Monday, May 13, 2019

இட ஒதுக்கீடு

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் 23 அல்லது 25 வயது உடையவர். அவர் சுயதொழில் செய்துதான் தன் குடும்பத்தைப் பார்த்து வருகிறார். அதற்கு முன் அப்பெண்ணின் அக்கா பார்த்தார் அவர் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதால் இப்பொழுது இப்பெண். இவர்களுக்கு ஒரு தம்பி உண்டு இந்த இளைய பெண்தான் தன் தம்பியை எம்.ஏ வரை படிக்க வைத்தார். அவரின் தம்பிக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் அப்பெண் குடும்பம் கொஞ்சம் தழைக்கும். தம்பி பேராசிரியர் தேர்வு  எழுதி வெற்றி பெற்றார் ஆனால், அரசு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் OC  பிரிவைச் சேர்ந்தவர்கள். எனக்கு அந்த வேலையைச் சார்ந்த தகவல் தெரியாது. அப்பெண் என்னிடம் SC பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக் குறைந்த வருட  அனுபவமே போதும் அரசு வேலை கிடைப்பதற்கு எங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இதனால்  இந்த  SC பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இப்பொழுது  அனைத்து இடங்களிலும் நன்றாக இருக்கின்றனர் எங்களைப் போன்றவர்களுக்கு இதுதான் நிலைமை  என்றார்.

என்னால் முடிந்த வரை இட ஒதுக்கீடும், சாதி அரசியலும் சமூகத்தில் அதன் தாக்கமும் எனச் சொல்லிப்பார்த்தேன்.  உயர் சாதி ஏழ்மையில் கூட இருந்துவிடலாம். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மென்மை நிலையிருந்தாலும் அங்கும் ஒடுக்கப்படுவர் என்றேன். ஒருவாறாக தலையாட்டி வைத்தார். அவருக்கு அவர் தம்பிக்கு வேலை கிட்டவில்லை என்ற ஆதங்கம்.

பேசியதை வேறு  ஒருவருடன் பகிர்ந்த போது அதற்கு அவர் "ஏதோ அந்த பொண்ணு தன் தம்பிக்கு வேலை கிடைகிலன்ற கஷ்டத்தில் சொல்லியிருக்கு. அவ கிட்ட போய் அரசியல் கதை பேசிட்டு வந்திருக்கையே?" அப்படியென்றார்.

எனக்கும் கொஞ்சம் நெருடல் வந்தது தேவையில்லாமல் பேசிட்டனோ என்று. மீண்டும்  ஒரு வாரம் கழித்து அவரை சந்திக்கும் போது அவர் ஒரு குட்டி கதை சொன்னார் எனக்கு.

"ஒரு விசேஷமான கோயில் அக்கா  அது. நாமம் போட்டுயிருந்த ஒரு பெரியவர் போய் அந்த கோயில் பூசாரிகிட்ட எனக்கு ஒரு எலிமிச்சை பழம் வேணும்ன்னு கேட்டார் அதுக்கு அந்த பூசாரி காசு குடுத்தா குடுப்பன்னு சொன்னார். பத்து ரூபா குடுன்னார். இந்த பெரியவர் காசில்லைன்னார். ஆனால், பழம் வேணும்ன்னார். அந்த பூசாரி முடியாதுடார். அதுக்கு இந்த பெரியவர் வெளியே வந்தபடியே அவர் இஷ்டபடி திட்டிட்டே வராரு 'இதுக்குதான் கண்ட கண்டவனெல்லாம் பூசாரியாகப் போடக்கூடாது. இப்படி இவனுங்கள எல்லாம் உள்ள விட்டதால்தான் இப்படி இருக்கு.' அப்படி இப்படின்னு சகட்டுமேனிக்கு திட்டுறார் அக்கா. எத்தனை அயிர்ங்க காசு போட்டாதான் திறுநீரே தராங்க. அப்பத்தான் அக்கா நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சது. எவ்வளவு  உண்மை நீங்கச் சொன்னது".

எனக்கு நெருடல் மறைந்து நெஞ்சம் நிறைந்தது.

உறியடி -2

இம்முறை உறியடி 2 திரைப்படத்தில் எடுத்திருக்கும் விஷயம் ஆலைகளின் நச்சு வாயு வெளியேறி கிராம மக்களைப் பலி வாங்குவது. வழக்கம்போல் இவர்களின் சாதி அரசியலும், பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதென அத்தனையும் உண்மையின் புகைப்படம்.

இவ்வளவு உண்மை எடுக்காதீங்கய்யா அழுக வருது. அந்த நச்சுக் காற்றைச் சுவாசித்து மக்கள் மடிவதும். ஆலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இன்மையால் அதற்கு முன் ஊழியர்கள்  இறப்பதும் பற்றி எரியும் சுயநலவாதிகளின் ஆதிக்கம். நிஜத்தைத் தொட்டுச் சாப்பிட்டது உண்டா நிறையக் கசக்கும் கொஞ்சமாகக் காரம் சமயத்தில் புளிக்கும் அப்படிதான் இருந்தது.

வேறு ஏதுவாக இருந்தாலும் கொஞ்சம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சுவாசிக்கும் காற்றில் என்றால் என்னதான் செய்ய முடியும்? ஒரு அம்மா தன் கை குழந்தையை எங்கு வைத்து மூடி காப்பதெனப் பதறும் அந்த காட்சி நிர்மூலம். இறுதியாக ஒரு அலமாரியில் வைத்து மூடுவார். மூடப்படும் அக்கதவின் பக்கத்தில் ஸ்ரீஸ்டி வரைந்திருக்கும். ஒரு வசனம் வரும் "நீ என்ன வேண்டிக்கிட்ட சாமிகிட்ட" அதற்கு விஜய் குமார் சொல்வார் "நீ நிஜமா இருக்கனும்ன்னு, ஏன்னா எவ்வளவு பேர் உன்ன நம்பிட்டு இருக்காங்க" அப்படியென்று.

எனக்கு எதற்கு அரசியல்  அப்படி என்று சொல்பர்களுக்குத்தான் இப்படம். ஆமாம் "அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் , அரசியல்  உங்கள் வாழ்க்கையில் தலையீடும்" .

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடைய
வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ?" 🔥🔥🔥

நாம சொன்னா யார் கேட்பா

பொள்ளாச்சி வன்கொடுமை பற்றிய உரையாடலில். நான் நண்பருடன் பகிர்ந்தது "முதலில் பிள்ளைகளுடன் முடிந்தவரை உரையாடுங்கள். அவர்களுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் கொடுங்கள். மற்றும் நீங்கள் தர வேண்டிய துணிவு என்பது அவர்களுக்கு "நீ என்ன தப்பு வேணும்னாலும் செய்யலாம். ஆனா, அதை தைரியமாக என்கிட்ட சொல்லனும். அப்படி என்கிட்ட சொல்ல முடியாத தப்புன்னா அதை நீ செய்யாத" என்பதாக இருக்கவேண்டும்  என்றேன்.

இதையே சில காலம் முன்பு கொஞ்சம் மாற்றி வேறு மாதிரி ஒரு மேடையில் பேசியிருந்தார் கரு. பழனியப்பன்  அந்த காணோளி இப்பொழுதுதான் காண நேர்ந்தது. இதையே நான்சொன்னா யாரு கேட்குறா?

இங்கு ஒரு விஷயம்  யாரால் சொல்லப்படுகிறது..மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே இங்கு மிகப்பெரிய அரசியல்.  இதையும் நான்சொன்னா  யார் கேட்பா?

இன்றைய இந்தியா

இன்றைய இந்தியான்னு ஒரு புக் வாசிட்டு இருக்கேன் இன்னும் முடிக்கல. கொஞ்சம் பெரிய புக் 900 பக்கங்கள்.  இந்த புத்தகம் வெளி வந்தது 1940 அதுவும் இங்கிலாந்தில். ஏன்னா இந்தியாவில் இது தடை செய்யப்பட்ட புக். பூராவும் டேட்டாஸ் எடுத்து அப்படியே பைண்ட் பண்ணி வச்சிருக்காங்க.

இத்தனை ஆண்டு கழித்து படிக்கும் பொழுதே  பிரிட்டிஷ்  ஆளுகள குறைஞ்சது நாலு பேருத்தையாவது தூக்கிப்போட்டு
 மிதிக்கலாம்ன்னு தோணுது. நமக்கு அதுக்கு திராணி இல்லதான் பட் அது வேற டிப்பான்ட்மெண்ட் . அப்ப படிச்சா வெறி பிடித்த ஆடுவார்கள் என்பதில் துளியும் சத்தேகமில்ல அதான் பயபுள்ளைக பேண்ட் பண்ணியிருக்கு.

அப்படி பிரிட்டிஷ்  ஆட்சிக்காலத்தை பொத்தாம் பொதுவா அடிமை படுத்தி வச்சிருந்தாங்கன்னு மட்டும் சொல்லி கடந்திட முடியாது என்பது இந்த புக்கத்தகத்தை படிக்கும் பொழுது புரியுது. மொத்தமா சிதைச்சியிருக்கானுங்க இந்தியாவை. வெள்ளக்காரன் ஆட்சியில் இருந்திருந்தாலே நாடு முன்னேறி இருக்கும்ன்னு சொல்றவங்க  எல்லா லைன்ல  வாங்கய்யா.

இந்த புத்தகத்தை முடித்தவுடன் ஒரு முழு பதிவி போடுறேன். இந்த புத்தகத்தை எழுதியவர் (ஆங்கிலத்தில்) ரஜினி பாமிதத். இவர் உலக புகழ்பெற்ற மார்க்சிய  அறிஞர்.  இதை தமிழாக்கம் செய்தது எஸ். ராமகிருஷ்ணன் முதல் பதிப்பு 2008. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

#இன்றைய இந்தியா

அன்பை மட்டும் விதையுங்கள்

சமீபத்தில் காணப்படும் பதிவுகள் அடுத்தவரை விமர்சிக்கிறேன் அல்லது அடுத்தவர் கருத்தை விமர்ச்சிக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மனதில் வைத்து இருக்கும் அத்துணை வன்மத்தையும் இங்கு கொட்டுவது. இது என்ன மாதிரியான மன நிலை என்று புரியவில்லை.

அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் புரியாமல் அனத்துவது. அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறேன் என்று  தன்னை அசிங்கப்படுத
த்திக்கொள்ளுதல். இது எல்லாம்  சரியென்று அமோதிக்க ஒரு கூட்டம் வேறு. ஒரு கட்டத்திற்கு மேல் அக்கூட்டம் யோசிப்பதை நிறுத்திவிடுகிறது. தேமே என்று அவர்கள் எதைச்சொன்னாலும் சரியென்று மனநிலைக்கு வந்துவிடுவது என்ன மாதிரியான வியாதி என்று தெரியவில்லை. முடிந்தவரை அடுத்தவர்களின் உணர்வை மதியுங்கள் அல்லது ஒதுங்கிவிடுங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் வேறானது ஒருக்காலும் உங்கள் வாழ்க்கையோடு ஓப்பீட்டு எதையும் இதுதான் சரியென்ற முடிவுக்கு வர இயலாது. அப்படி முடிவுக்கு வந்தால் அது உங்கள் முட்டாள் தனம். ஒரு விஷயம் உங்கள்  அறிவுக்கோ அல்லது அனுபவத்திற்கோ ஒத்துப்போகவில்லை என்றால் அதை தவிர்த்து போதல் என்பதே பக்குவம்.  முடிந்தவரை அடுத்தவர்களிடம் மென்மையாக நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அன்பை மட்டும் விதையுங்கள். 💕💕

Super Deluxe

ஆரண்ய காண்டம் படம் பார்த்த பிறகு சூப்பர் டிலக்ஸ் படத்திற்காக மிக ஆர்வத்துடன் காத்திருந்தது வீண் போகவில்லை. முதல் காட்சி சமந்தா தன் முன்னாள் காதலுடன் கூடிய பின் அவர் இறந்துவிடும் காட்சி அதைப் பிசகாமல் கணவனிடம் சொல்லிவிட்டால் தவறில்லையா?  என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும். சமந்தா பரிதாபத்தின் பெயராலும், எப்படியோ இவன் இப்படி இருப்பதிற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்று காதலுடன் கூடியது எதார்த்தமாக நடக்கக் கூடியதே. அவள் அதைக் கணவரிடம் சொல்லுமிடத்திலிருந்து இவ்வுண்மை எவ்வளவு தூரம் எப்படி பயணப்படுகிறது என்பதை தி.குமாரராஜா அவர் பாணியில் பொது சிந்தனையாளர்களின் மன வழியே நுழைந்து தன்நிலையில் வெளியேறி வெற்றிபெற்றிருக்கிறார்.

அடுத்ததாக பதின்வயது பள்ளி மாணவர்கள் நான்கு பேர் காணவிருக்கும் நீல படத்தில் தன் தாயைப் பார்த்து வெறித்தனத்தோடு. தாயைக் கொல்ல வரும் அந்த பையனின் மனநிலை பதட்ட உண்மையென்றாலும் தண்டனை தாய்க்கு மட்டுமே இச்சமுதாயம் தரும் என்பது  என்றுமே மறுக்கப்படாத மற்றும் கூடாத விதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு எந்த பண்பாட்டுக் குறையும்  இல்லை. அதில் இடம் பெறுபவர்களுக்கு மட்டும் தான் .  உடனே அப்போது நீல படம் பார்த்தாலே தப்பா என்றால்? இல்லை. ஆனால், அதில் இடம்பெற்றவர்களை மட்டும் பழித்து உங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளவேண்டாம் என்பதே  வேண்டுகோள். உள்ளபடியே தர்க்கங்களை கேள்விக்குறியாக்கியிருக்கிறார் தி.கு. இங்கு சரி தவறு என்று எதுமில்லை. செல்லுமிடத்தில் மட்டுமே தர்க்கம் காக்க போராடுவீர்கள் அவ்வளவே.

மெல்ல உள்ளோடி பார்த்தால். கொஞ்சமெனும் விளங்கும் அடுத்தவரைக் குறை சொல்லவோ, அறம் பிறழ்ந்தார்கள் என்று சொல்லவோ இங்கு யாருக்கும் எந்த தகுதியுமில்லை. அடுத்தவரின் கண்களைக் குத்துவது சுலபம் என்பதாலோ என்னவோ அதை சகட்டுமேனிக்கு செய்கிறோம்.

மூன்றாவதாகக் கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் கொடுத்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து திருநங்கையாக வரும் விஜய். சே. வழக்கமான நடிப்பில் பெண்மையான மிரட்டல். ஆரண்ய காண்டத்தில் கொடுக்காப்புளி கதாபாத்திரத்தை  இங்கு ராசுக்குட்டி இடம்பெயர்த்துவிடுகிறார். அப்பா பெண்ணாகவே வந்தாலும் தன் அப்பா திருப்பி கிடைத்துவிட்ட கொண்டாட்ட மனநிலைதான் படத்தில்  பாஸிடிவ் வைபரேஷன். ராசுக்குட்டியும் அவன் அப்பாவாக வரும் ஷில்பாவும் அன்பு புரளும் இடம் தனித்துவ ததும்புகள். அதுவும் கோபித்துக் கொண்டு கதவின் பின்னாலிருந்து  ஒலிக்கும் அவ்வசனம் அவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி தேநீருக்குச் சர்க்கரை சேர்ப்பது போல் இணைத்திருந்தார் இயக்குநர். "யார் யாரோ கிண்டல் பண்ணாங்க நானும் அம்மாவும் எதனா சொன்னமா? நீ ஆம்பிளையாவோ இல்லை பொம்பளையாவோ எப்படி வேணா இரு. ஆனா, எங்க கூடவே இரு ". "இருந்து தொலை". என்று சொல்கிற அந்த அன்பை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது அது ஒரு வரைய முடியாத  ஓவியம். என்ன ஒரு மனத் தடை  என்றால் அவர் மனைவியாக வரும் காயத்திரியின் நிலை வருந்ததக்கதேயாகும்.

ஒரு திருநங்கையாக எதிர்கொள்ளும் வாழ்வின் அப்பட்டங்களை நிகழ்த்தி நெளிகிற செய்கிறார். காவலராக வரும் பேர்லின்(பக்ஸ்) போன்ற கதாபாத்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றனர் சாலையோர மலங்களைப் போல. அந்த நான்கு மாணவர்களில் காஜி என்ற கதாபாத்திரம் இயல்பாக மனதில் நின்று வெட்கமாகக் கரைகிறார். சமந்தாவின் கணவனாக உண்மை தெரிந்த அவஸ்தையில் பகத்பாசில் கொஞ்சம் ப்ளேவர் சேர்த்திருக்கிறார் அதிலும் பொதுச் சமூக கோபத்தின் வசனங்கள் இன்னும் தேன் சேர்ப்பு. யுவனின் இசை இப்படத்தில் எளிய மனிதர்கள் கடவுளுக்குப் படைக்கும் சாப்பாடு அத்தனை ருசி.

கடவுள் அர்பணைப்பாளராக வரும் மிஷ்கின் போன்ற மனிதர்களுக்கு இச்சமூகமே சாட்சி. ரம்மியாகிருஷ்னனின் வசனம் "சுனாமியின் போது நீ இந்த சிலைய பிடிக்காம ஒரு கரடி பொம்மையை கட்டி பிடிச்சிருந்தா? அதை கும்புடுவியா?" போன்ற வசனங்கள்  இப்படத்தின் நாசி. நிச்சயம் புக் பண்ணலாம் இந்த சூப்பர் டிலக்ஸ்சை. ராவாத்தான் இருக்கும் துணிந்து குடிக்கலாம். மோர் ஊற்றி இறக்கிவிடுகிறார் தி.குமாரராஜா. வாழ்த்துகள்.