Saturday, December 9, 2017

தனிமை

யாருமற்ற நேரம்

ஏதோ ஒரு வருடல் 

தானாய் வரும் தன்னிரக்கம்

பொதுவில் ஒளியும் 

பேய் மனம் 

இயல்பாக நடமாடும்

எதையோ முடித்த

சாதனை உணர்வு

அர்த்தமற்று நாட்களை

கழித்ததாய் உருளும்

உள்மனம்

அற்பமான சில

தருணங்களை

எண்ணி உவகைக்கும்

விடுதலை வேண்டி

கெஞ்சும் மனம்

சிறைக்குள்ளே

கொஞ்சும் சில கணம்

பித்தாகி பிதற்றும்

ஞானியாக

உதிக்கும் சில

எண்ணற்ற முடிவுகளை

எண்ணி களிப்பதும்

முடிவிலியை நினைத்து

மருகுவதும்

இறக்கமற்று நிகழும்

தன்னியல்பாய்

உறங்கிக்கொண்டே

விழித்திருப்பதுப்போல். 

Friday, October 6, 2017

அம்மா இட்லி சாப்பிட்டார்

ஜெயலலிதாவின் மரணம் குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்த வண்ணம் இருந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால். அதை மழுங்கடிக்கும் விதமாக பல நாடகங்களும், நடப்புகளும் நடந்தேறியது தமிழ்நாட்டில்.

மரணமே மர்மம்மான முறையில் என்றிருக்கும் பொழுது. பதவியை பங்கு போட ஆட்டங்கள் நிகழ்ந்தன. அதற்குத்தான் மரணமே என்பது வேறு கதை. இவ்வுளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த அறிவு ஜீவி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றி தெரியவந்தது ஓர் ஆசுவாசமான அதிருப்தி. ஜெ என்ற பின்பம் மட்டுமே நிலைத்திருந்தது. இப்பொழுது அவரின் பெயரையும், ஆன்மாவையும் வைத்து இவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்தால் எப்படி இவர்களை  கையாண்டார் ஜெ என்பது வியப்பளிக்கிறது.

செல்லூர் ராஜாவின் தெர்மோக்கோல் ஐடியா.
சண்முகத்தின் அம்மா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னது பொய் என்ற ஒப்புதல் வாக்கு மூலம்.
டெங்கு கொசுக்கள் ஏசி பஸ்களிலும், ரயில்களிலும் சீட் பிடித்து வருவதாக சொன்ன அரசு அதிகாரிகள்.
மக்கள் வீடுகளில் பயன்படுத்திய சோப்பின் நுரையே நொய்யல் ஆற்றில் வருவதாக சொன்ன தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் கருப்பணன்.

இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையை காட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. இதில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தினகரன் குழுமம் ஒருபுறம். உண்மையில் இவர்களை ஒருபுறமாக கொண்டு வைத்துவிட்டு பழனிச்சாமி திறமையே. இதில் மத்திய அரசின் பங்கு மறுபுறம்.

அம்மாவை அடுத்து சின்னம்மா அலை அடிக்க தொடங்கியவுடன் அதை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை மோடியை சேரும். தர்ம யுத்தம் நடத்திய பன்னீருக்கு நீதி (நிதி அமைச்சர், துணை முதல்லமைச்சர்) கிடைத்துவிட்டது. அவர் யுத்தமும் முடிந்துவிட்டது. கோமாளிகளிடம் நாட்டை ஒப்படைத்த நாம் முட்டாள்களா இல்லை முடிவு தெரியாதவர்களா?.

Friday, September 29, 2017

பழிவாங்கல்

பழிவாங்கல் ஓர் மிகப்பெரிய நோய்.. ஆனால், நிச்சயம் எல்லோரும் அதை கடந்தே வந்து இருப்போம். சரி அடுத்தவர் போல் நாம் ஏன் திரும்ப நடத்திக்கொள்ள வேண்டும் என்றால் நம் தன்மானம் அதற்கு இடம் தராது. நம்மை வீழ்த்தியவரை எப்படி அவ்வுளவு சுலபமாக எதிர்கொள்ளவது என்று மனசாட்சி என்னும் மிருகம் கேள்வி கேட்கும். 

சரி கழுதை அதையே செய்து தொலைப்போம் என்றால் இரு வேறு மனங்கள் உண்டு அனைவருக்கும் அது அதையும் முழுமையாக செய்யவிடாது. எதோ ஓர் உணர்வை மேல் எழச்செய்யும்.அப்படியும் சில சமயங்களில் பிடிவாதமாக முடித்துவிட செய்வோம் . இன்னும் சில நேரங்களில் வெளியே வர முடியாமல்  பழிவாங்கல் என்ற நினைப்பை கைவிடுவோம். 

சாதாரண மனிதனுக்கு இது மிக இயல்பான ஒன்று. ஆனால், ஒவ்வொருவரும் அதனை எப்படி கையாள்கிறோம் என்பதில் ஒளிந்திருக்கறது நம் தன்மை. இறுதில் சொல்ல விழைவது என்னவென்றால் பழிவாங்கல் பாவச்செயல் அல்ல. ஏற்றுக்கொள்ள கூடியதும் அல்ல முடிந்தவரை அதை தவிர்க்கலாம். 

Thursday, July 6, 2017

மழை வெளி..

மழை கொஞ்சம் கூட
சலனமே இல்லாமல் பொழிகிறது
என்னுள், வெளியே வெறும் 
சப்தம் மட்டும்.  


தொடாமல் விட்ட இடம்
படாதப் பட்ட இடம்
வெயில் படாத இடம்
மறைக்க முடியாத இடம்
வெள்ளந்தியாக
ஏதோ ஓரிடத்தில்
தடமில்லாமல் போனால்
அவள்.   

சற்றேனும் குளிர்க்காற்று
பட்டால் உடனே பொழிந்துவிட
எத்தனிப்போடு இருக்கும்
கரும் மேகம்போல்
கோபத்தில் கண்களில்
இருக்கும் நீர்த்துளிகள் .

காரணம் கரையைக் 
கடந்து
சென்றுவிட்டது என்பதற்காக 
அணைப்பை
உடனேவா விலக்கிக் 
கொள்ள முடியும்.

முழுதாக நனைந்த பின்
முக்காடு எதற்கு என்பது
குடைக்கு பொருந்தாது.

அனைவரையும் நிறுத்தி
வைக்கும் சிவப்பு விளக்குக்கு
காரணம் விளங்குவதில்லை
இவர்கள் எதைப் பிடிக்க 
ஓடுகிறார்கள் என்று.

பெரிய பாதிப்போ
சிறிய பாதிப்போ
பாதிப்பிற்கான சுவை
மட்டும் கசப்பு என்பது
மென்மையான உண்மை. 

ஏகாந்த ஓசை ‬
‪என்பது ‬
‪என்னைப் பொறுத்தவரை‬
‪நீ வரும் ஓசை.

காற்றில் அலையும் 
மன்னிப்புகள் செவிகளைச் 
சேராமல் .. பாதத்தில் 
மிதிப்படுகின்றன.

குழந்தைகள் பொம்மையை 
உயிர் உள்ளதைப்போலவும்.. 
உயிர்  உள்ளவர்களை 
பொம்மையைப்போலவும்          

பாவிக்கின்றார்கள்.      
   
  

அனைவரும் மறந்துவிடுகின்றனர்  
அல்லது மறந்துவிட்டதுபோல் 
நடிக்கின்றனர்.. தன் முறையும் 
வரும் என்பதை.

கனவுகள் வராத
நாளில் உன் நினைவில்
இருக்கும் இரவு
தரும் அத்தனை
பகல்களை.

புதுப் புத்தகத்தின் வாசம் போல்  
உன் வாசமும் ஓர் பூரிப்பு உண்டாக்கும்.

வராத கனவுகளும்
வந்துவிட்ட கனவுகளும்
உன்னுடையது.

மனிதன் செய்த 
அத்தனை வன்முறைக்கும்
ஒரே தண்டனை
மழையற்றுப்போனது.

மறுதலிக்க வார்த்தையின்றி
மெளனமானேன்..
அதுவே போதுமென..
முத்த இனிப்பு வழங்கினாய்.

விரும்பி சொன்ன
பொய்களில் நீயும் உண்டு.

மல்லிகை வாசம்
இழந்துப் போகும்
உன் மேல் படர்ந்தால்.

விடியாமல் விட்ட
இரவெல்லாம்
உன் மடியோடு
கிடந்த கணங்கள்.

பொய்துப்போன மழைப்போல்
என்னை அணைக்காமல் விட்டாய்.

ஏதோ ஓர் சாரல்
நினைவுப் படுத்தும்
உன் மழயை.

மல்லிகை வாசம்
இழந்துப் போகும்
உன் மேல் படர்ந்தால்.

விடியாமல் விட்ட
இரவெல்லாம்
உன் மடியோடு
கிடந்த கணங்கள்.

இரவுகளின் தவிப்புகள்
பகலில் நீர்த்துப்போய்விடுகிறது.

பிடிக்காத விஷயங்களை
பிடித்த இரவில்
தொடுக்காதீர்கள்
தொலையட்டும் காற்றில்.

உன் மேல் விழுவதற்காக  
எத்தனை முறை
வேண்டுமானாலும் எழுவேன்.

வெட்கம் தின்று
உன்னை வளர்த்தேன்
என்னுள்,
கொஞ்சம் கூட
மீதம் கிடைக்கவில்லை
நான்.

கரையாத பனித்துளி
காத்திருந்தது
இதழின் மேல்
விழுந்துக் கரைய.

புதிதாய் பூப்படைந்து
நாணம் உற்று
ஓலைக் குடிசைக்குள்
ஒளிந்திருப்பதைப் போன்று
மறைந்திருந்தது
அம்மலர் இலைகளின்னுடே.

எவ்வுளவு நேரம்தான்
வெட்கத்தை உடுத்துவது..என்று உன்னை
உடுத்தத் தொடங்கினேன்.

தொலைந்துப் போன
புத்தகம்
தேடி கிடைக்கும்போது வரும்
மகிழ்ச்சியைப்போல்
சில ஞாபக இடுக்கில்
இருந்து வெளிவரும்
உன் நினைவுகள்
எங்கோ ஓர்
தேவாலயத்தில்
ஒலிக்கும் மணியின்
ஓசை மெலியதாக
செவிகளில் விழுவதுப்போல்
என்னுள் ஏதோ ஓர்
இடத்தில் உன்
அதிர்வு கேட்டுக்கொண்டே
இருக்கும்.

மழை முடிந்து
நேரங்கள் ஆனப்பின்னும்
இலைகளில் தங்கும்
நீர்ப்போல்
உன் நினைவுகள் தங்கியிருக்கிறது
நீ வந்தவுடன்
ஏதோ ஒரு சிறுவன்
கிளைகளை உலுக்குவதுப்போல்
முழுவதுமாக விழுந்துவிடும்
உன்மேல்.

பள்ளி நாட்கள் முடிந்து
முழு ஆண்டு
விடுமுறை நோக்கி
வீட்டிற்கு பயணிக்கும்
குதூகலம் இருந்தது
உன்னை காண
ஆனால், நீயோ
கடைசி பேரூந்தை தவறவிட்ட
பயணியாக இன்னும்
வந்து சேரவில்லை.

தனித்த அறையில்
திடீரென யாரோ வந்து
கதவுடைவதுப் போல் தட்டும்
பதட்டத்தை தந்து என்னை
எழுப்புகிறது உன் நினைவுகள்.

கல்லை குடைந்து
கடவுளையே வடிப்பவனுக்கும்
வறுமையையே பரிசளித்தார்
கடவுள்.

என் மகள் என்னை
நெற்றியில் முத்தமிடும்
கணம் தாயாகிறாள்.

பூட்டி வைத்த
கனவுகளின் திறவுகோலைத்
தொலைத்துவிட்டேன்.

நாத்திகனுக்கு சிரமம்
இல்லை கடவுள்யில்லை என்று
வாழ்ந்துவிடுவான்
ஆத்திகன்தான் பாவம்
இருந்தும் இல்லாமல் இருப்பான்.

ஊளறாமல் விட்ட
உண்மைகள் ரகசியங்களாயின.

பிரிவினைகளின் வாதம்
ஒன்றுதான் அது ரணம்.

பறவைகளின் குதூகலத்தில் தொடங்கி
கொசுக்களின் இறுதிசடங்கில் முடிகிறது நாட்கள்.



























































Wednesday, June 7, 2017

இயற்கை என்னும் கொடை

இளம் வெயில்
மெல்ல அடியெடுத்து
வைத்துத் தன்மேல்
படர்கையில்
வெட்கம் பூத்து
மலரலாம்
என்ற கனவு இருந்தது
மொட்டுக்கு.

எத்தனை யுகங்களை
விழுங்கிவிட்டு
இன்னும் நம் காலில்
வந்து மோதுகிறது
இவ்வலைகள்.

எதையோ ஒப்புக்கொண்டு
அழுகிறது வானம்
வாரியணைத்துக் கொள்கிறது
பூமி.

மலர்களின் வண்ணத்தோடு
போட்டியிடுகிறது வானவில்
முடியாமல்
தோற்று மறைகிறது.

மரம் தன்
அத்தனை கிளைகளையும்
அத்தனை நிழல்களையும்
அத்தனை சுவாசங்களையும்
நமக்குக் கொடுத்துவிட்டு
தனக்கென்று ஏதும் சேமிக்காமல்
செத்து மடிகிறது.

சாயம்போன சேலைப்போல்
உள்ளது வானம் இப்பொழுது
அதை ஆம் என்று
ஒப்புக்கொள்ளக் காத்திருக்கிறது
இலைகளில் நீர்த்துளிகள்
















Tuesday, June 6, 2017

வெயில்

மயில் ஆடி

பல நாட்கள் கண்டிருந்தது

உறைந்துப் போன 

வெயிலின் மிச்சமாக

தாகத்தோடு பார்த்தது 

மான் 

எதையோ விழுங்கிவிட்டு

முடியாமல் கிடந்தது

பாம்பு 

அவ்வுளவுப் பெரிய உடல்

வறண்டப் பாலைவனம் போல்

காட்சியளித்தது யானை

குடுவையில் குனிந்து 

தண்ணீர் தேடும்

ஒரு காகத்தை ஏக்கத்தோடு

எதிர்க்கொண்டது மற்றொரு

காகம்

நீரிலும் வாழும்

பறவை வகைகள் வெறும்

நிலத்திலேயே வாழ 

பழகியிருந்தது  

தணியாத வெயில் 

தணியாத தாகத்தை 

கொடுத்தது

மழை வேண்டி நிற்கும்

பல் உயிரினங்களில்

கடைநிலையில் மனிதன்

தான் முட்டாள் ஆன

தருணத்தை உணர்ந்து

வெட்கத்தோடு மழையை

எதிர்க்கொண்டு.

Tuesday, May 30, 2017

என் கீச்சுகளின் தொகுப்பு

நிதர்சனத்தின் விரல்பட்டு உடையும் கனவுகள் என்னும் நீர்க்குமிழிகள்.

நிறைவான குறைகள் பல உண்டு.

போராசைகள் என்பது மாபெரும் கனவுகள்.

உங்களை நிருபிக்க ஒன்றும் இல்லையா.. பொய்யே சொல்லுங்க தப்பில்லை.

"உன் வாழ்க்கையில் என்ன சாதிச்ச" என்று கேட்பவரிடம் வாழ்வதே சாதனைதான் என்று சொல்ல தோன்றுகிறது.

நிலைக்கண்ணாடியின் நிலைமை ரொம்ப மோசம் அடுத்தவரை பிரதிப்பலிப்பதே தன் நிலைமை.

மன அழுத்தம் தரும் இரண்டு விஷயங்கள்.. ஒன்று நாம் அடுத்தவரிடம் எதிர்ப்பார்ப்பது, மற்றொன்று அடுத்தவர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது.

நம் பலம் என்பது அடுத்தவருக்கு நம் பலவீனம் தெரியாமல் இருப்பதே.

புயலுக்கு பின் பேரமைதி #புணர்தல்

திரும்புவதுப்போல் திரும்பிவிட்டு மீண்டும் திருப்பி அடிக்கிறது இந்த வாழ்க்கை.

பொய் எல்லாயிடத்திலும் உண்டு உண்மையைப்போல்.

மழை நேரத்து தேனீரில் சுவை அதிகம்.

தனிமை மகத்துவம் என்னும் மகாபாவம்.

ஏமாறுவதற்கெல்லாம் நாளும், பொழுதும் கிடையாது.

சில விஷயங்கள் புரிந்தும், புரியாதது போல் இருப்பது நல்லது
.
பாரம் என்பது மனது பழக்கப்பட்ட ஓன்று.. மகிழ்ச்சிதான் அதற்கு அதிர்ச்சியே..

என்ன பேசினோம்ன்னே தெரியாம மணிக்கணக்கில் பேசியவரிடம்.வருடங்கள் கழித்து நல்லாயிருக்கியா என்பதை தவிர பேச ஒன்றுமில்லை என்பதே காலத்தின் சூழ்ச்சி.

மீண்டும் சிறு தூறல்களுடன் மழை ஆரம்பமாகிறது .. வெளியிலும், மனதிலும்.

வெற்றுப்புன்னகைகள் உதிர்க்கும் மென்மையாக சில சோகங்களை.

தேர்வுகள் என்றும் தோல்வியடைவதில்லை என்றும். தேர்வு எழுதுபவர்களே தோல்வியடைகின்றனர்.

அன்பை உணர்த்திக்கொண்டே இருங்கள் இல்லையேல் உலர்ந்து போய்விடும்.

நாம் நினைப்பதுப்போல் இல்லை வாழ்க்கை அதுக்கும் மேலானது.

நண்பன் காதலனாக மாறுவது மிகச் சுலபம். காதலன் மீண்டும் நண்பனாக மாறுவது ஆகச்சிறந்த சவால்.

ஒருவரின் வலிமையை உடைப்பதே திறமை.

தூரத்தில் தெரியும் உண்மை பொய்யாக மாறிப்போகும்.. அருகில் வந்தவுடன்,கானல்நீர்ப்போல்.

மழை நேரத்து தேனீர் ஓர் குளிர்கால போர்வை.

என் கவிதை தொகுப்பு

இரவுகளில் வரும் நினைவுகள் தரும் 
விடிவதற்கான ஏக்கத்தை.

மழையில் நனையும் ஒரு மல்லிகைப்பூ....
மணம் பரப்பிக்கொண்டே.....
காத்திருந்தது மெத்தையில் மலர.

தள்ளிவிட்டு தள்ளிநின்று பார்ப்பதெல்லாம்.. எல்லலில் சேராது.. 
உன் அழகியலில்.

நீ என்னை பார்க்காதவிட்ட நேரம் யாவும்
நான் உன்னைப்பார்த்த நேரம்.

மழையிலும் வெயிலாகத்  தெரிகிறது உனதன்பு.

என் தாகம் தணிக்க நீ வேண்டும் என்பது,
 என் தேவைகளின் ஒன்றுயென 
 நீ இயல்பாக புரிந்துகொள்வது. 
சொல்லமுடியாத ஓர் அழகியல்.

உன் நினைவுகளைச்  செரிமானம் செய்ய 
ஓர் இரவு போதுமானதாக இல்லை.


உன்னைச் சந்தேகிக்கும் மணித் துளிகள் கூட உனக்கான என் சிலாகிப்புகளே..

கொஞ்சல்கள் யாவும் கெஞ்சும் உன் அன்பின் 
பெருவிழிகளைப்பார்த்து.

வெட்கமெல்லாம் அப்படி 
ஓரமாக இருக்கட்டும்.. 
அணைத்து அனைத்தும் 
முடிந்தபின் எடுத்து 
உடுத்திக்கொள்ளலாம் வெட்கத்தையும்.

கொஞ்சம் கொஞ்சினாலும்,
 வெட்க புன்முறுவல் பூத்து 
அதீத அன்பு சொறிவதே காதல் எனப்படுவதோ.

இணைந்து இசைந்து 
கலந்து கரைந்து 
காணாமல் போனால்தான் என்ன.

பெருகிவந்த அன்பில் நான் முழ்கிய பின் .. 
நேரம் கழித்து கரையைத் தேடுகையில் .. 
களைத்திருந்தாய் நீ.

உன்னை அணைப்பது என் ஆசைகளில் ஒன்று.. 
உனக்கு முத்தம் தருவது என் பேராசைகளில் ஒன்று.

புறம் என்னும் அகம் கலவி.

உன்னில் தொலைவதும், மீண்டும் என்னை தேடுவதும் 
என் அலாதிகளில் ஒன்று.

உன் நினைவுகளில் தேய்ந்துவிட்டேன்.. 
வளர்பிறையாக விரும்புகிறேன். ;-)

காணாமல் போன கனவுகள் எல்லாம் கண்முன் வந்ததுபோல் உள்ளது உன்னைக் கண்டதும்.

என் தவறுகள் உனக்கான நியாயங்கள்.

உன்னைப்பற்றியெல்லாம் சொல்லாமல் விட்டால் அது என் தவறு.. 
உன்னைப்பற்றியெல்லாம் சொன்னால் அது என் மாபெரும் தவறாகிவிடும்.

மழையில் நினைந்த இலைகள் போல் என்மேல் எங்கும் உன் அன்பு.. நீ தொட்டதும் மொத்தமாக உன்மேல் உதிர்ந்தன.

சில்லென்ற ஓர் மழை உள்ளுக்குள் இருக்கும் உன் நினைவுகளை இழுத்து என்மேல் போர்த்துகிறது.

வெற்றுக் காகிதத்தில் எதைக் கொண்டும் 
நிரப்பலாம்..
நான் எழுத்துக்களாக உன்னை நிரப்பினேன்.

குளிர்ந்த காற்றுக்கும்
உன் முத்தத்திற்கும் எப்பொழும்
ஓர் தொடர்பு உண்டு..


உன்னை அணைப்பதே உன்னை வீழ்த்தத்தான்.







.












Friday, May 26, 2017

வடிவேலுவும் மகளும்

நாம் மிகவும் சிரித்த மகிழ்ந்த ஓர் வடிவேலுவின் நகைச்சுவை. அவரின் நகைச்சுவை ஒவ்வொன்றும் அற்புதம்தான் அதிலும் இது இப்பொழுது எனக்கு காட்சிக்கு பொருந்துகிறது. 

அந்த நகைச்சுவை காட்சி காலையில் ஆட்டோ ஒட்ட கிளம்பும் முன் அவர் தன் தாய், தந்தையை ஆரத்தி எடுத்து வழிப்பட்டு, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று செல்வார். மீண்டும் மாலை மதுவை அருந்திவிட்டு அதே பெற்றோரை விரட்டி விரட்டி அடிப்பார். அதே நிலைமைதான் இப்பொழுது எனக்கு.

நன்கு அழகாக கழுத்தோடு கட்டுயணைத்து முத்தமிடுவாள் தொடர்சியாக அன்பிலிருந்து பிழைப்பது அவ்வுளவு கடினம். துரோகத்திலிருந்துக் கூட தப்பித்து விடலாம். அவ்வாறு  முழ்கி திளைப்பேன் அவளின் அன்பில். ஊட்டி விடுவாள், தண்ணீர் பருகச் செய்வாள். ஆனால், நானோ அன்பும் சேர்த்து பருகுவேன். தட்டி உறங்கவைப்பாள் உறங்கிப்போவேன் அவளின் அன்பில். 

அதே மகள் கோபம் வந்தவுடன் கையில் கிடைப்பதில் எல்லாம் அடிப்பாள். அதில், வடிவேலு சொல்வதைப்போல் 'ஜோடியா மிஸ் ஆகுறீங்களா' என்று கேட்பதைப்போல் விரட்டி விரட்டி அடிப்பாள். 

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது பௌண்டரிகளில் இருக்கும் ஃபீல்டர் போல் எப்பொழுதும் நம்மை நோக்கி எந்த நேரமும் பால் வருமென்று அலர்டா இருப்பேன். பெளண்டரிகளை விளாசுவது அவளின் வழக்கம். கைகளில் கிடைக்கும் விளையாட்டு பொருள் அத்தனையும் ஏறிவாள். அப்பொழுது என்னை அடிப்பது அவளின் நோக்கம் அல்ல. அது ஒரு பொழுதுபோக்கு. 

எது எப்படியோ மீண்டும் சொல்கிறேன் வடிவேலு காமெடி வாழ்க்கையில் அத்தனை காட்சிக்கும் பொருந்துகிறது. #VadiveluForLife

Thursday, May 25, 2017

மோகம்

உன் மேல் கொண்ட மோகம் 

தன் பித்தேறி

உன்னில் சரணடைய 

ஆட்டுவிக்கிறது, ஏதேனும் 

ஓர் விழி அசைவில்

நீ அதை சாய்க்கலாம்

உன் அணைப்பில் 

நீ அதை கோர்க்கலாம்

எதுவாயினும் 

அது நீயாக இருத்தல் வேண்டும்

உன்னிலிருந்து வேண்டும்


மகளெனும் கவிதை..

மகளெனும் கவிதை

எவ்வளவு படித்தாலும் முடிவதேயில்லை


மகளெனும் பெருங்காவியம்

எவ்வளவு சாகசங்கள் நிகழ்த்தினாலும் சலிப்பதேயில்லை


மகளெனும் வானவில்

எவ்வளவு வண்ணங்கள் கூட்டினாலும் அழகு குறைவதேயில்லை


மகளெனும் மலர்

எத்தனை முறை மலர்ந்தாலும் உதிர்வதேயில்லை


மகளெனும் பேரன்பு

எவ்வளவு எடுத்தாலும் குறைவதேயில்லை.

Tuesday, April 25, 2017

ஒரு மனதில் இருவர்

அதெப்படி ஒரு பெண் இரண்டு பேரை விரும்ப முடியும் என்பது கேள்வி.

 இப்படி வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள். (இதில் நீங்கள் என்பது  
இருப்பாலரும்) அவரை மணம் முடிக்க முடியாமல் போய்விட்டது. பின் வேறொருவை மணந்து நடைபெறும் வாழ்க்கையில் வாழ்க்கையோடு கலந்தும்(கடந்தும்)விட்ட அவரை நேசிக்காமல் இருக்க முடியாது. அதேப்போல் நாம் ஒருவரோடு வாழ வேண்டும் என்று ஏங்கியவரை வெறுக்க இயலாது. என்றேன்றும் நிலைத்திருக்கும் அக்காதல். இதை ஏற்பவர் சிலர் மறைப்பவர் பலர். காதலித்து மணப்புரிந்தவர்களின் தேர்வும் சமயங்களில் தவறுவதுண்டு அப்பொழுதும் நாம் தவறவிட்ட சில உறவுகளும் உண்டு.

  இதன் புரிதல் இல்லாமல் அதைக் கள்ளக்காதல் என்று பிதற்றுவது காதலைக் கல்லாமையின் விளைவு அது. பொதுவான கண்ணோட்டத்தில் அதைப்பார்த்துப் பழிப்பது இயல்பாகிவிட்டது. காதலின் தேடல்கள் எங்கு முடியும் என்று நினைக்கிறீர்கள்?  காமத்தில்தான் அதில் எந்த ஐயப்பாடுமில்லை. இல்லையென்று பெயரளவில் மறுக்கலாம். ஆக, கலவிதான் வாழ்க்கையா என்றால் சமயங்களில் ஆமாம் என்பதே பதில். பெண்கள் தனக்கு வேண்டியதைத் தயங்கியே சொல்ல வேண்டியுள்ளது அல்லது சொல்லாமல்யிருப்பது இவ்விஷயங்களில். இன்றளவும் அதற்கான காரணம் ஆண்கள் பெண்களைக் கையாளும் விதம். "என் வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன்" என்பது தாம்பத்யத்தையும் குறிக்கும்.

  குறுகிய மனம் கொண்டு இதை அணுகினால் உவர்ப்பாகவே இருக்கும். இதில் என்ன தவறு  இது அவளின் வாழ்க்கை, அவளின் தேவை, அவளின் நீட்சி என்பது புரிந்தால் பேதமில்லை. அவளின் உணர்வுகள் நிராகரிக்கப்படுகிறது அல்லது மதிப்பதேயில்லை என்னும் சூழலில் தன் உணர்வுகளைக் கொட்ட ஓர் உறவின் வெளித்தேவைப்படுகிறது. அவளின் தேவையைக்  கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே மனிதர்களின் இயல்பு.  பெண்ணிற்கு மட்டும் விதிவிலக்கா?

 "சிக்மண்ட் ஃப்ராய்ட்" பற்றிப் படித்திருந்தீர்கள் என்றால் கொஞ்சம் புரியும் அதிகப்படியான மனநோய், நிரம்பியல் நோய்கள் என நோய்கள் வருவதிற்கான காரணங்கள் பாலுணர்ச்சி என்பதே அவரின்  கோட்பாடுப் பல அய்வுகளின் பெயரில் வெளியிட்டார். வழக்கமாகப் பல பாராட்டுக்களும் , எதிர்ப்புகளும் ஒருசேர அவருக்கு வந்தது. அது ஒர் உளவியல் ரீதியான பிரச்சனை என்பது இங்குப் பலருக்கும் புரிவதில்லை. அதை இழிவாகப்பார்த்து மிகச் சுலபமாகக் கொச்சைப்படுத்திவிடுகின்றனர். அப்படிச் சொன்ன ஃப்ராய்ட்தான் father of psychology. பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, தேவைகள் உண்டு, ஆசைகள் உண்டு என்பது புரிந்தால் நலம்.


Tuesday, April 18, 2017

கோடைக்காலப் பயணம்

இம்முறை கோடைப்பயணம் செல்ல வாய்ப்புக்கிடைத்தது கொடைக்கானல் மற்றும் மூணார். அதில் ஏற்பட்ட குளுமையான அனுவப்பதிவு. எங்களுக்கு சொந்தமான டஸ்டர் காரை என் கணவரே ஓட்டிச்சென்றார் சென்னையிலிருந்து மூணார் 600km. முன்னதாகவே கொடைக்கானலில் ரூம் புக் செய்துவிட்டோம் எங்களுடன் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.


 சென்னையிலிருந்து கொடைக்கானல் 430km என் கணவருக்கு மட்டுமே ட்ரைவ் பண்ண தெரிந்திருந்ததால் அவ்வுளவு தூரம் ஒருவரே ஓட்டுவது என்பது கடினம். ஆகையால், 12/04/17 அன்று மாலை 4.30 மணிப்போல் தொரைப்பக்கம், சென்னையிலிருந்து கிளம்பி திருச்சிக்கு இரவு 10 மணிக்கு சென்று தங்கிவிட்டோம். 1000 ரூபாய் நான்ஏசி ரூம் ஓக்கே நன்றாகத்தான் இருந்தது. காலை 9.30  மணிப்போல் மீண்டும்  பயணப்பட்டோம் திண்டுக்கல்லை நெருங்கியவுடன் பதநீர் , கருப்பட்டி டீ , இளநீர் என்று நம் சூழலே மாறியது. கொடைக்கானல் கிழிருந்து மலை ஏறுவதுக்குள்ளான தூரம் 43km.

  மலைகளின் இளவரசி கொடைக்கானலை வந்தடைந்தோம் மணி மூன்றாகி இருந்தது சாப்பிட்டுவிட்டு லேக் பார்க்க கிளம்பினோம். சீசன் என்பதால் அதிக கூட்டம். ரம்யமான அழகு நிறைந்திருந்தது எங்கும் மகிழ்ச்சி மேளங்கள் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு.போட்டிங் முடித்துவிட்டு நேரமிருந்தமையால் சைக்கிள் வாடகைக்கு எடுத்து முழு ஏரியையும் சுற்றினோம் ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாய். உண்மையில் ஓர் நல்ல அனுபவம் குளுமையான காற்றுடன் மிதித்துக்கொண்டே செல்வது அற்புதமான உணர்வு. 

  காலையில் குணா பாறை, பைன் போரெஸ்ட் ,வியூ பாண்ட் போன்ற இடங்களை பார்த்தோம். கொடைக்கானலில் சோலார் அப்சர்வேட்ரி லேப் இருந்தது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டியது.ஹோம் மேட் சாக்லேட்ஸ் இங்கு மிகவும் பிரசித்தி கால் கிலோ 80 ரூபாய் சாக்லேட்ன் விலையும் இனித்தது.வழக்கமான மலைப்பிரதேசம் பழங்கள் கிடைக்கும். குப்பை போன்று பெருக்கிவிட்டது தங்கும்விடுதிகள். வழி எங்கும் கேப்களும், கைட்களும் புகையாக நம் மேல் பரவுகின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் குறைந்தவர்கள் இல்லை மக்கள் திருந்தவேமாட்டார்கள் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டிலும் , கவர்களும் மிதக்கின்றன.

 14/04/17 அன்று மாலை  மூன்று மணிப்போல் மலையிறங்க தொடங்கிவிட்டோம். தேனீயில் ஜூஸ் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்தோம் அடுத்து போடி, போடிநாயக்கனுர் என்று வந்துது போடி கடந்தவுடன் மலை ஏற தொடங்கியாகிவிட்டது 85கிம் மலைப்பிரதேசம்தான் அதுவும் இரவில் பயணித்தது அட்வன்சர் போல்தான் இருந்தது. என் இரண்டு வயது மகளுக்கு கொஞ்சம் முடியாமல் வாந்தி வந்ததால் இன்னும் தாமதமாகத்தான் மூணார் சென்றடைத்தோம். வழியில் ஓர் செச்சி கடையில் அப்பமும் கொண்டக்கடலையும் சாப்பிட்டோம். போடிமெட்டு கேரளாவை சேரும் வழிகளில் சிறு கிராமங்களும் தேயிலை தோட்டமும் காணப்பட்டன. தமிழ்நாட்டு எல்லையை தாண்டினாலும் அங்கங்கே தமிழ் பலகைகள் காணநேரிடுகிறது.  

   இரவு 10 மணிக்கு மூணார் அடைந்தோம் மூணாரின் மையப்பகுதியிலே சங்கீதா என்ற தமிழ்நாட்டு உணவகம் ஒன்று உள்ளது (நீங்கள் நினைக்கும் சங்கீதா இல்லை) இங்கு நம்மூரில் கிடைக்கும் இட்லி, தோசை கிடைக்கும். சீசனில் 1000 ரூபாgய் ரூமை இரண்டாயிரம் என்று சொல்வதுண்டு அதுப்போல விலைக்கு ஏற்றாற்போல். அதிகம் கலைத்ததால் கொஞ்சம் தாமதமாகத்தான் காலை கார் புக் செய்து  கிளம்பினோம்.ஸ்பைசஸ் பிளாண்ட்ஸ் என்று தனியாக தோட்டம் வைத்து உங்களுக்கு இயற்கை மருந்துகளின் பெருமையை சொல்லி முடிந்தவரை உங்களை வாங்கவைப்பர். இயற்கை மருந்து நன்றுதான் அலோபதிக்கு இது ஆயிரம் மடங்கு நன்று ஆனால்,விலை இயற்கை எய்வதுப்போல் உள்ளது என்பது வருந்தத்தக்கது.


   யானை சவாரி தவறுதான் இருப்பினும் ஓர் ஆர்வம் காரணமாக சவாரி செய்தோம். உள்ளுக்குள்  ஓர் பயம் சீசன் என்பதால் இரண்டு நாட்களாய் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறதாம் லைட்டா கோபப்பட்டாக்கூட அவ்வுளவுதான். எங்கும் பணம் வியாபித்து இருக்கு ஒருவருக்கு 400 ரூபாய். அழகான மலைச்சரிவுகள் தேயிலை தோட்டம் படிகள்போல் அமைந்துள்ளதை பார்க்கையில் இறங்கி ஓடவேண்டும் போலுள்ளது.மலையின் உயரம் காண முற்படுகையில் மேகம் மறைக்கும் மோகம் கொண்டு. ஓர் ஜீப் சவாரி கொண்டுசெல்கிறார்கள் காட்டுப்பாதைகளின் ஊடே நீர்வீழ்ச்சி , டேம் என்று கூட்டிசெல்கின்றனர் ஓர் பெரியமுதலை  வாயினுள் சென்று வெளிவருவதுப்போல் உள்ளது. தேமேயென்று சில பார்க்குகளும், வியூ பாயிண்ட்களும் இருக்கும். அந்த ஜீப் சவாரிக்கு 4000 ரூபாய் சொல்லி இறுதியில் 3500 ஒப்புக்கொண்டனர். கேப்க்கு 1500 ரூபாயும் 100 டிப்ஸும் .


   மீண்டும் சாப்பிட்டுவிட்டு இரவு  7.30 மலையிறங்க தொடங்கினோம் இருக்கவே இருக்கு கூகுள் மேப் அப்படி வரும் போது ஓர் பாதை 15கிம் கிட்ட ஜீப் மட்டும் செல்லக்கூடிய பாதையாக இருந்தது என்ஏஹ்லிருந்து விலகிவந்து மீண்டும் சேர்க்கிறது அப்போது எனக்கு பேஸ்புக்கில் பார்த்த ஓர் புகைப்படம் ஞாபகம் வந்தது கூகுள் மேப் நம்பி சென்றால் மலை முக்கில் கார் நிற்கும். கேட்டால் ஷார்ட்டெஸ்ட் பாத் என்று சொல்லும். போகும்போது  எப்படியோ அப்பாதையை தவறி சரியாக சென்றுவிட்டோம். மைனா படம் அங்குதான் எடுத்தது. பரதேசி மூணாரில். எப்படியோ சில ஆயிரங்களை செலவு செய்து குளுமையை அனுபவித்தாகிவிட்டது டீசலுக்கு இணையாக டோல் கட்டணும் எங்கும் கட்டணம் எதிலும் கட்டணம். இந்த வெயிலுக்கு இனிமையான பழசாறு இவ்விடங்கள். நன்றிகள் பல என் கணவருக்கும் டஸ்டருக்கும்.





Wednesday, April 5, 2017

அறம் என் அனுபவத்தில்.

அறம் என்ற புத்தகம் ஜெயமோகன் எழுதிய உண்மை மனிதர்களின் கதைகள். வாழ்க்கையை அறையும். ஒவ்வொரு கதை படித்த பின்னும் அதிலிருந்து மீள்வது ஓர் சவால்.

அதில் வரும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை ஓட்டமும். இந்த உலகம் அவனை இட்டு செல்லும் தூரமும் அப்படமாக வடித்தியிருப்பார். உண்மையில் ஓர் கதை படித்தால் ஒருநாள் எனும் இடைவெளி வேண்டும் அடுத்ததை தொட துணிந்து பாருங்கள் என்பதைப்போன்று இருக்கும்.

அந்த புத்தகத்தில் வரும் கதைகள் பெரும்பாலும் திருவனந்தபுரம், கன்னியாகுமாரி, நாகர் கோயில் சுற்றுவட்டாரங்களை ஒட்டியது. அந்த அழகிய  தமிழ் என்னை மிகவும் பற்றியது. சரியாக சொல்லவேண்டுமெனில் "தாயாளி" என்னை அதற்கு ரசிகையாக மாற்றிவிட்டார் இந்த ஜெயமோ.

எவ்வுளவு சாதி பிரிவுகள் எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும், எப்படியெல்லாம் அடிமைப்பட்டுகிடந்தனர் என்பதையும் விவரித்துயிருப்பார். நாயாடிகள் என்ற சாதியை பற்றிய உண்மைகள் என்னை கலங்கடிக்கச்செய்தன. "அலைந்து திரியும் குறவர்களின் ஓர் பிரிவு. இவர்களை பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாட முடியாது" 'நூறு நாற்களில்' என்ற கதையில்.

அய்யர், நாடார், நாடர்களின் உட்பிரிவுகள்,பிள்ளைவாள், கோட்டி இப்படி எண்ணற்ற சாதி பிரிவினைகளின் தர்கங்களும், தரவுகளும் பதியப்பட்டுள்ளது. "உடம்பில் வயிறு தவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை. கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்குப் பிடித்த தீ போன்றது பசி" 'வணங்கான்' என்ற கதையிலிருந்து.

இப்படி சொல்வதாய் இருந்தால் நான் திரும்பவும் அந்த புத்தகத்தையேதான் மறுபதிப்பகம் செய்யவேண்டும்.இருந்தும் எதற்கு உரைத்தேன்யென்றால் உங்களுக்கு ஓர் புரிதல்காகதான்.இந்நூலில் அவர் உரையாடிய உறவுக்கொண்ட எழுத்தாளர்களும் அவர்களின் வாழ்க்கைமுறையும் இரு வேறு கதைகளில் வருகிறது. எழுத்தாளர்களின் உரையாடலில் வரும் இலக்கியமும், கவிதையும், சொல் நயமும் அமுதுறச்செய்யும்.

ஒரு சில விஷயங்கள் வியப்பில் ஆழ்த்தும் பிறகு அது பழகிவிடும் அளவிற்கானது இப்புத்தகம். என்னை அதிகம் பாதித்துயிருக்கிறதா இல்லை அதிக பாத்திருப்புக்குள்ளாக்கும் புத்தம்தானா என்பது நீங்கள் படித்து உணரவேண்டியது. 'யானை டாக்டர்' ஓர் அருமையான அனுபவம் யானைகளின் மேல் நடந்ததை போன்ற உணர்வு அதிலும் டாக்டர் கே என்கின்ற கிருஷ்ணமூர்த்தி அருமையான மனிதர் யானையையே வென்றவர்.

'ஓலைச்சிலுவை'  என்ற கதையில் நம் நாட்டில் கிருத்துவம் நுழைந்த விதமும் டாக்டர்
 சாமர்வேல் என்ற அற்புதமான மனிதரின் அற்பணைப்பும் திறம்பட கையாண்டுயிருக்கிறார்.எளிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறார்.'கோட்டி' என்ற கதையில் பூமேடை என்கின்ற தனி மனிதர் தன்னலம் இன்றி இறுதிவரை அடுத்தவருக்காக வாழ்ந்து தன் அனைத்து சொத்துக்களையும் இழந்தவர். சுதந்திர போராட்ட தியாகியும் கூட எதற்கு அஞ்சியும் வாழாமல் தனியாகவே போராட்டங்களை நடந்தியவர்.ஒரு தனி மனிதனால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.

அதேப்போன்று காரி டேவிஸ் என்பவர் உலகப்போரில் விமானமோட்டியாக இருந்து அதில் நிகழ்ந்த அழிவுகளை எண்ணி தன்னுள் மனம் வெதும்பி அதிலிருந்து வெளியே வந்தார். அப்படி வந்தவர் ஒரே உலகம் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தை முன்நிறுத்த தனியாகவே பாடுபட்டு தனக்கென்னு எந்த நாடும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் போராடி உலகக்குடிமகனுக்கான பாஸ்போர்ட் ஒன்றை பெற்றார். தன்னை அமேரிக்க குடிமகன் என்பதிலிருந்து விடுவித்துக்கொண்டார். 'உலகம் யாவையும்' என்ற கதையில் இவரைப்பற்றி படிக்கலாம்.

இந்த புத்தக்கத்தைப் பற்றி நான் எழுதியிருப்பது விமர்சனம் அல்ல எனில் எனக்கு அந்த தகுதி இல்லை. இது அந்த புத்தக்கத்தில் எனக்கு உண்டான அனுபவம். இதைப்படித்து உங்களை அப்புத்தகம் படிக்க தூண்டினால் அதை என் வெறியாக கருதுவேன்.நன்றி.


இந்த புத்தக்கத்தில் வரும் ஆளுமைகள்.

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி (யானை டாக்டர்) 1923 - 2003

மார்சல் ஏ.நேசமணி (வணங்கான்) 1895 - 1968

தியோடர் ஹோவார்ட் சாமர்வெல் (ஓலைச்சிலுவை) 1890 - 1975

'பூமேடை' எஸ்.ராமைய்யா (கோட்டி) 1924 - 1996

கோமல் சுவாமிநாதன் (பெருவலி) 1935 -1995

காரி டேவிஸ் (உலகம் யாவையும்) 1921- 2013




Tuesday, March 28, 2017

மத்தாப்பு

கொஞ்சமும் சிந்தாமல்

உன்மேல் சிதறிவிழுந்தேன்

ஓர் துளி விடாமல்

வழித்தெடுத்தாய்

போதும் என்பதெல்லாம்

பெயரளவில்

வேண்டும் என்பதே மனதின்

எதிரோலி

முத்தத்தின் முனுமுனுப்புகள்

தொடங்க

மெத்தையும் போர்வையும்

வெட்கமுற்றது. 

Friday, March 24, 2017

கவனக்குறைவு..

கவனக்குறைவு உன்னை கவனித்த பின் வந்தது.

முத்தப்பேரணயில் அணைப்புகளெல்லாம் நிழற்பாதைகள்.

அழகை கூட்டுவதெல்லாம் அசால்ட்டாக செய்வாய்..

உன் சிகையை சரி செய்கிறேன் என்று..

உன்னை கடப்பதெல்லாம் என் கற்பனைகளை மீறிய ஒன்று.

எவ்வுளவு மென்றாலும் விழுங்கமுடியவில்லை உன்னை.. என்னுள் அசைப்போட்டப்படியே..

காற்றாக உள்நுழைந்து கல்லாக நிறுத்தினாய் உன்னை.

என்னை மேம்படுத்தும் உன் உதடுகள்.

வேண்டும் என்பதும் வேண்டும்... வேண்டாம் என்பதும் வேண்டும்...

என் முகமெல்லாம் உன் முத்தப்பருக்கள்.

உன் வண்ணம் குழைத்து வரைய தொடங்கினாய் என்னை.

Wednesday, March 8, 2017

வார்த்தை

மிகவும் கூர்மையான 

எளிதில் வீழ்த்தக்கூடிய 

சட்டென சாய்க்க கூடிய ஒன்று 

வார்த்தை 

பேசிய பின் திரும்ப பெறலாகாது 

சுட்ட பானையை போன்று 

இறுதிவரை இருந்து அப்படியே 

உடையவேண்டியதுதான் 

புறப்பட்ட அம்பு மீண்டும் 

வில்லில் சேராது என்பதை போல் 


மடியும்வரை மங்கிக்கிடக்கும். 

Saturday, February 25, 2017

வன்மம்


அமைதியாக இருக்கும் 

யார் கண்களிலும்படாது

யாரும் அவ்வுளவு எளிதில் அறிய இயலாது

ஆனால், நிச்சயம் அனைவரிடத்திலும் உண்டு

ஏதோ ஓர் பொழுது

ஏதோ ஓர் கணம்

ஏதோ ஓர் நிலை

இருளில் ஒளிந்திருக்கும் 

ஓர் கொடிய மிருகமாக

வெளிவரும் வன்மம் 

எல்லோர் கண்களும் ஓர் துளி

வன்மமேனும் விழுங்கியிருப்போம்

தெரிந்தும், தெரியாமலும்...


Friday, February 24, 2017

கோபம்

கைகளை பற்றி இழுத்தேன்

நீ கவனியாமல் இருந்ததால்

பொய்கோபம் கொண்டு நகர்ந்தேன்

சலனமே இல்லாமல் அருகில் 

அணைப்பதற்கு ஏதுவாக நின்றாய்

பார்க்காமலே பார்த்தேன் 

எவ்வுளவு நேரம்தான் கோபம் இல்லாமல்

கோபிப்பது

முத்தத்தின் வாயிலாக மெத்தையின்

வசத்தில்

உன்னை விலக்குவதுப்போல்

அணைத்துக்கொண்டிருந்தேன்

நீ நீந்தினாய்

நான் நீராடினேன்.

நினைவுத்தடம்

நீ என்மேல் வீசிய
அத்தனை சொற்களையும்

ஒரே அணைப்பில் நீர்த்துப்போக
செய்வாய்

முத்ததிற்கு ஏது
பொழுதும், வேளையும்

நித்தமும் உன் நினைவுகளில் நீந்துவது

கொஞ்சமும் சலனம் இல்லாமல்
நடந்தேறும்

நீ என்னை வீழ்த்தும் போது
நான் உன்னை ஆட்கொண்டிருப்பேன்

மழையென பொழிவாய் என் மேல்
ஓர் துளியில்லாமல் துடைத்தெடுப்பாய்

கனவுகளின் நிஜம் நீ
மறந்தும் மறுக்க மாட்டேன்,
என் நாசி வழியே நீ உட்புகுந்ததை

இடைவிடாது இடைப்பற்றும் போது

இடரிவிடவே செய்கிறேன்.

Wednesday, February 1, 2017

பகல் கனவு

காதல் தின்று காமம் செய்தாய் 

எச்சில் படர்த்தி உச்சி முகர்ந்தாய் 

உடை விலக்கி உன்னை போர்த்தினாய் 

எல்லாமும் உன் விருப்பமாக 

என் விருப்பத்தின் எல்லாமுமாக நீ 

பகல் கனவு நினைவாகி கொண்டிருந்தது 

பகல் எல்லாம் இரவானது 

தூவானம் நின்றும் 

தூறல் நிற்கவில்லை என்பதுபோல் 

எல்லாம் முடிந்த பின்னும் 

உன் வாசம் என்னை 

மீண்டும் மீண்டும் கிளர்ச்சியடைய 

செய்தது...உன் தவறா  அல்லது 

என் ஆசையா ..