பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் நாவல் பிரபாகரன் என்னும் மருத்துவ மாணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிறது. ஒருவர் தற்கொலை செய்வதற்கான சாத்திய கூறுகள் என்று எந்தவரையறையும் யாரும் வகுக்க முடியாது என்பது தற்கொலையை எப்படித் தவிர்க்க முடியவில்லையோ அதே அளவிற்குத் தவிர்க்க முடியாத உண்மை. பிரபாகரனின் நண்பர் என்று அறியப்பட்ட கதைசொல்லிதான் இந்நாவல் முழுவதும் நம்முடன் உரையாடுகிறார். சமயத்தில் நாமே அவராக உணரப்படுவோம்.
இக்கதைசொல்லி பிரபாகரனின் அதே கல்லூரியில் படிக்க நேர்வதால். தற்கொலைக்கான காரணங்களை அறியத் தூண்டப்பட்டு அதை முனைகிறார். அவர் கேட்டறியும் முதல் நபர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் என்று அறியப்பட்ட சதாசிவம். மருத்துவ மேல்படிப்பில் தான் அடைய நினைத்த கல்லூரி கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவர் அதை நிறுவ முற்படுவார். பிரபாகரன் அதிபுத்திசாலி, கொஞ்சம் எல்லோரும் பொறாமைப் படும் அளவிற்கு உயர்ந்தவர் என்பதாலே அவர் இறப்புக்கான கிளைக்கதைகள் ஏராளமாக விரவிக்கிடக்கும். இப்படியான கதை சொல்லித் தேடலில் பல்வேறு தரப்பட்ட நபர்கள் அவர்களின் புனைவு திறனையும் கொஞ்சம் உண்மையும் எடுத்துரைப்பர். வெகு சிலர் தனக்குத் தெரிந்த உண்மையை மட்டுமே கூறுவர் அதில் அவர்களின் ஒரு குற்றவுணர்வு ஜுவாலை தெரியும். இருப்பினும் அதை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு நொந்துக் கொள்ளும் ஜீவன்கள்.
நாவலின் தடம் மனித மனங்களின் வெளி. கதைசொல்லியின் மனமாகட்டும், துப்பு கொடுக்கும் நலன் விரும்பிகள்! ஆகட்டும் அப்படியே மனித மனங்களை போஸ்ட் மார்ட்டம் செய்து நம் முன் வைக்கிறார் மயிலன். கதை சொல்லியின் மனப்போராட்டம், உணர்வுகள், மனித உணர்வுகளின் விவரணை என்று அனைத்துமே ஒரு deep anthropology study. ஃப்ராய்ட் புத்தகத்தில் படித்த இச்சொல் மிகக் கச்சிதமாக இருக்கும் என நம்புகிறேன். 'நனவிலி மனதின் உளபகுப்பாய்வு'. அப்பட்டமாக மனித மனங்களின் உளபகுப்பாய்வே இந்நாவல்.
நம்முடன் இருக்கும் நபர் பொதுவில் நண்பர், உறவினர் ஆவர். அவர்களில் சிலர் எனப் பெரும்பான்மையானவர்களின் எந்த விதத்திலும் உடனிருப்பவர் உயர்ந்து விடக் கூடாது என்று அவர்களுக்குள் ஒரு அலாரம் அடித்துக்கொண்டே இருக்கும். அதை மீறி முன் வந்தால் எதாவது பழிச்சொல்லை அவசரமாகத் தேடுவர். நாவலின் மிகச்சிறந்த வரி //தனக்குள் சரிந்து விழும் தன்னுடைய பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்க, அடுத்தவனின் ஆளுமையை அடியோடு நசுக்க வேண்டியிருக்கிறது// இதுதான் நாவலின் சாரமும் கூட.
மருத்துவத் துறையில் நிகழும் அத்துணை அரசியல், வஞ்சகம், அதிகாரம், இன்னும் பிற இத்தியாதிகளை ஒவ்வொரு குப்பியாக அடுக்கியிருக்கிறார் எழுத்தாளர். மயிலனாக வரும் டிப்பார்ட்மென்ட் ஹெட் தன் அதிகார ஆளுமையின் வேரில் அனைவரையும் முறித்து தன் அகங்காரத்தை நிலை நாட்டிக் கொள்வதெல்லாம் சாடிச லயிப்பு. மருத்துவத் துறையின் நிஜ உலகத்தை வடித்ததின் பெயரில் இந்நாவல் அதற்கானத் தனி முத்திரையைப் பதிக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், வெறும் மருத்துவ உலகின் நூல் என்று சுருக்கினால் அதை உடனடியாக வன்மையாக எதிர்ப்பு தெரிவிப்பேன். ஒரு நல்ல புத்தகம் இன்னொரு நல்ல புத்தகத்தை நினைவுபடுத்தும் என்பர். அவ்வாறாக மனித வாழ்வை, வாழ்வின் முரண்களை, அதில் அவர்களின் நிலைப்பாட்டை என்று படிக்க நேர்கையில் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் அவர் அடுக்கும் கேள்விகளின் பக்கங்கள் நினைவுத் திரியிலிருந்து எரியத் துவங்குகிறது.
செவிலியர்கள் நாஸியா மற்றும் லீமா இருவரும் வலிந்து கூறும் புனைவில் அவர்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலைத் தேடி தன் பழிவுணர்வை கழிக்க முற்படுவது ஒரு பொதுப் புத்தியின் வெளிப்பாடு. இறந்தவர் எப்படியும் சாட்சி சொல்லப்போவதில்லை என்ற கூடுதல் நம்பிக்கை. இவர்களின் சப்பாஷனையை எழுத்தாளர் இப்படி நச் சென்று விளக்குகிறார். // ஒருவர் சொல்லும் உண்மையை நாம் ஏற்காமல் விடுவதைவிடவும், அவர் வலிந்து சோடித்துச் சொல்லும் ஒரு பொய்யை நாம் நிராகரிக்கும்போதுதான்,அவர் அதிகம் சீண்டப்படுகிறார். //
அன்வர் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனின் இக்கட்டான சூழ்நிலையில் உடன் பயணித்தவர். ஓரளவு பிரபாகரனைப் புரிந்து அவனை அரவணைத்துச் சென்ற ஒருவர். பிரபாகரனின் தற்கொலைக்குக் காரணம் குடும்ப பிரச்சனையா, தவறவிட்ட உயர் படிப்பிற்கான கல்லூரியா, காதலா, அதிகார மையத்தின் நையப்புடைப்பா என்று நீளும் பட்டியலில். அன்வர் தானாகவே கன்ஃபஸ் செய்கிறார் நான் அவனைத் தவறவிட்டேன் என்ற குற்றவுணர்வின் வெளிப்பாடாக மதத்தை இறுக்கப் பற்றி இறுகிப் போகிறார். மதம் வலிந்து இவ்வாறான மனிதர்களை ஏற்று தன்னாலானவரை ஆற்றுப்படுத்த முயல்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒருவனின் நம்பிக்கையை உடைப்பதில் அதிக பங்கு மதத்திற்குண்டு. தன்னளவில் தோய்ந்து தோற்றுப்போனதாக அன்வர் நினைக்கிறார். கதைசொல்லிச் சொல்வதைப் போல் பிறர் மாதிரி அடுத்தவரை கைகாட்டாமல் தன்னை கடிந்துகொள்ளும் மாண்பு அன்வருக்கு இருந்தது ஒரு வித நல்லுணர்வு.
தற்கொலை பற்றிய குறிப்புகளைக் கேட்டறிகையில் அவர்களின் உடல் மொழி, குரல், ஆதாரம்,சாதுரியம் என்று ஒவ்வொன்றாக விளக்கி அறிய முற்படுவது ஒரு விசாரணையின் மிடுக்கை அங்கே கொண்டு வந்துவிடுகிறது. டூ மச் ரிஃப்ரன்ஸ்சாக தெரியலாம் நான் இப்பொழுது சொல்வதும் இருப்பினும் இணைக்கிறேன். மைண்ட் ஹெண்ட்டர் என்ற நெட்ஃபிலிக்ஸ் தொடரில். இவ்வாறான குறிப்புகளை வைத்து அவர்களின்(குற்றவாளிகளின்) மன ஓட்டங்களை அறிவர் அக்காட்சிகளும் கண்களில் விரிந்தது. இவ்வாழ்க்கை எப்பொழுதும் அதுவும் நொடிந்த தருணங்களில் தேடுவது ஆதுர தோள்களையும் தனக்கான காதுகளையும். இவையிரண்டும் புறக்கணிக்கப்படும் போதுதான் இம்மாதிரியானவர்கள் உலகையும், மனிதர்களையும், வாழ்வையும் புறக்கணிக்க நினைக்கின்றனர். நாவலில் பிரபாகரன் இறப்புக்கு முன் அவருடன் இருந்த நண்பனின் தற்கொலை பிரபாகரனுக்கு முன்பே தெரிந்தது என்பதும் அதே போன்று பிரபாகரனின் தற்கொலை அன்வருக்கும் முதலே ஒரு உணர்வு இருந்தது என்பதுதான் நாம் இங்கு ஆழ்ந்து, ஆய்வுக்குள்ளாக வேண்டிய விடையம்.
குறைந்தபட்சம் ஒருவர் உடைந்த நிலையிலிருக்கும் போதாவது நமது வன்மங்களையும், ஆற்றாமை களையும் ஒதுக்கிவிட்டு அவர்களுக்குச் செவி கொடுத்து பொய்யாகவெனும் ஒரு அன்பைப் பிரசவியுங்கள் அவர்களின் கரங்களை இறுக்கமாக அணையுங்கள் அவ்வுயிர் பிழைத்துலவட்டும்.
Such a sagacious writing. ❤️
வாழ்த்துகள்
#மயிலன்ஜிசின்னப்பன்
#பிரபாகரனின்போஸ்ட்மார்ட்டம்