண்டாட்டி பழசான கதைதான்.


சுட்டி டிவி நிகழ்ச்சி

சுட்டிவியில் ஒரு ப்ரோகிராம் டாக்கிங் டாம் அப்படின்னு. அதில் அனைவரும் ஒரு போட்டியில் பங்குபெறுகிறார்கள் பாட்டோ, பேச்சோ எதோ ஒன்று. அந்நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு நிகழ்ச்சியின் ஒருகிணைப்பாளர் பேசுகிறார். 'இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும், தோற்பவர்களுக்கு கிண்டல்களும் வழங்கப்படும்' என்று. என்ன ஒரு அப்பத்தமான statement இது குழந்தைகள் பார்க்க கூடிய நிகழ்ச்சியென்றும் இல்லாமல். தோல்லியுற்றால் கிண்டல் என்பது அக்குழந்தைகளை வெகுவாக வேற மனநிலைக்கு கொண்டு செல்லும். உண்மையில் வெற்றி பெறுவது அல்ல வாழ்க்கை. தோல்விதான் வாழ்க்கை. தோல்வியை பழகமால் வாழ்க்கையை வாழவே முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கும் பொழுது இது தவறான முன்னுதாரணம்.

நாம் பார்க்கும் திரைப்படத்தை அவர்களும் பார்க்கிறார்கள் அதில் திசைத்திரும்பாத குழந்தைகளாயென்றால்.  நாம் பார்க்கும் திரைப்படத்தை அவர்களும் உடன் இருக்கிறார்கள் என்றால் அதில் வரும் தவறான தகவல்களை பிரித்து சொல்ல வேண்டும். சரியான வற்றையும் எடுத்து சொல்ல வேண்டும். எனக்கு இச்சமூதாயத்தின் மேல் இருக்கும் கடமையும், பயமும், நெருடலும் நிச்சயம் குழந்தையும் தெரிந்தே வளர வேண்டும் என்று நினைக்கிறேன்.எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

 மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் இத்திரைப்படங்களை விட கார்ட்டூன் சேனல்கள் மிகச்சுலகமாக அவர்களை கவர்கிறது. அதனால் தான் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அப்படியே திரைப்படத்தை தவிர்த்து குறைந்த பட்சம் செய்தி சேனல்கள் பார்த்தாலே போதும் அதைவிட  அதிகமாக வன்முறையை கடத்திவிடலாம் அப்பட்டமாக. எதுவாக இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் உரையாடுவது மிக முக்கியம்.


ஓஷோ - கதை

ஓஷோவின் புக் படிச்சேன் இங்கிலிஷ்ல. அதில் ஒரு கதை வந்தது. ஒரு கப்புல் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் வரும் பிரச்சனையை எதிர் கொள்ளச் சிரமப்பட்டு ஒரு மகானை நாடுவர். அதாவது கணவர் மட்டும் மகானிடம் சென்று தீர்வை கேட்டு வருவார். அதை மனைவியிடம் சொல்லி implement செய்து வெற்றியும் பெற்று விடுவர். இந்த கப்புலுக்கு வேறு ஒரு முக்கிய பிரச்சனையும் உண்டு. சரியான IC இல்லை என்பது.

மனைவிக்கு மேற்படி பிரச்சனை சரியானது போல். இதுவும் சரியாகிடாதா என்ற அவா. அதனால் கணவனிடம் இதற்கும் மகானிடம் தீர்வு கேட்கச் சொல்லி அனுப்புவார். சரி கழுதை இதையும் கேட்போம் என்று கணவர் சென்று விடையையும் பெற்று விடுவார். அதன் பிறகு இருவரும் அதிமுக்கியமாக மனைவியும் சந்தோஷமாக இருப்பர்.

இருப்பினும் மனைவிக்கு இது எப்படிச் சரியானது அப்படி என்ன சொல்யுஷன் அல்லது மந்திரம் சொல்லிருப்பார் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு. கணவர் குளிக்கையில் எதோ முணுமுணுப்பது கேட்கும் அதை மனைவி ஒட்டுக் கேட்பார். அந்த கணவர் என்ன சொல்லிக்கொண்டிருப்பார் என்றால்.

'she's not my wife, she's not my wife' repeatedly.

Friday, April 24, 2020

தீனா - பாடல்கள்

அக்குபஞ்சர் நீடிலா
துருகி சிக்கன் நூடுலா
அன்பே ஆடை கொஞ்சும்
உந்தன் இடையிலா...

தீனா படத்தில் வரும் காதல் வெப்சைட் ஒன்று பாடலின் வரிகள் எழுதியவர் சாட்சாத் வாலியேதான்.. ஒவ்வொரு வரிக்கும் டெக்னிக்கல் அப்டேட்வரை கொடுத்திருப்பார்.. யுவன் இசை அப்படியே துள்ளலில் வைத்திருக்கும். தீனா படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். அப்பொழுது ஏழாவது அல்ல எட்டாவது தான் படித்துக் கொண்டிருந்த ஞாபகம். அன்றைய தினத்தில் சிடி வாங்கி தான் படங்களைப்பார்ப்பது. திருட்டு விசிடி
தான் சந்தேகமே வேண்டாம். நல்ல ப்ரிண்டாக இருந்துவிட்டால் சாப விமோசனம் தான்.

இப்படத்தில் இன்னொரு பாடல் உண்டு.. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. அதில் சில வரிகள் உண்டு விஜய்சாகர் எழுதியது

காதலிருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே..

இதற்கு என் நண்பர் ஒருவரின் வீட்டில் கடும் கண்டனங்கள் என்று அவர் சொன்னார். 'அது எப்படி கடவுளை இப்படி கேவலமான சித்தரிக்கலாம்?' அவர் கிறிஸ்தவ மதத்தை (எந்த மதமாக இருந்தாலும் சரி) சேர்ந்தவர். எனக்கு அப்பொழுது தோன்றியது இதில் என்ன இருக்கு.. இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறாங்க? கடவுள்தானே இருந்துட்டுப் போகட்டும் என்று. அவர் மேலும் சொல்லுவார் 'எங்க அண்ணன் எல்லாம் அழுது ஜெபம் படிப்பார் 'என்று. இதுவும் புரிந்ததில்லை கடவுளை வேண்டும் போது எதற்கு அழனும்? இதெல்லாம் அப்பொழுதே எழுந்த கேள்விகள்தான்... அப்பவே கொஞ்சம் யோசிக்க பழகியிருக்கேன். பின் வருவது இப்போதைய கேள்விகள். எப்படியும் நாம அழுது, துக்கப்பட்டு, துயரப்பட்டு எல்லா பட்டுவையும் பார்த்திருப்பார் தானே? ஒருவேளை இருந்தால். அப்புறம் எதுக்கு தனியா வேற அழனும்?

சரி அப்படியே தன்னுடைய கஷ்டங்களை சொல்லும் போது அழுகை வந்துவிடுகிறது என்று ஒரு லாஜிக்கை வைத்துக்கொண்டாலும். அவர் அண்ணன் என்று சொல்லிய நபர் கல்லூரி கூட சேரவில்லை என்பதாக ஞாபகம். இவருக்கு என்ன மீளாத் துயர்? அப்புறம் எதற்காக இப்படிப் பொங்க வைக்க வேண்டும்? விளங்கவில்லை.

சரி திரும்ப நாம பாட்டுக்கு வருவோம்.. என் நெஞ்சில் mingle ஆனலே பாடலில்

ஒன் வேயில் தனியாக இருந்தனே
இனி ரன் வேயில் ஜெட்டாக பறப்பனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே..

சார் வாலி சார்.. ❤️

Tuesday, April 7, 2020

கன்னித்தீவு

#கன்னித்தீவு
#நாவல்விமர்சனம்

கன்னித்தீவு நாவலின் அடிநாதமாகக் கடலும், காதலும் மற்றுமொரு தீவும்.. அது என்னவோ தெரியவில்லை எப்படியாவது ஏதோ ஒரு பாணியில் கடல் காதலைக் குடிக்கிறது. எப்பொழுதும் மனித இனத்தின் வியப்பான மாய மிகப்பெரிய நீர் குமிழ் கடல்.  பல தீவுகளை உண்டாக்கி மனிதனைத் தேடலிலே வைத்திருப்பது கடலின் வழக்கம் அல்லது விளையாட்டு. சரி நாவலின் கதாபாத்திரங்களைப் பார்ப்போம். முருகனின் பாலிருக்கும் காதலினால் எதிர்ப்புகளை மீறி  மணந்துகொண்ட பார்வதி. இவர்கள் இருவரும் நாவலின் மய்ய கதாபாத்திரம் இவர்களுக்கு இணையாக மரியா.

முருகனுக்கும் பார்வதிக்கும் இடையே இருக்கும் காதல் காமத்தை வெட்கமுறச் செய்யும் அளவிற்குண்டு. பார்வதி எப்பொழுதும் முருகனின் நினைவில் உழல்வதையே போதையெனப் பருகுகிறாள். //பெண்களுக்குச் சிங்கம் மாதிரி காதலன் வேண்டும், ஆனால் அவன் நாய் போல் அவர்கள் காலடியில் குழைய வேண்டும்// மிகச்சரியா பார்வதியும் அதையே முருகனிடம் எதிர்பார்த்தாள் அதற்கு மிகக் கச்சிதமா பொருந்திப்போனான் முருகன்.பார்வதி நிறை மாத கர்ப்பிணியான பின் அனைத்தும் மறந்து தன் பெற்றோரை அழைக்கும் முயற்சியில் நீண்ட நாட்களுக்குப் பின் தந்தை மகளுக்கான அவ்வுரையால் நெகிழ்ச்சியின் படபடப்பு. முருகனின் பகுத்தறிவு பற்றிய உரையாடல்கள் ஒவ்வொன்றும் அப்லாஸ் ரகம். மற்றும் இன்னும் பிற சுவாரஸ்யமான உரையாடல்களும் ரசனையின் கன்னம். உதாரணமாக

//"நீங்க நான் வெஜ்யா?"

நாங்க பிராமின்.

அதுக்கு இது பதிலில்லையே.//

//கடிகாரத்தில் மணிக்கொரு முறை மணியடிக்கும் தருணத்தை விட இந்த முட்களின் சேர்க்கைக் கணமே என்வரையில் சுவாரஸ்யமானது. முட்கள் ஒரு நாளில் 22 முறை ஒன்றின் மீது ஒன்று படுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் 22 தடவைகள் புணரலாம் என்பதுதான் ஒரு கடிகாரத்திடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.//

//விதிகளை நிரூபிக்கும் விதிவிலக்குகள்//

இந்திய, தமிழக அரசியல், பெரியார், கற்பு, தீண்டாமை என்று அனைத்து தலைப்பையும் தலைகோதியிருப்பது இதமான தேநீர் பருகிய சாயல். கடலில் பயணப்பட்டு விபத்தின் காரணமாக நிறைமாத கர்ப்பிணியான பார்வதி கரை ஒதுங்கும் தீவு நவீன மனிதர்களையும், உலகையும் உள்வாங்க விரும்பாத தனக்கான உலகத்தில் வாழ்ந்து இயற்கையை நுகர்ந்து, உண்டு, களித்திருக்கும் பழங்குடிகளைச் சந்திக்க நேர்கிறாள்.

அத்தீவிலே பார்வதியின் தோழியென அறியப்படும் மரியாவின் நேசம் தாய்ப் பாலின் தூய்மை. பார்வதிக்கும் மரியாக்கும் இடையில் இருப்பது நட்பை மீறிய அன்பின் ஆதுரம். பார்வதி மரியாவின் குழந்தைக்குத் தமிழ் கற்றுத்தர எத்தனிப்பது ஒரு குழந்தையின் அடம். தனியாகக் கழிக்கும் நாட்களில் முருகனின் நினைவுகளைச் சுவாசிப்பது தேகத்தின் தினவைத் தணியச் செய்யும் முயற்சியா? அல்லது  அவன் நினைவின் மூலம் தன் தேகத்தை விழிக்கச் செய்யும் முயற்சியா?

உண்மையில் ஒரு தீவில் உலாவி அங்கிருக்கும் பழங்களை உண்டு, அக்காற்றைக் குடித்து, அம்மேகங்களைத் தரித்து உடுத்தியது போல் ஓருணர்வு. அத்தீவில் ஒரு சுனையை  எழுத்தாளர் யோனிச் சுனை என்று வர்ணிக்குமிடம் எத்தனை உண்மையான இயற்கையின் ஆதி. சுயப்பிரசவத்தின் விவரிப்பு பிரசவித்த  உணர்வையும் ஒருங்கே இன்பத்தையும் தரவல்லது. இப்படியான நவீன மனிதர்களின் அழுக்குப் படாத தீவு புதிதாக பூப்படைந்த பதின் பருவ பெண்ணின் உடலைப் போன்றது. மாண்டு போகச் செய்யும் புதையல்களைக் கொண்டது. ஆகையால் இம்மாதிரியான இடங்களில் அவர்களின் அச்சமென்பது தற்காப்பாக மாறுகிறது. அதன் காரணமாக இத்தீவில் அன்னியர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. முடிந்தவரை அவர்களை அப்படியே விட்டுவிடுவதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி மற்றும் இயற்கைக்குச் செய்யும் நன்றிக்கடன். நவீன மனிதர்களின் சிந்தனைகள் சரியென நாம் பயணப்பட்டுக்கொண்டிருப்பது தேவையான ஆசுவாசம். இந்நாவலின் இறுதியில் எதிர்பாராத அந்த திருப்பு முனை  கருமனின் ஈட்டியெனப் பாய்ந்து இதயத்தின் துடிப்பைச் சுவைக்கிறது.

நாவலிலே எனக்கு மிகவும் பிடித்தமான வரியாக இதைச் சொல்வேன்.

//நிர்வாணத்தை மானத்தோடு தொடர்ப்பு படுத்துவதைத் தான் நாம் கலாச்சாரம் என்கிறோம். //

வாழ்த்துகள் நாவலை எழுதிய சி. சரவண கார்த்திகேயன் அவர்களுக்கு.